Monday, April 10, 2017

உண்மையில், இந்தியா வலிமையான நாடா...?

எண்ணிக்கை அடிப்படையில் மிகப்பெரிய ராணுவப் பட்டியலில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம். ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் டாப் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பல்லாயிரம் கோடி ரூபாயை ராணுவத்தை நவீனப்படுத்தச் செலவிடுகிறோம். உண்மையில், இந்தியா வலிமையான நாடா... இந்திய ஆயுதங்கள் நம்பகத்தன்மைமிக்கதா என்றால் சந்தேகமே.
இன்றைய நிலையில் இந்தியாவுக்குச் சாதாரணத் துப்பாக்கிச்சூடு முதல் அணுஆயுதம் வரையிலான தாக்குதல் அபாயம் உள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் அதேபோல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எல்லை பிரச்னை உள்ளது. இந்தியா மீதான எல்லை தாண்டிய தீவிரவாதம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. வட கிழக்குப் பகுதியில் ஊடுருவல் பாதிப்பு உள்ளது. பாகிஸ்தானும் சீனாவும் ராணுவம் உள்படப் பல்வேறு விவகாரங்களில் இணைந்து செயல்படுகின்றன. இதனால், இந்தியாவின் இரு எல்லைப் பகுதிகளிலும் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடப்பதற்கான சூழல் நிலவுகிறது. இதை எதிர்கொள்ள, தரை, கடல், ஆகாயம் என அனைத்து மார்க்கத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இதற்கு, ராணுவத்தை நவீனப்படுத்தும் வகையில் இந்திய அரசுக் கொள்கைகள் இருப்பது அவசியமாகிறது என்கின்றனர் போர் வியூக கணிப்பாளர்கள்.
இத்தனை ஆண்டுகள் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கிக் குவித்த ராணுவத் தளவாடங்கள் எந்த அளவுக்குச் செயல்திறன் மிக்கவை என்று சந்தேகம் எழலாம். இதற்குச் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு மத்திய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் சுபாஷ் பாம்ரே அளித்த பதிலே விளக்கம் அளிக்கும். "2011ல் இருந்து தற்போதுவரை 48 போர் விமானங்கள் மற்றும் 21 ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கியுள்ளன. இந்த விபத்துகளில் மட்டும் 79 ராணுவ வீரர்களை நாம் இழந்திருக்கிறோம்" என்று கூறியுள்ளார், அவர். இதுதவிர, கடந்த 10 ஆண்டுகளில் போர்க் கப்பல்களில் 62 விபத்துகள் நடந்துள்ளன. இதுதொடர்பாக 177 கடற்படை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துகளில் முக்கியமானது சிந்துரக்‌ஷக் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து. இதில், மாலுமி உள்பட 18 பேர் உயிரிழந்தனர். இதுதவிர, கடந்த இரண்டு ஆண்டுகளில், ஒரு விமானந்தாங்கி கப்பல் உள்பட 11 கப்பல்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இப்படி, நாம் இழக்கும் விமானங்கள், கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
தேவைக்கு ஏற்ப நம்முடைய ராணுவத்தை வலிமைபடுத்துகின்றோமா என்றால் இல்லை. இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் முயற்சி ஆமை வேகத்தில் நடக்கிறது. இதற்காகப் போர் ஏற்பட்டால் இந்தியா வெற்றிபெறாது என்று அர்த்தம் இல்லை. ஆனால், தற்போதையச் சூழலுக்கு ஏற்ப நம்முடைய ராணுவம் பலம் வாய்ந்ததாக இல்லை. ராணுவத்தை நவீனப்படுத்த வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். இந்தியக் கடற்படையும் விமானப்படையும் 2027-ம் ஆண்டுக்குள் தங்களுயை வலிமையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன.
2027-ம் ஆண்டுக்குள் 212 போர்க் கப்பல்கள், 458 போர் விமானங்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது உள்ளதோ, 138 போர்க் கப்பல்களும் 235 போர் விமானங்களுமே. தற்போது உள்ளவற்றுக்கும், தேவைக்குமான இடைவெளி மிகமிக அதிகம். தற்போதைய நிதி ஒதுக்கீட்டின்படி, 2027-க்குள் இலக்கை அடைய முடியுமா என்பது மிகப்பெரிய சவால்தான்.
கடந்த பட்ஜெட்டில் ராணுவத்தை நவீனப்படுத்த அதிக நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நவீனமயமாக்கலுக்குக் கேட்டதில் தரைப்படைக்கு 60 சதவிகிதமும், கடற்படைக்கு 67 சதவிகிதமும், விமானப்படைக்கு 54 சதவிகிதமும் மட்டுமே கிடைத்துள்ளது. இதை வைத்துக்கொண்டு ராணுவத்தை எப்படி நவீனப்படுத்துவது என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்தியாவின் தற்போதைய பாதுகாப்புத் துறையின் நிலை பற்றிப் பேசினால், 'பாதுகாப்புத் துறைக்கு இவ்வளவு நிதி ஒதுக்கீடு தேவையா' என்பதில் ஆரம்பித்து, 'ஏன் அதிகம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என்பதுவரை மிகப்பெரிய விவாதமாகச் சென்றுகொண்டே இருக்கும். ஆனால், இந்தப் பிராந்தியத்தில் இந்தியா பலம்வாய்ந்ததாக இருப்பதன் மூலமே, அண்டைநாடுகள் நம்மீது போர் தொடுக்க அஞ்சும். ஆனால், தாமதத்துக்கு இந்தியாவின் முடிவெடுக்கும் விஷயத்தில் உள்ள தாமதமே காரணம். கீழ்மட்டத்தில் தொடங்கிப் பிரதமர் அலுவலகம்வரை கோப்புகள் சென்று முடிவெடுக்கக் காலதாமதம் ஆகிறது. இதற்குள்ளாக, வாங்கத் திட்டமிட்ட ஆயுதத்தின் விலையும் அதிகரித்துவிடுகிறது. புதிய ஆயுதங்களும் வந்துவிடுகின்றன.
இதைத் தவிர்க்க, ராணுவம் தொடர்பான முடிவுகளை உடனடியாக எடுக்கும் வகையில் இந்திய ஆட்சி அதிகார அமைப்பை மாற்றி அமைக்க வேண்டும். அதேநேரத்தில், இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, ராணுவக் கருவிகள் உற்பத்தியில் சுயசார்பும் அடைய வேண்டும். ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கும்போது, பொது மக்கள் மத்தியில் அதிருப்தி எழுவது இயல்புதான். இதைப்போக்க, ராணுவத் துறைக்கும் மக்களுக்குமான இடைவெளியைக் குறைக்க வேண்டும். இவை அனைத்தையும் விரைந்து செய்வதன் மூலம், ஆசியாவின் மிகப்பெரிய வலிமைமிக்க நாடாக இந்தியா இருக்கும்.
- Vikatan

No comments:

Post a Comment