Thursday, May 11, 2017

இறந்த மனைவியுடன் 6 நாள்கள் வாழ்ந்த காதல் கணவன்... காரணம்:-அவளுடனான அந்த அன்பு வாழ்க்கையை மறக்க முடியவில்லை!

முகலாய மன்னன் ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜ் நினைவாகத் தாஜ்மஹாலைக் கட்டினார். மும்தாஜின் பிரிவுத்துயரில் இருந்து மீளமுடியாமல் இந்த நினைவுக் கட்டடத்தை எழுப்பினார் ஷாஜகான்.
அந்த அன்புக்கு இணையாக, உயிரிழந்த தனது காதல் மனைவியைப் பிரிய மனமில்லாமல் அவருடைய சடலத்துடன் ஆறு நாட்கள் ஒரே அறையில் வாழ்ந்துள்ளார் ரசல் டேவிசன். அதற்கு அவர் சொல்கிற காரணங்கள் கலங்கவைக்கின்றன.
காதல் தம்பதி...
இங்கிலாந்தைச் சேர்ந்த தம்பதி ரசல் டேவிசன் - வென்டி டேவிசன். அன்பு கலந்த அவர்களுடைய வாழ்க்கைப் பயணத்தில் விதி அவ்வளவு எளிதில் நுழையும் என்று தம்பதி சற்றும் எதிர்பார்க்கவில்லை. வென்டி டேவிசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட அவருக்குக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நோயின் தாக்கம் அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனாலும் தளர்ந்துவிடாத அந்த தம்பதி சிகிச்சை எடுக்க முடிவெடுத்தனர்.
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டும் என்பதால், வென்டியின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மருத்துவர்கள் கையில் ஒப்படைக்க அவர்களுக்கு விருப்பம் இல்லை.
அதன் காரணமாகத் தங்களுக்குத் தெரிந்த சிகிச்சை வழிமுறைகளை வீட்டிலேயே பின்பற்றி வந்தனர். இந்த நிலையில், 2014-ல் ''இன்னும் 6 மாத காலம் மட்டுமே வென்டி உயிருடன் இருப்பார்'' என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்ட அந்தத் தம்பதி இருக்கிற நாள்களை அணுஅணுவாக அனுபவிக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். வென்டிக்குப் போராட்டக் களமாக இருந்தாலும் ரசல் டேவிசனின் அன்பும், அரவணைப்பும் மிகுந்த தெம்பையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. அதனால், மருத்துவர்கள் கொடுத்த கெடு காலத்தைக் கடந்து வாழ்ந்துவந்தார் வென்டி.
அன்பும் அரவணைப்புமே மருந்து...
அவருடைய அந்த மகிழ்ச்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. புற்றுநோயின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. அதனால், வலியால் துடித்தார் வென்டி. அதைக் கண்டு கலங்கிய ரசல், வென்டியை மருத்துவமனையில் அனுமதிக்க முடிவெடுத்தார்.
ஆனால், அதை ஏற்காத வென்டி தனது கடைசிக்காலத்தைத் தம்பதியாக வலம்வந்த வீட்டிலேயே கழிக்க வேண்டும் என்று விரும்பினார். அதன் காரணமாகச் சுற்றுப்பயணத்தை நிறுத்திவிட்டு வீடு திரும்பினர் தம்பதி. பின்னர் வென்டிக்கு வலி அதிகரித்ததால் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார் ரசல்.
காதல் மனைவி
புற்றுநோயாளிகளுக்குக் கடைசிக்காலத்தில் கொடுக்கப்படும் ஆறுதல் சிகிச்சையை மருத்துவர்கள் அளித்தனர். மருத்துவர்களின் மருந்தால் மட்டுமல்ல, ரசலின் அன்பு மருந்தாலும் விடைபெற்றுக் கொண்டிருந்தார் வென்டி.
மருத்துவமனையில் உயிரைவிட மனமில்லாத வென்டியின் நிலையை உணர்ந்து தங்களுடைய சொந்த வீட்டுக்குக் காதல் மனைவியை அழைத்துவந்தார் ரசல்.
இதனைத் தொடர்ந்து வென்டி டெவிசன் உயிரிழந்தார். இறந்துபோன காதல் மனைவியைப் பிரிய மனமில்லாமல் ஆறு நாட்கள் மனைவியின் உடலுடனேயே இருந்துள்ளார் ரசல் டேவிசன்.
''இதயத்தைச் சிதறடித்துவிட்டது!''
ரசல் டேவிசனின் இந்த நடவடிக்கை நீதிமன்றத்துக்குத் தெரியவர நீதிமன்றமும் அவருடைய மனைவியை வைத்துக்கொள்வதற்கு உரிமை உள்ளது என்று உறுதிபடுத்தியுள்ளது. இதுதொடர்பாகப் பேசிய ரசல் டேவிசன், "வென்டியின் பிரிவுத் துயர் இதயத்தைச் சிதறடித்துவிட்டது.அவளுடனான அந்த அன்பு வாழ்க்கையை மறக்க முடியவில்லை.
அதன் காரணமாக என்னுடைய வீட்டிலேயே அவளை வைத்திருந்தேன்.அவளை அடக்கம் செய்யவோ அல்லது பிணவறையில் வைக்கவோ மனமில்லை. அதனால் அவளுடைய அறையில் வைத்திருந்தேன். அவள் உடல் இருந்த அறையிலேயே நானும் இருந்தேன்" என்றார்.
-விகடன்-

No comments:

Post a Comment