Friday, December 30, 2016

நாதியற்று செத்துப் போன..காந்திமதி..!!


மனோரமா ஆட்சி திரையுலகில் அசத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் நடிகை காந்திமதியும் தூள் கிளப்பிக் கொண்டிருந்தார். இருவருமே நாடக மேடையில் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள்.
மனோரமா ஆட்சி, சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெமினி என்று பரபரப்பாக இருந்தபோது, முத்துராமன், ஏ.வி.எம்.ராஜன் போன்ற ஹீரோக்கள் படத்தில் திகு திகுவென நடித்து கொண்டிருந்தார் காந்திமதி.
1980 காலகட்டத்தில் சுருளிராஜன் எனும் நகைச்சுவை பிரளயம் ஒன்று வந்து திரை ரசிகர்களை துவம்சம் செய்து கொண்டிருந்தது. கதாநாயகன் ரேஞ்சுக்கு உயர்ந்தார் சுருளிராஜன். அவருக்கு ஜோடியாக காந்திமதி வெளுத்து கட்டினார்.
மாந்தோப்புக் கிளியே படம் சுருளி, காந்திமதி ஜோடிக்காகவே வெள்ளிவிழா ஓடிய படம். தொடர்ந்து சுருளி&காந்திமதி ஜோடி பட்டையை கிளப்பியது. சுருளிராஜன் காந்திமதி இல்லாத படங்களே இல்லை.
காந்திமதி பணம், புகழ் கொட்டியது. இங்குதான் அவரது சோக வாழ்க்கையும் துவங்கியது. திருமணம் செய்து கொள்ளவில்லை. உறவினர்களை நம்பினார்.
அவர்கள் கடைசிவரை துணை இருப்பார்கள் என்று நம்பிவிட்டார் காந்திமதி. இதயக் கோளாறு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காந்திமதி, வடபழனியில் உள்ள தனது வீட்டில் (09.09.2011) வெள்ளிக்கிழமை காலமானார்.
பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே படத்தில் மயிலின் அம்மாவாக தோன்றி.. எப்படி பொசுக்கென்று செத்துப் போவாரோ, அப்படித்தான் இவரது வாழ்க்கையும் ஆனது.
வயது ஆக… நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திக் கொண்டார். உதவிக்கு உறவினர்கள் சிலர் வந்து போய் இருந்தாலும்… உரிமையுடன் பார்த்து கொள்ள ஒரு பிள்ளை வேண்டுமல்லவா?
இங்கு தான் சிக்கல். நிறைய நடிகைகள் தனக்கென்று ஒரு குடும்பம், வாழ்க்கை என்றும் அமைத்துக் கொள்ளாமல், உறவினர் வீட்டு குழந்தைகளை வளர்க்க ஆரம்பித்து அவர்கள் வளர்ந்து.. சொந்த தாய் தகப்பனோடு தனி வாழ்க்கையோடு போய் விடுகிறார்கள்.
நம்பிய நடிகைகள் இறுதி காலத்தில் தவித்த வாய்க்கு தண்ணீர் தர ஆள் இல்லாமல், பணவசதியும் இல்லாமல் அனாதையாக செத்து போய் விடுகிறார்கள்.
காந்திமதி அம்மாவுக்கும் அதுதான் நிலைமை… வாழ்க்கை பூராவும் சிரிக்க வைத்த காந்திமதி அம்மா.. அழுது அழுது செத்துப் போனது கொடுமையிலும் கொடுமை…!

No comments:

Post a Comment