Thursday, January 19, 2017

பெண்களின் வலி பேசும் 28 வயது பெண்ணின் பீரியட்ஸ் ஓவியம்!

பீரியட்ஸ் ஓவியம்
என்னதான் நாகரிகம் வளர்ந்து விட்ட இந்தக் காலக்கட்டத்திலும், பெண்களின் மாதவிடாய்….அல்லது ஆங்கிலத்தில் பீரியட்ஸ் என்று சொல்லப்படும் வழக்கமான இயற்கை உபாதை பற்றி இன்னமும் வெளிப்படையாகப் பேச எல்லோருமே தயங்கிக் கொண்டிருக்கிறோம். ஆண்களும், பெண்களும் அறிவுப்பூர்வமான பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டாலும், மாதவிடாய் பற்றி பொது இடங்களில் பேசுவதைத் தவிர்க்கவே நாம் அனைவரும் முயற்சி செய்கிறோம். பெண்களின் மாதவிடாய் பற்றி ஆண்களுக்கு அனைத்து விவரங்களும் தெரிந்தாலும், பேசக் கூடாத ஒரு தலைப்பாகவே இன்னமும் அது இருக்கிறது.
வளர்இளம் பெண்கள் தொடங்கி சுமார் 50 வயது வரையிலான பெண்களின் உடலில் ஒவ்வொரு மாதமும் நிகழும் ரசாயன மாற்றங்களும், இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட அந்த நாட்களில் பெண்களுக்கு ஏற்படும் மனரீதியான பாதிப்புகள் மற்றும் அழுத்தங்களை வார்த்தைகளால் சொல்லிப் புரிய வைப்பது மிகவும் கடினம்.
பல ஆண்கள், பெண்களின் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் கஷ்டங்களைப் பற்றி இன்றைக்கும் கண்டுகொள்வதே இல்லை. அதற்கு பல ஆண்களும் தெரிவிக்கும் தன்னிச்சையான பதில், ‘ஒவ்வொரு மாதமும் எல்லா பெண்களுக்கும் ஏற்படுவதுதானே’ என்பதாகத்தான் உள்ளது. ஆனால், சிலர் பெண்களின் மனரீதியான பிரச்னைகளைப் புரிந்து கொண்டு அந்த நாட்களில் உதவுவோரும் உண்டு.
இந்த நிலையில், ருமேனிய நாட்டின் கலைஞர் திமியா பால், தனது மாதவிடாயின் போது வெளியாகும் ரத்தத்தைக் கொண்டு ஒரு கரு ஓவியத்தை உருவாக்கியுள்ளார். 28 வயதாகும் இவர், ஒரு இசைக் கலைஞர் மற்றும் கிராபிக்ஸ் டிசைனர். அவர் 9 மாதங்களாக ஒரு பயிற்சி மேற்கொண்டு, அந்த ஓவியத்தை வரைந்துள்ளார். அதற்கு “தி டைரி ஆஃப் மை பீரியட்” (The Diary of my Period) என்று பெயரிட்டிருப்பதுடன், தனது ஓவியத்தின் மூலம் ஒரு முடிவிலிருந்து புதிய தொடக்கத்தை அவர் உருவாக்கி உள்ளார்.
தான் வரைந்திருக்கும் ஓவியம் பற்றி தனது ஃபேஸ்புக் வலைதளத்தில் அவர் கூறியிருப்பதாவது: “ஒரு துளி வைத்து செய்த சோதனை, வலியின் அழகை உணரச் செய்தது, மாதவிடாயின் மதிப்பை எனக்குத் தெளிவுபடுத்தியது, என்னுடைய மாத சுழற்சியால் ஒரு உயிரை பெற்றெடுக்கும் ஊக்கத்தைக் கொடுத்தது. ஒரு விஷயத்தின் முடிவு வேறொரு விஷயத்துக்கு ஆரம்பமாக இருப்பது எனக்கு ஆச்சரியம் அளித்தது.
ஒரு பெண் எந்த மாதம் வேண்டுமானாலும் கருத்தரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், மாதவிடாயும், அதன் சுழற்சியும் ஒவ்வொரு மாதமும் சரியாகவே நடக்கிறது. கருத்தரிக்காத போது, கரு முட்டையானது மாதவிடாயாக வெளியேற்றப்படுகிறது.
அந்த வகையில், எனது ஓவியத்தில் 9 மாதங்களாக வெளியேற்றபட்ட எனது கருமுட்டையை வைத்து என்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளேன். நான் படைத்த ஓவியமானது, ஒரு முடிவின் தொடக்கம் ஆகி உள்ளது. என்னுடைய கலைப் படைப்பின் பின்னணியில் ஒரு நோக்கம் உள்ளது, நான் வரைந்த ஓவியம் பேசவோ, மூச்சு விடவோ, பார்க்கவோ முடியாது. ஆனால், ஓவியத்தைப் பார்க்கும் பார்வையாளர்கள் இதைப் பற்றி பேசவும், பார்க்கவும் முடியும். நிறம், மதம், இனம் பற்றி மறந்து இவற்றை ரசிப்பார்கள். ஒரு கரு முட்டை இறந்து, கலைப்படைப்பு பிறந்திருக்கிறது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த ஓவியத்தை அவர் தொடங்கும் முன்பு மக்கள் மத்தியில் அவருக்கு எந்த மாதிரியான வரவேற்பு இருந்தது என்பது தெரியவில்லை. முதலில், தன்னுடைய படத்தையே ரத்தத்தை வைத்து ஓவியமாக அவர் வரைந்துள்ளார். பிறகு, ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு பாக்ஸாக வரைந்து, மொத்தம் 9 பாக்ஸாக கரு ஓவியத்தை உருவாக்கியுள்ளார்.
ஆரம்பத்தில் அதிக எதிர்ப்புகள் வந்துள்ளன. எனினும், பின்னர் பலரும் ஓவியத்தைப் பாராட்டியுள்ளனர். மேலும், திமியா பால் தான் உருவாக்கிய ஓவியத்தை, உலகம் முழுவதும் இருக்கும் கலைக் கூடங்களில் பார்வைக்காக வைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
மாதவிடாயைப் பற்றி பேசவே தயங்கும் மக்களுக்கு மத்தியில், மாதவிடாயின்போது ஏற்படும் ரத்தப்போக்கைக் கொண்டு, ஓவியமாக்கி உள்ள இவரது செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மனிதர்களின் உடலில் இருந்து கழிவாக சிறுநீர், மலம் வெளியேறுவது போன்று பெண்களின் மாதவிடாயும் உடலில் ஏற்படும் வழக்கமான சுழற்சி என்பதை அனைவரும் உணர்தல் அவசியம்.
அந்த சமயங்களில் முடிந்தவரை பெண்களுக்கு உதவ முயற்சியுங்கள். இதையே அந்த ஓவியமும் சொல்ல வருகிறது. அது பெண்களின் பிரச்னை என்று பேசத் தயங்கி நிற்காமல், அவர்களிடம் இதுகுறித்துப் பேசவும், அவர்களுக்கு ஆறுதலாக இருக்கவும் இந்த ஓவியம் ஒரு கருவியாக அமையட்டும்!
g
- See more at: http://www.canadamirror.com/canada/78707.html#sthash.iljNTpTP.dpuf

No comments:

Post a Comment