தொலைக்காட்சி!!

Sunday, October 16, 2016

மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் மரணஅறிவித்தல்!


70 ஆண்டுகள் பதவியில் இருந்த தாய்லாந்து நாட்டின் மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் மரணம் அடைந்தார்.
அவருடைய மறைவுக்கு ஒரு வருடம் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டின் மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் (வயது 88). தனது 18 வயதில், 1946-ம் ஆண்டு, மன்னர் ஆனார்.
70 ஆண்டு காலம் மன்னராக இருந்து, மக்களின் ஏகோபித்த அபிமானத்தையும், அன்பையும் ஒரு சேரப்பெற்றவர். கடவுளின் அவதாரமாக அவரைப் பார்த்த மக்கள், நாட்டை ஒற்றுமைப்படுத்தும் சக்தியாக அவரை நம்பினர். சாக்ரி வம்சத்தை சேர்ந்த அவர் ஒன்பதாம் ராமர் என அறியப்பட்டிருந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். பொது நிகழ்ச்சிகளில் தோன்றாமல் இருந்து வந்தார். உடல் நலக்குறைவால் 3 ஆண்டுகளுக்கு முன்னதாக 2014-ம் ஆண்டு, இதே அக்டோபர் மாதம் 3-ந்தேதி பாங்காக்கில் உள்ள சிறிராஜ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உடல்நிலை மோசமானது. அவரது உடல்நிலை ஸ்திரமற்று இருப்பதாக அரண்மனை தெரிவித்தது.
அப்போதுமுதல் மக்கள் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த ஆஸ்பத்திரி முன்பாக கூடி கண்ணீரோடு பிரார்த்தனை செய்து வந்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் நேற்று உள்ளூர் நேரப்படி மாலை 3.52 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 2.22 மணி) மரணம் அடைந்தார். அப்போது பட்டத்து இளவரசர் மகா வஜிரலோங்கோன், இளவரசி மகாசாக்ரி சிறிந்தோன், இளவரசி சோம்சவாலி, இளவரசி சுலாபோன் ஆகியோர் உடன் இருந்தனர்.
உலகிலேயே நீண்ட நெடுங்காலம் மன்னராக இருந்தவர், தாய்லாந்து மன்னர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் மறைவு, மக்களை மீளாத்துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. மன்னரது படங்களை கையில் ஏந்தி, மக்கள் கதறி அழுகின்றனர்.

மன்னரின் மறைவுக்கு நாடு ஒரு வருட காலம் துக்கம் கடைப்பிடிக்கும் என பிரதமர் பிரயுத் சான் ஓச்சா அறிவித்தார்.
இதுபற்றி அறிவித்த அவர், ‘மன்னர் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறார். அவர் அங்கிருந்தவாறு தாய்லாந்து மக்களை பார்த்துக்கொள்வார்’ என கூறினார்.
63 வயதான பட்டத்து இளவரசர் மகா வஜிரலோங்கோன், நாட்டின் புதிய மன்னர் ஆவார் என பிரதமர் பிரயுத் சான் ஓச்சா தெரிவித்தார்.
ராணி சிரிகிட் 2012-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அதில் இருந்து அவர் பொது நிகழ்ச்சிகளில் தோன்றுவதில்லை.
மன்னர் பூமிபால் அதுல்யதேஜ்- சிரிகிட் தம்பதியருக்கு ஒரு மகன், 3 மகள்கள் இருக்கிறார்கள்.

siri raja!

No comments:

Post a Comment