தொலைக்காட்சி!!

Friday, February 24, 2017

ஆண்மை சோதனை வைக்கிறார் கனேடிய யாழ். யுவதி!

ஒரு பெண் நிர்வாணமாக வீதியில் நடந்து செல்கின்றார் என்று வைத்து கொள்வோம், இதற்காக இவரை தொடுகின்ற உரிமை யாருக்கும் கிடையாது என்று பெண்ணியம் பேசுகின்றார் கனடாவில் மொன்றியலில் வாழ்கின்ற ஈழ தமிழ் யுவதி சுபிதா.
இவர்கள் தாயகத்தில் சாவகச்சேரியை சேர்ந்தவர்கள். சொந்த மண்ணை விட்டு ஒருபோதும் நீங்க கூடாது என்று விரும்பியபோதும் போர் சூழலின் நிர்ப்பந்தத்தால் 1995 ஆம் ஆண்டு அகதிகளாக ஜேர்மனுக்கு சென்றனர்.
இவருக்கு பெண்ணிய செயற்பாடு மீதான ஈடுபாடும், பேரார்வமும் அம்மாவிடம் இருந்தே கிடைத்தன. ஜேர்மனியில் இவரின் அம்மா அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்றதுடன் இவற்றில் இவரையும் பங்கேற்க வைத்து உள்ளார். இவர் அம்மா மூலமாக தமிழர் போராட்டத்தின் நியாயங்களை உணர்த்தி வளர்க்கப்பட்டார்.
இவருடைய உயர்நிலை பள்ளியில் சிறந்த விளையாட்டு வீராங்கனையாக விளங்கி உள்ளார். பாடசாலையின் பட்மின்ரன், கால் பந்தாட்டம், கூடை பந்தாட்ட அணிகளில் இடம்பிடித்து இருந்தார். அத்துடன் நீச்சல் அணியிலும் உள்வாங்கப்பட்டு இருந்தார்.
இவருடைய ஆண் நண்பர்கள் அவர்களுடைய ஹோர்மோன்கள் வெளியேற தொடங்கிற வரை இவரையும் ஆணாகவே நடத்தி இருந்தனர்.
ஆனால் அதற்கு பிற்பாடு இவரை பெண்ணாகவே பார்க்க தொடங்கினர். இதனால் இவர் உண்மையிலேயே ஏமாற்றம் அடைந்தார்.
பாடசாலைக்கு சென்ற நாளில் இருந்து இவர்களின் நண்பர்களாக விளங்கினார்.
ஆனால் இவர் ஒரு பெண் என்றும் இதனால் கவர்ந்து இழுக்கப்படுகின்றனர் என்றும் ஹோர்மோன் வெளியேற தொடங்கிய பிற்பாடு சொல்லி விட்டனர்.
ஆணாதிக்கம் தொடர்பாக இவருக்கு சின்ன வயதிலேயே விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கின்றது. ஒரு தமிழ் சிறுமி என்பதால் சில காரியங்களை செய்யவே கூடாது, இப்படித்தான் நடக்க வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றார். ஆயினும் இவரால் இவற்றை ஏற்று கொள்ள முடியவில்லை. பையன்கள் ஓடி விளையாடி உடலை ஊத்தையாக்க முடியும் என்றால் ஏன் இவர் பொம்மை போல அமர்ந்து இருக்க சிரிக்க வேண்டும்? என்று கேட்கின்றார். இவரையும் கால் பந்தாட்டத்தில் சேர்த்து கொள்ளும்படி உறவுக்கார பையன்களிடம் கெஞ்சி இருக்கின்றார். இவருக்கு ஷொப்பிங்கிலோ, பார்பி பொம்மையிலோ ஈடுபாடு இருக்கவில்லை.
அம்மா மகாபாரதம், இராமாயணம் ஆகியவற்றை படிப்பதை இவர் சின்ன வயதிலேயே பார்த்தார். ஆயினும் அந்த சின்ன வயதிலேயே இராமாயணம் இவருக்கு பிடிக்கவில்லை. ஏனென்றால் எந்தவொரு பிழை செய்யாதபோதிலும் சீதை கடத்தப்படுகின்றார்… சீதையை இராமன் மீட்கின்றார்…. பிறகு ஒரு கட்டத்தில் சீதையை துரத்துகின்றார். சீதையின் கற்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டதால்தான் இது நடந்தது என்று அம்மா சொல்லி இருக்கின்றார். ஒரு ஆணுக்கு கற்பை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக ஒரு பெண் நெருப்பில் குதித்து உடலை எரிப்பதை நாம் எல்லோரும் ஏன் சரி என்று நினைக்கின்றோம்? என கேட்கின்றார் சுபிதா. சீதையை திரும்ப அடைந்ததே இராமனுக்கு போதுமானது என்கின்றார். கதையின்படி ஆணின் தேவைகளை நிறைவேற்றவே சீதை பிறந்து வளர்ந்து இருக்கின்றார் என்று கூறுகின்றார்.
சமுதாயம் கன்னித் தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது, ஆனால் ஒரு ஆணின் அல்லது அவனுடைய குடும்பத்தின் கௌரவம் என்பது ஒரு பெண்ணின் பெண்ணுறுப்பில் இல்லை, அவனுடைய வீட்டில் உள்ள பெண்களில் எத்தனை பேர் பணிந்து நடக்கின்றனர் என்பதிலும் இல்லை, ஒரு பெண் நிர்வாணமாக வீதியில் நடந்து செல்கின்றார் என்று வைத்து கொள்வோம், இதற்காக இவரை தொடுகின்ற உரிமை யாருக்கும் கிடையாது, ஆண்கள் கொண்டிருக்கின்ற சுதந்திரத்தை பெண் ஒருவர் அனுபவிக்க கூடாது என்று சொல்ல வருகின்றபோது கற்பழிக்கப்பட நேரும் என்கிற ஒரு காரணத்தை வயதானவர்கள் கூறுகின்றனர்,
பெண்ணை பாதிக்கப்படுபவராக காட்டுகின்றனர், நாங்கள் பாதிக்கப்படுபவர்கள் அல்லர் மாறாக தப்பி பிழைப்பவர்கள், அவள் நேரம் பிந்தி வந்ததால் அல்லது குட்டை பாவாடை அணிந்து வந்ததால் தாக்கப்பட்டாள் என்றெல்லாம் சமுதாயம் காரணம் சொல்கின்றது, ஆண்களின் கற்பழிப்பு நடவடிக்கையை இவ்விதம் காரணம் சொல்லி நியாயப்படுத்தவோ, மன்னிக்கவோ செய்கின்றனர் என்று தெரிவித்தார்.
தமிழ் பெண்ணாக இரு யுத்தங்களை செய்ய வேண்டி உள்ளது என்று இவர் உணர்கின்றார். ஒன்று தமிழர் உரிமைக்கானது. மற்றது பால்நிலை சமத்துவத்துக்கானது. ஈழ தமிழர்களின் உரிமை, சுதந்திரம் ஆகியவற்றுக்காக எமது சமுதாயம் போராட முடியும் என்றால் பெண்களை பாரபட்சமாக நடத்துவதை எப்படி சரியென இவர்கள் நினைக்கின்றார்கள்? என்று கேட்கின்றார்.
பெண்களை பாரபட்சமாக நடத்துவது ஒட்டுமொத்த மனித குலத்துக்கே பாரிய பின்னடைவு என்கின்றார்.
ஆணாக இருப்பதால் ஒருவருக்கு ஏன் விசேட சலுகை வழங்கப்பட வேண்டும்? என்று வினவுகின்றார்.
இவருக்கு கிடைக்க வேண்டியதையும், இவர் செய்ய வேண்டியதையும் இவருடைய பால்நிலைதான் தீர்மானிக்கும் என்பதை ஒருபோதும் ஏற்கவே மாட்டார் என்று அடித்து சொல்கின்றார்.
பெண்கள் வலுவூட்டப்பட்டு வருகின்ற நிலையில் பல போர்களை நடத்த வேண்டி உள்ளது, பல தடைகளை தாண்ட வேண்டி உள்ளது, இவை பெண்களை பலம் அடைய வைக்கின்றன என்பது இவரின் கருத்து.
ஆண்கள் பெண்களை மதித்து சமமாக நடத்த வேண்டும், இது காலத்தின் கட்டாயம் ஆகும், இதற்கு கீழ் எந்தவொரு தீர்வையும் ஏற்க முடியாது என்று முழங்கினார்


No comments:

Post a Comment