Tuesday, February 21, 2017

சாக்கடையில் கலந்த ஜெயலலிதா இரத்தம்! - இரகசியத்தை உடைக்கும் மருத்துவர்கள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து தீவிர தேடுதலில் இறங்கினோம். அவரது மரணம் நேர்மையாக அமையவில்லை என்பதை ஆய்வின் முடிவில் கண்டறிந்தோம்.
கவலை தோய்ந்த முகத்துடன் நம்மிடம் பேசினார் கோவையைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ். இவரும் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தியும், ' தமிழக முதல்வரும் கேள்விக்குள்ளாக்கப்பட்ட அவரது உடல்நிலையும்' என்ற தலைப்பில் ஆய்வை நடத்தி முடித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதியன்று இரவு 11.30 மணிக்கு மாரடைப்பால் (Cardiac Arrest) சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்' என்று அந்த மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
அவரது மரணம் நிகழ்ந்து 60 நாட்களுக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தனர் டாக்டர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவக் குழுவினர். அந்த நிகழ்வில் பேசிய மருத்துவர் ரிச்சர்ட் பீலே, ' முதல்வருக்கு வீட்டில் மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டபோது அவரது மூச்சுத்திணறல் மேலும் அதிகமாகியது. அப்போலோ மருத்துவ மனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவரது மூச்சு மண்டலம் திடீரென்று செயலிழந்துபோனதுதான் (Acute Respiratory Failure) அவருக்கு ஏற்பட்டுள்ள மூச்சுத் திணறலுக்கான காரணம் என்ற முதல்கட்ட முடிவுக்கு வந்தனர்.
திடீரென்று அவரது மூச்சு மண்டலம் ஏன் செயலிழந்து போக வேண்டும்' என்ற கேள்விக்கான பதிலை அவர்கள் தேடுகையில், 'கிருமித் தொற்றுதான் (Infection) அதற்கான காரணம்' என்ற முடிவை எட்டினர். 'இந்தக் கிருமித் தொற்றானது சிறுநீரகம் அல்லது நுரையீரலில் துவங்கியிருக்கலாம்' என்று கருதினர்.
இதனை உறுதி செய்வதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டபோது அவரது இரத்தத்திலேயே பாக்டீரியா கிருமித் தொற்று இருப்பதை அறிய முடிந்தது. இந்தக் கிருமிகள் அவரது இருதயத்தின் உள் அடுக்கில் குடிகொண்டு Endocarditis (இருதய உள்ளடுக்கு அழற்சி) என்ற பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன' என்பதையும் அறிந்து கொள்ள முடிந்தது.
மேலும், இந்தக் கிருமித் தொற்றானது உடலின் நோய் எதிர்ப்புக் கட்டமைப்புகளையும் முடுக்கி விட்டிருந்தது; அவை நோயை எதிர்த்ததோடு நிற்காமல் அவரது உடல் உறுப்புக்கள் பலவற்றையும் தாக்கத் தொடங்கியிருந்தன என்பதை அறிந்து கொண்டனர். இந்த செயல்பாடே செப்சிஸ்(Sepsis) என்று அழைக்கப்படுகிறது.
இதுவே முதல்வரின் மூச்சு மண்டலத்தைத் தாக்கியிருப்பதையும் அதன் விளைவாகவே அந்த மண்டலம் திடீரென்று செயலிழந்து போயிருப்பதையும் அவர்கள் அறிந்து கொண்டனர். இதன் காரணமாக அவருக்குக் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டிருந்தது.
கூடுதலாக, முதல்வருக்கு இருந்த பிற நோய்களான உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவையும் இந்தப் பிரச்னைகளை சிக்கலாக்கின' என்றார். “அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு முதல்வர் கொண்டுவரப்பட்ட போது அவர் அரைத் தூக்க நிலையில்(drowsy) இருந்தார்.
முதல் ஆறு நாட்களுக்கு மாஸ்க் மூலம் பிராண வாயுவைக் கொடுத்தோம். அதன்பிறகும் அவரது மூச்சுத் திணறல் குறையவில்லை; எனவே, அவரது மூச்சுக் குழாய்க்குள் செயற்கை மூச்சுக் குழாய் நுழைக்கப்பட்டு(intubate) செயற்கை சுவாசக் கருவியுடன் (ventilator) இணைக்கப்படவேண்டி வந்தது.
இதன் பிறகும் கூட அவரது மூச்சுத் திணறல் குறையவில்லை. செயற்கை மூச்சுக்குழாய் நுழைக்கப்பட்டதற்கு 10 நாட்களுக்குப் பிறகு அவரது மூச்சுக் குழாயிலேயே துளைபோட்டு (Tracheostomy) செயற்கை சுவாசக் கருவியுடன் இணைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது”- இது மருத்துவர் பாபு ஆப்ரஹாமின் கூற்று.
முதல்வர் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்தபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கட்டுபடுத்தப்படாத சர்க்கரை நோய் மற்றும் சிறுநீர்த் தொற்று இருந்ததை அறிந்து கொண்டோம்”-இது டாக்டர். பாலாஜியின் வாதம்.
இவர்கள் மூன்றுபேரும் கூறிய தகவல்கள் தமிழகப் பத்திரிகைகளில் செப்டம்பர் 24-ம் தேதி தொடங்கி 30-ம் தேதிக்குள் வெளிவந்த பெரும்பாலான தகவல்களோடு ஒத்துப்போகின்றன என்பதை நாம் இங்கு கூறியே ஆக வேண்டும்.
இதே பத்திரிகைகளில், 'முதல்வர் அப்போலோவில் அனுமதிக்கப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பாகவே காய்ச்சலால் அவதியுற்றார்' என்ற செய்திகள் உள்ளன.
செப்டம்பர் 21-ம் தேதியன்று அவரால் திறக்கப்படவிருந்த 107 அம்மா உணவகங்களுக்கான திறப்புவிழா நிகழ்ச்சி காரணம் ஏதுமின்றி ரத்து செய்யப்பட்டது என்பதும், அதேநாளில் மத்திய அமைச்சர்கள் கலந்துகொண்ட மெட்ரோ ரயில் துவக்கவிழா நிகழ்ச்சியில் மிகவும் சிரமப்பட்டே அவர் கலந்து கொண்டார் என்பதும் அவருக்கு இருந்து வந்த உடல் நலப்பிரச்னைகளால்கூட இருந்திருக்கக் கூடும் என்றே கருதத் தோன்றுகிறது.
அவருக்கு ஏற்கெனவே இருந்து வந்த பிரச்னைகளைத் திறம்பட கையாளாமல், தாமதமாக மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றதே அனைத்துக் குளறுபடிகளுக்கும் காரணம்' என்ற வாதத்தை மேம்போக்காகக் கடந்துசென்றுவிட முடியாது" என ஆதங்கத்தோடு பேசத் தொடங்கினார் மருத்துவர் புகழேந்தி. தொடர்ந்து ஆய்வு முடிவுகளை நம்மிடம் பட்டியலிட்டார்.
புகழேந்தி தனியார் தொலைக்காட்சியின் நெறியாளர் ஒருவர், சசிகலாவிடம் 2017 பிப்ரவரி 8-ம் தேதியன்று நடத்திய நேர்காணல் நிகழ்ச்சியில், ' மருத்துவமனைக்கு முதல்வரைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டதா' என்ற கேள்வியை எழுப்பினார்.
அதற்கு, “தாமதமின்றி, உடனடியாகக் கொண்டுவந்துவிட்டீர்கள். அதனால் பிரச்னை இல்லை என்று அப்போலோ மருத்துவர்கள் 23-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு என்னிடம் கூறினார்கள்” என்ற பதிலை சசிகலா அளித்துள்ளார்.
ஆனால், முதல்வரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அதனால் ஏற்பட வாய்ப்புள்ள விளைவுகள் குறித்து செய்தியாளர் சந்திப்பின்போது பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது,
முன்கூட்டியே முதல்வரைக் கொண்டுவந்திருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்க முடியுமா என்பது அனுமானம் தொடர்பான கேள்வி; என்னால் அதற்கு பதிலளிக்க முடியாது; மேலும் எமது பணி முதல்வர் மருத்துவமனைக்கு வந்த பிறகே என்பதால், அதுகுறித்த கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்க முடியும்” என்றும் டாக்டர். பாபு ஆப்ரஹாம் பதிலளித்தார்.
ஆனால், நோயாளியை மருத்துவர் ஒருவர் புதிதாகப் பரிசோதனை செய்யும்போது அந்த நோயாளியின் மருத்துவ மற்றும் உடல்நலம் குறித்த வரலாறு அனைத்தையும் மருத்துவர் சேகரித்தாக வேண்டும் என்பதும் இந்தத் தகவல்கள் அந்த நோயாளியின் சிகிச்சைக்கு இன்றியமையாதவை என்பதும் பாபு ஆப்ரஹாம் அறியாததல்ல.
அப்போலோ மருத்துவமனையில் உலகத்தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்றும் முதல்வருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை ஒரு திறந்த புத்தகம் என்றும் அந்த மருத்துவமனை நிர்வாகமே கூறி வருகிறது. அப்படி இருக்கும்போது டாக்டர்.பாபு ஆப்ரஹாமோ அவரைச் சார்ந்தவர்களோ மேற்கூறிய தகவல்களை பொதுவெளியில் வைக்க ஏன் தயங்க வேண்டும்?
செய்தியாளர் சந்திப்பில் மருத்துவர்கள் முன்வைத்த தகவல்களில் பெரும்பாலான தகவல்களை, பல்வேறு நாட்களில் அப்போலோ மருத்துவமனையால் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்புகளில் காணமுடியவில்லை.
அரைத் தூக்க நிலை, மூச்சுத் திணறல், மூச்சு மண்டல செயலிழப்பு, கிருமித் தொற்று, கிருமித் தொற்றால் தூண்டப்படும் உடலின் எதிர்வினைகளால் ஏற்படும் விளைவு (Sepsis), கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பாதிப்பு, இருதய உள் அடுக்கு அழற்சி (Endocarditis), எளிய பிராண வாயு சிகிச்சை, கிருமிகளைக் கண்டறியத் தேவையான பரிசோதனைகள் -ஆகியவையே செப்டம்பர் 22-29-ம் தேதிவரை நடந்த நிகழ்வுகள் என்று 2017 பிப்ரவரி 6 அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட டாக்டர் பீலே மற்றும் பாபு ஆப்ரஹாம், பாலாஜி ஆகியோர் கூறினர்.
இந்தக் காலகட்டத்தை முதல் காலகட்டம் என்று அழைப்போம். ஆனால் அப்போலோ மருத்துவமனையால் இந்த முதல் காலகட்டத்தின்போது (செப்டம்பர் 22-29) முன்வைக்கப்பட்ட செய்திக்குறிப்புகளில் இவை எதுவும் இடம் பெறவில்லை.
மாறாக. 'காய்ச்சல்; நீர்ச்சத்துக் குறைவு; பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; சிகிச்சையால் உடல் நலம் நன்றாக முன்னேறிக்கொண்டிருக்கிறது; வழக்கமான உணவை உட்கொள்ளத் தொடங்கியுள்ளார்' என்ற குறிப்புகளையே காணமுடிகிறது.
முதலாம் காலகட்டத்தின்போது, 'முதல்வருக்கு காய்ச்சல் குறைந்தது என்றும், ஆனால் அவரது மூச்சுத் திணறல் கூடுதலாகிப் போனது என்றும், அதனால் எளிய முறையில் அளிக்கப்பட்டுவந்த பிராண வாயுவிற்குப் பதிலாக, மூச்சுக்குழாய்க்குள் செயற்கை மூச்சுக்குழாயை நுழைத்து அதனை செயற்கை சுவாசக் கருவியுடன் இணைக்க வேண்டி வந்தது' என்று செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அப்போலோ அறிக்கைகளோ இந்த முதலாம் காலகட்டத்தின்போது முதல்வரின் உடல்நலம் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தது என்றே அறிவித்தது. 2016 செப்டம்பர் 30-ல் இருந்து அக்டோபர் 7-ம் தேதிவரை உள்ள காலகட்டத்தை இரண்டாம் கால கட்டமாகக் கொள்ளலாம்.
முதல்வரது மூச்சுக்குழாய்க்குள் செயற்கை மூச்சுக்குழாயை நுழைத்து அதனை செயற்கை சுவாசக் கருவியுடன் இணைத்ததில் இருந்து (endotracheal intubation) மூச்சுக் குழாயில் துளையிட்டு (Tracheostomy) அதனை செயற்கை சுவாசக் கருவியுடன் இணைக்கும் செயல்பாடு வரை உள்ள காலகட்டமே இது.
இந்த இரண்டாம் காலகட்டத்தின்போது -அதாவது அக்டோபர் 2,3,4 மற்றும் 6-ம் தேதியன்று அப்போலோ மருத்துவமனையால் வெளியிடப்பட்ட அறிக்கைகளில்-'முதல்வரது உடல்நிலை தொடர்ச்சியாக முன்னேற்றம் அடைந்து வருவதாகவே' கூறப்பட்டது.
ஆனால் முதல்வருக்கு சிகிச்சை செய்த மருத்துவர்கள் பிப்ரவரி 6-ம் தேதியன்று இந்த காலகட்டத்தைப் பற்றிக் கூறும்போது, 'முதல்வரின் மூச்சுத் திணறல் வெகுவேகமாக மோசமடைந்து கொண்டிருந்தது' என்றனர்; இதன் காரணமே, செப்டம்பர் 29-ம் தேதியன்று செயற்கை மூச்சுக் குழாயை அவரது மூச்சுக் குழாய்க்குள் நுழைத்தும் பின்னர் அது எதிர்பார்த்த பலனைத் தராத காரணத்தால் அக்டோபர் 7-ம் தேதியன்று அவரது மூச்சுக்குழாய் துவாரமிடப்பட்டது என்றும் கூறினர்.
முதல்வரின் மூச்சுக் குழாய் துளையிடப்பட்ட நாளுக்கு அடுத்த நாளான அக்டோபர் 8-ம் தேதியில் இருந்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நாளான டிசம்பர் 4-ம் தேதிவரை உள்ள காலகட்டத்தினை மூன்றாம் காலகட்டம் என்று கொள்ளலாம். இந்தக் காலகட்டத்தின்போது இரு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் பெரிதளவில் மாறுபடவில்லை.
அப்போலோ அறிக்கைகளின்படியும் பிப்ரவரி 6-ம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மருத்துவர்களின் விளக்கத்தின்படியும் ' அக்டோபர் மாத இறுதியில் இருந்தே முதல்வரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. என்றாலும் கூட, டிசம்பர் 4-ம் தேதி மாலை சுமார் 4.30 மணி அளவில் அவரது இருதயம் திடீரென செயலற்றுப்போய், துடிப்பதை நிறுத்திக் கொண்டு விட்டது' என்றும் அவர்கள் கூறினர்.
நின்றுபோன இருதயத்தை மீண்டும் செயல்பட வைக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் முதல்வருக்கு ஏற்கெனவே இருந்து வந்த நோய்கள் காரணமாகவே (அவை என்ன என்பதை அந்த அறிக்கை தெரிவிக்கவில்லை) தோல்வியில் முடிந்தன என்று அப்போலோ நிர்வாகத்தின் டிசம்பர் 5-ம் தேதிக்கான அறிக்கை கூறியது.
இதுவரை நன்றாக இருந்து வந்த முதல்வரின் இருதயம் திடீரென்று செயலிழந்து நின்றுபோனதற்கான (Cardiac Arrest) காரணம் தங்களுக்குத் தெரியாது என்று மருத்துவர் பீலேயும், பாபு ஆப்ரஹாமும் அடித்துக் கூறினார்கள். '
முதல்வரின் வயது, அவரது இருதயத்தைப் பாதித்திருந்த கிருமித் தொற்று, கிருமித் தொற்றினால் ஏற்பட்ட உடலின் எதிர் விளைவுகள், அவரைப் பல ஆண்டுகள் பாதித்திருந்த சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்த நோய்கள் ஆகியவற்றால் ஒருவேளை இது நிகழ்ந்திருக்கலாம் என்றாலும் உறுதியாகக் கூற இயலாது' என்று டாக்டர் பீலே கூறினார்.'
முதல்வரின் இருதயம் செயலிழந்து நின்ற பிறகு அதனை மீண்டும் இயங்கச் செய்யும் நடவடிக்கைகள் (Cardio Pulmonary Resuscitation-CPR) உடனடியாக எடுக்கப்பட்டது' என்று பாபு ஆப்ரஹாம் கூறினார்.
இந்த நடவடிக்கை 20 நிமிடம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இறுதியில் அதனால் பலனில்லை (Refractory Cardiac Arrest - CPR நடவடிக்கைக்கு 15 நிமிடங்களுக்கு மேலும் இருதயம் செயல்படாது நிற்கும் நிலை) என்று அறிந்த உடனேயே, முதல்வர் இருந்த அறையிலேயே தயாராக வைக்கப்பட்டிருந்த ( உடம்பிற்கு வெளியில் நுரையீரலாக செயல்பட்டு உடல் உறுப்புகளுக்குத் தேவையான பிராண வாயுவினை அளிக்கும்) ECMO (Extra Corporeal Membrane Oxygenation) கருவியுடன் முதல்வரின் இரத்த நாளங்கள் இணைக்கப்பட்டன' என்றார்;
அடுத்த 24 மணி நேரம் அந்தக் கருவி இயக்கப்பட்ட பிறகும்கூட முதல்வரின் இருதயத்தால் மீண்டும் இயங்க முடியவில்லை என்பதால் வேறு வழியின்றி அவரை மீட்க விளையும் மருத்துவ நடவடிக்கைகளை நாங்கள் நிறுத்திக் கொண்டோம்' என்று கூறினார்.
இந்த நடவடிக்கையை சந்தேகத்துக்கு இடமின்றி விளங்கிக் கொள்ள மேலும் சில தகவல்களை அவர் அளித்திருக்க வேண்டும். 'இருதயம் செயலிழந்து போயுள்ளது' என்பதை அறிந்த உடன் அடுத்த 20 நிமிடங்களுக்கு CPR நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நின்றுபோன இருதயத்தை மீண்டும் துடிக்கச்செய்வதே CPR நடவடிக்கையின் நோக்கமாகும். 8-10 நிமிடங்களுக்கு மேல் மூளைக்குச் செல்லும் பிராண வாயுவானது தடைபட்டால் மூளைச் சாவு ஏற்படும். இந்த நிலையில் 20 நிமிடங்களுக்கு CPR நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து முதல்வர் எக்மோ கருவியில் இணைக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. முதல்வரை எக்மோ கருவியில் இணைக்க எவ்வளவு நேரம் எடுத்தது. இரத்த நாளங்களுக்குள் எக்மோ குழாய்களைப் பொருத்த ஆகும் சராசரி நேரமே 32 நிமிடங்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.
அப்படியென்றால், எக்மோ கருவி எப்போதிருந்து இயங்கத் தொடங்கியது, இடைப்பட்ட நேரத்தில் முதல்வர் அவர்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்பது மிக முக்கியமான கேள்விகள்.
முதல்வரை (எக்மோ கருவியுடன் சேர்த்து?) அன்று இரவு 9.30 மணிக்கு அறுவை சிகிச்சை அறைக்குக் கொண்டு சென்றார்கள்' என்று செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர்.பாலாஜி கூறியிருக்கிறார். எதற்காக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பாபு ஆப்ரஹாம் பதில் கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
75 நாட்கள் போடப்பட்ட அனைத்து முயற்சிகளும் ஒரு வினாடியில் வீணாகிப் போயின. இதுபோன்ற நிகழ்வு இன்னொருமுறை நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்' என்ற கேள்வியை அப்போலோ நிர்வாகமோ, மதிப்பிற்குரிய இந்த மருத்துவர்களோ எழுப்ப மறந்து விட்டனர்.
தீவிர சிகிச்சையில் உலக அளவில் புகழைப் பெற்ற மருத்துவர் பீலே அவர்களே இந்தக் கேள்வியை எழுப்ப மறந்துபோனதுதான் ஆச்சர்யம் மற்றும் கவலையை அளிப்பதாக இருக்கிறது.
'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன, திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை, உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும்.
அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
உலகம் முழுவதும் கடந்த இருநூறு ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் செயல்பாடுதானே இது?
எம்பால்சிங் இரகசியங்கள்
உண்மை இப்படியிருக்க, முதல்வரின் உடல் மருத்துவ அடிப்படையிலான பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை; உட்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை உலகத்தரம் வாய்ந்த அப்போலோ மருத்துவமனையோ, முதல்வருக்கு இரவு பகல் பாராது சிகிச்சை அளித்த மருத்துவர்களோ முன்வைக்கவில்லை.
என்றாலும்கூட, உயிரற்ற அவரது உடலில் இருக்கும் ரத்தத்தை வெளியில் எடுத்துவிட்டு அதற்குப் பதிலாக அவரது ரத்த நாளங்களிலும், வயிறு-நெஞ்சு-கபாலம் ஆகிய உள்வெளிகளிலும் நச்சுத் தன்மை மிகுந்த வேதித் திரவங்களின் கலவையை ஏற்றி உடலினை வறண்டு-கெட்டுப் போகாமல் இருக்க வைக்கும் செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்ட போது அதற்கான மாற்றுக் கருத்தினை எவரும் முன்வைக்கவில்லை.
அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்ட முதல்நாள் தொட்டே அவரது உடல்நிலை மற்றும் அதற்கான சிகிச்சை குறித்தான கவலைகள், சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் பொதுவெளியில் பலராலும் எழுப்பப்பட்டு வருகின்றன.
அவற்றிற்கான தீர்க்கமான, அறிவியல் அடிப்படையிலான, முழுமையான பதில்களை இன்றளவும் அப்போலோ நிர்வாகமோ, சிகிச்சை மருத்துவர்களோ, தமிழ்நாடு அரசோ முன்வைக்கத் தவறியுள்ளன என்பதுதான் உண்மை.
அப்படிப்பட்ட சூழ்நிலையில், முதல்வரின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்குட்படுத்தாமல், அதன் இரத்தம் அனைத்தையும் வெளியில் எடுத்துவிட்டு அதற்குப் பதிலாகக் கடுமையான நச்சுத் திரவக் கலவையை உள்ளே செலுத்துவதென்பது அவரது உடலின் உண்மை நிலைமையை அழிக்கும் செயலாக அமைந்து விடும் என்பது அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்துக்கும் மருத்துவர்களுக்கும் தெரியாதா என்ன?
ஒருவேளை, அவரது இறப்பிற்கான காரணத்தை அறிந்து கொள்வதற்காக உடலினைப் பிரேதப் பரிசோதனை செய்தாக வேண்டும் என்ற முடிவினை நீதிமன்றம் எடுக்கும் பட்சத்தில் அடக்கம் செய்யப்பட்ட அவரது உடம்பானது இரத்தம் நீக்கப்பட்டு, கடுமையான நச்சுத் திரவங்களால் அடைக்கப்பட்ட ஒன்றாகத்தானே இருக்கும்?
அந்த திரவக் கலவையானது உடலின் அனைத்து இடுக்குகளிலும் புகுந்து உடல் உறுப்புக்களின் இயல்புத் தன்மைகளை அறவே மாற்றி அமைக்கும் திறனைக் கொண்டது என்பதை உறுதி செய்யும் ஆயிரக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகள் இருக்கின்றன என்பது அப்போலோ நிர்வாகத்துக்கும் மருத்துவர்களுக்கும் தமிழக-இந்திய அரசுகளுக்கும் தெரியாதா என்ன?
இதற்குப் பதிலாக, அவரது இறப்புக்குக் காரணமாகக் கூறப்படும் இருதய செயலிழப்புக்கான காரணங்களை அறிய உதவிடும் மருத்துவரீதியான பிரேதப் பரிசோதனையை நடத்தியிருப்பதுதானே அறிவுகூர்ந்த செயலாக இருந்திருக்க முடியும்?
மேற்கத்திய உலகில் நடைமுறையில் உள்ள நிகழ்வுதான் இது என்றாலும் கூட, மேற்கத்திய உலகிற்கும் மருத்துவம் செய்யும் அப்போலோ நிர்வாகமோ, மருத்துவர்களோ இந்த நடவடிக்கையை சம்பந்தப்பட்டோர் மேற்கொள்ள வேண்டும் என்று ஏன் நிர்ப்பந்திக்கவில்லை?
தமிழக - இந்திய அரசுகள் இந்த நடவடிக்கையில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பூத உடலைக் காப்பாற்ற ஏன் முயற்சி மேற்கொள்ளவில்லை, அப்புறப்படுத்தப்பட்ட அந்த ரத்தத்தை சாக்கடையில் கொட்டிவிட்டனர்.சொல்வீர்களா சுதா சேஷய்யன்?

No comments:

Post a Comment