தொலைக்காட்சி!!

Wednesday, February 15, 2017

இன்று நடக்கும் அத்தனை சீரழிவிற்கு ஜெ.,வும் ஒரு காரணம் -

அவர் மரணத்துக்கும்  அவரது அதீத நம்பிக்கைதான்  காரணம்!
ஒருவர் காலமாகி விட்டால் அவர் குறித்த விமர்சனங்கள் கூடாது என்கிற ஒரு பொதுமை தொடர்ச்சியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா அதிமுக என்கிற கட்சியை மட்டுமன்றி தமிழக அரசியல் சூழலையும், மிக மோசமான பாதிப்புக்குள்ளாக்கிச் சென்றிருக்கிறார்.
முதல் முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட 5 ஆண்டு காலத்திற்குள் மிகக்கடுமையான குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொண்டார்.
ஊழல் குற்றச்சாட்டுகள், பத்திரிகைச் சுதந்திரத்தின் மீதான அத்துமீறல்கள், சட்டமன்றத்திற்குள் ஜனநாயக மாண்புகளை தனக்கிருக்கும் எம்எல்ஏக்களின் செல்வாக்கால் கடுமையாக நசுக்குவது, அரசியல் எதிரிகளை – அவர்களின் கருத்துக்களை துச்சமென மதிப்பது, பொதுமக்களின் கருத்துக்களுக்கும், விருப்பங்களுக்கும் மதிப்பளிக்க மறுப்பது என்று மிகக்குரூரமாக அனைத்து நல்ல அம்சங்களையும் அவர் சிதைத்தார்.
காவல்துறையை ஆளும் கட்சி ஒரு அடியாள் கூட்டம் போல உருவாக்கி வைத்ததில் அவருடைய பங்கு முக்கியமானது.
ஆயினும், தமிழகம் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதைவிட அந்த பிரச்சனைகளால் ஏற்படும் விளைவுகளை சமாளிக்க நிவாரணங்களை வழங்குவதன் மூலம் தனது செல்வாக்கை நிலை நிறுத்திக் கொண்டார்.
இதன் மூலமாக அனைத்து விமர்சனங்களையும், மக்கள் மன்றத்தில் நான் சந்தித்து கொள்கிறேன் என்ற ஒற்றை வரியில் பதில் அளித்தார்.
1991-க்கும் 1996க்குமிடையே அவர் முதலமைச்சராக இருந்த போது ‘‘தமிழக மக்கள் தான் எனது குடும்பம்.நான் யாருக்காக சொத்து சேர்க்கப்போகிறேன், எனக்கு ஒரு ரூபாய் சம்பளம் போதும்’’ என்று சொல்லிக்கொண்டே 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களை உருவாக்கினார்.
அதில் சசிகலாவையும், இளவரசியையும் பங்குதாரராக்கி கொண்டார். எந்த சொத்தும் வேண்டாம் என்று சொன்னவருக்கு இத்தனை சொத்து வாங்கும் ஆசை ஏன் வந்தது என்றோ, இவர் தங்களையெல்லாம் ஏமாற்றி விட்டார் என்றோ அதிமுகவினர் வருத்தப்படாத வகையில் திமுக எதிர்ப்பை மட்டும் முன்வைத்து அவர் முடிசூடா ராணியாக திகழ்ந்து வந்தார்.
கட்சிக்குள் எந்த எதிர்ப்புக்குரலும் மனதளவில் கூட நிகழாமல் அதிகாரத்தின் மூலமும் பணத்தின் மூலமும் அடியாட்கள் மூலமும் நிலைநிறுத்திக் கொண்டார்.
தூத்துக்குடியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தன் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவரையே அவர் ஆள் வைத்து அடித்தார் என்கிற குற்றச்சாட்டும் கூட அவர் மீது உண்டு.
இலவசங்களில் மறைக்கப்பட்ட ஊழல்கள்
மணல் கொள்ளையைத் தடுக்க அரசு குவாரிகளை உருவாக்குகிறேன் என்கிற பெயரில் அத்தனை அரசு குவாரிகளிலும் அவரது கையாட்கள் புகுந்து விளையாட அவர் வழிவகுத்துக் கொண்டார்.
அரசுடைமை ஆக்கி விட்டேன் என்ற ஒரே ஒரு வரியை முன்வைத்து நடக்கும் கொள்ளை, ஆறுகள் மொட்டையடிக்கப்பட்டது, விவசாயம் பாதிக்கப்பட்டது, மணல் விலைஆகாயத்தை தொட்டது- என்ற அனைத்தையும் மறைத்தார்.
மடிக்கணினி, இலவச அரிசி, ஆடு,மாடுகள் என்பவற்றை போர்வையாகக் கொண்டு ஆறுகள் முழுவதும் ஒட்டச்சுரண்டப்பட்டன.
தமிழக கடற்கரையோரங்களில் இருந்த தாதுமணல் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டதும், அதற்குரிமை பெற்ற வைகுண்டராஜன் ஜெயா டிவியில் பங்குதாரராக இருந்ததும், அவரை எதிர்த்துக் கேள்வி கேட்டவர்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள்.
காவல்நிலையங்களுக்குச் சென்றால் காவல்துறையினரே அடியாட்களாக இருந்ததும் ஜெயலலிதாவின் காலத்தில்தான் என்பதே, தமிழகத்தின் வரலாறு.
கிரானைட் கொள்ளைக்கு பேர்போன பி.ஆர்.பழனிச்சாமி குடும்பம் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், அவர் மூலம் ஜெயலலிதாவுக்கும் நெருக்கமாக இருந்ததும் மதுரை மாவட்டத்தின் மலைகள் முழுவதும் துண்டுகளாக்கி விற்பனை செய்யப்பட்டதும், கடத்தப்பட்டதும் ஜெயலலிதாவின் ஆசியோடு நடந்தவைதான்.
சர்வமும் ‘சசி’ மயம்
தமிழகத்தில் எந்த ஒரு பணிக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டாலும் – நியமனத்திற்கும், இடமாறுதலுக்கும், பதவி உயர்வுக்கும் – பணமற்று எதுவும் அசையாது என்கிற நிலை அதிமுக காலத்தில்தான் உருவாக்கப்பட்டது.
இவற்றில் சுரந்த பணமும், கறந்த பணமும்தான் தன்மீதான வெறுப்புகள் தேர்தலில் பிரதிபலித்து விட முடியாதபடி மக்களின் வாயடைக்கப் பயன்படுத்தப்பட்டது.
இவற்றிலெல்லாம் அவருக்குத் துணையாக – அவருடைய ஏஜெண்டாக செயல்பட்டவர்தான் சசிகலா.
அமைச்சர்களுக்குத் தெரியாத ரகசியங்கள் சசிகலாவுக்கு தெரிந்திருந்தது. அமைச்சர்களின் உதவியாளர்களை நியமிப்பதில் சசிகலா ஆதிக்கம் செலுத்தினார். இந்தக்காரணங்களால்தான் ஜெயலலிதாவின் உடன்பிறவா தோழியானார்.
ஒவ்வொரு தொழிலிலும் பங்குதாரரானார். ஜெயா பப்ளிகேசன்ஸ், சசி என்டர்பிரைசஸ் தொடர்பான டான்சி வழக்கில் நீதிமன்றம் கொஞ்சமும் கூச்சமின்றி பிராயச்சித்தம் தேடிக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டது.
பாவங்களுக்கும் , தவறுகளுக்கும்தான் பிராயச்சித்தம் தேடுவார்கள். டான்சி வழக்கில் செய்யப்பட்ட தவறுகளுக்கும், புரியப்பட்ட பாவங்களுக்கும் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் சமமான பங்குண்டு.
அதன் பிறகும் கூட, சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஜெயலலிதாவின் சொத்துக்கள் ஆயிரக்கணக்கான கோடிகளில் பெருகியதைப் போலவே, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரின் அதிகாரப்பூர்வ சொத்துக்கள் பல்கிப் பெருகின.
‘சின்னம்மா’ என்கிற வார்த்தை புதிதாக முளைத்ததல்ல. அதை அவருக்கு ஏற்படுத்தும்படி சூழலை அமைத்துக் கொடுத்தவர் ஜெயலலிதா.
தினகரன், வெங்கடேசன், சுதாகரன் இவர்களையெல்லாம் அதிமுகவின் முக்கியப் பொறுப்புகளிலும், தன் குடும்பத்தின் வாரிசு என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.
சசிகலாவின் நிர்ப்பந்தத்தால் இவர்கள் எல்லாம் நியமிக்கப்பட்டார்கள் என்று ஒருவர் சொன்னால், அந்த நிர்ப்பந்தத்திற்கு ஆளாகும் நிலையில்தான் ஜெயலலிதா இருந்தார் என்பதும் உண்மை.
இருவரும் ஒரேமாதிரியான பட்டுச்சேலை உடுத்தி, உடல் முழுவதும் தங்க நகைகள் போட்டுக் கொண்டு எடுத்த புகைப்படங்கள், நீயும் நானும் வேறல்ல என்று ஜெயலலிதா சசிகலாவுக்கு சொல்வதற்காக மட்டும் எடுக்கப்பட்டவையல்ல, அந்த கட்சியினருக்கும் அதைத்தான் அவர் செய்தியாகச் சொன்னார்.
ஊழல் வழக்கில் இரண்டு பேரும்தான் ஜெயிலுக்குப் போனார்கள். ஊழல் செய்தவரோடு ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று அதிமுகவினர் எவரும் கலகக்கொடி தூக்கவில்லை.
மாறாக, தங்களுக்கு கிடைத்த தேர்தல் நேர பரிசுகளும், தாராளமாய் புழங்கிய பணமும் இதன்மூலம்தான் வந்தது என்பதை அதிமுகவினர் ஒவ்வொருவரும் புரிந்து வைத்திருந்தார்கள். இந்த ஊற்றின் கடைமடையில் தாங்கள் இருக்கக்கூடாது;
எப்படியாவது தலைமடைக்குப் போய்விட வேண்டும் என்பதற்காக ஒவ்வொருவரும் முதலீடு செய்ய ஆரம்பித்தார்கள். இந்த முதலீடுகளுக்கு எல்லாம் தகுதி, திறமை, விசுவாசம் என்பவற்றையெல்லாம் தாண்டி கடைக்கண் பார்வைக்கு மட்டுமே மரியாதை என்றானது.
அந்தப்பார்வைகள் யார்பக்கம் திருப்ப வேண்டும் என்பதை முடிவு செய்கிற இடத்திலும், முடிவுகளை மாற்றுகிற இடத்திலும் ஜெயலலிதா, சசிகலாவை அலங்கரித்து வைத்திருந்தார். இதை அந்தக்கட்சியினர் அனைவரும் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
பந்தலிலே பாவக்காய்…
அதன் விளைவுதான் அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி தமிழகம் முழுவதும் துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்த போது, பெயர் சொல்லாமல், முகம் காட்டாமல், தமிழகத்து பத்திரிகை தர்மங்களுக்கு தலைக் குனிவு ஏற்படுத்தும் வகையில் பக்கம் பக்கமாக சின்னம்மா பொதுச்செயலாளர் பதவி ஏற்க வேண்டும் என்ற விளம்பரங்கள்… கொஞ்சமும் கூச்சநாச்சமின்றி தமிழக பத்திரிகைகள் அதை வெளியிட்டு மகிழ்ச்சியடைந்து கொண்டன.
அல்லது, அந்தப் பணபலத்தின் முன்னால் நிற்க முடியாமல் வருத்தத்தோடு விளம்பரங்களை பிரசுரித்தன. இதன் அடுத்த நிலைதான் இப்போது அவர் முதல்வர் பொறுப்பிற்கு முன்மொழியப்பட்டிருப்பது.
சரி, தவறு என்று சொல்வதற்கான மனச்சாட்சிகளை முற்றிலும் துறந்து விட்டு, எது லாபம் என்பதற்காக மட்டுமே பழக்கப்படுத்தப்பட்ட கட்சியாக அதிமுகவை ஜெயலலிதா மாற்றி வைத்து விட்டுப் போனதுதான் இன்றைக்கு சசிகலா முதல்வர் பொறுப்புக்கு முன்னிறுத்தப்பட்டிருப்பது.
ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் வரம் கேட்ட கைகேயி, சூதாடிய துரியோதனன் ஆகியோரை விட மிக அதிகமாக வெறுக்கப்பட்டவர்களும், சபிக்கப்பட்டவர்களுமாக கூனியும், சகுனியுமே அறியப்படுகிறார்கள்.
கூனியும், சகுனியும் நேரடியாக ஆட்சிப்பொறுப்புக்கு வந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யாரும் எழுதியதில்லை.
சசிகலா முதல்வர் பொறுப்புக்கு முன்னிறுத்தப்பட்டிருப்பதை தமிழக மக்கள் இப்படித்தான் பார்க்கிறார்கள்.
சிலர் சொல்வது போல சசிகலாவை, ஜெயலலிதாவோடு எல்லா வகையிலும் ஒப்பிட முடியாதுதான். ஆனால் ஜெயலலிதாவின் எல்லா தவறுகளிலும் எல்லா நிறுவனங்களிலும் இவரும் பங்குதாரராகவே இருந்திருக்கிறார்.
இன்னும் சொல்லப்போனால், ஜெயலலிதா என்கிற அந்த மரத்தில் தானே விரும்பி மிகவும் சத்தூட்டப்பட்டு வளர்க்கப்பட்ட கனியே சசிகலா.
எனவே, சசிகலாவை முன்னிறுத்துவது என்பது ஜெயலலிதா, கட்சியை நடத்திய வழிமுறையின் விளைவே.
ஜெயலலிதா இருந்த போதே கட்சி-ஆட்சி இரண்டிலும் தலையிடவும், செல்வாக்கு செலுத்தவும் முடிவுகளை மாற்றி அமைக்கவும் சசிகலாவுக்கு வழங்கப்பட்டிருந்த உரிமையின் விளைவே இன்றைய நிகழ்வு.
எனவே, சசிகலா போன்ற ஒருவர் – இப்படிச் சொல்கிற போது அவருடைய படிப்பு, அவருடைய பணி என்பது பற்றிய விமர்சனங்களை நாம் புறந்தள்ளி விட்டே சொல்கிறோம் – இந்தியாவின் மிக முக்கியமான மாநிலங்களில் ஒன்றில் முதலமைச்சர் பொறுப்பிற்கு முன்னிறுத்தப்பட்டிருப்பது, ஜெயலலிதாவால் நீண்ட நெடிய காலம் திட்டமிட்டு ஜனநாயகம் சீர்குலைக்கப்பட்டதன் விளைவே.
எனவே, இந்தக்காரியங்கள் ஜெயலலிதாவால்தான் வந்தது.
இப்போது ஜெயலலிதா இல்லை. அவரது தவறான பாரம்பரியமும் முடிவுக்கு வரட்டும்.தமிழகத்திற்கு அதுதான் நல்லது.
- See more at: http://www.asrilanka.com/2017/02/15/40500#sthash.DGmS9yqs.dpuf

No comments:

Post a Comment