Friday, October 14, 2016

ஜெயலலிதா வாழ்க்கையில் பயணித்த மூவர்!

ஜெயலலிதா தனது அரசியல் வாழ்க்கையில் சந்திக்காத சிக்கல்களும், கஷ்டங்களும் இல்லை. ஆனாலும் அவற்றையெல்லாம் கடந்து தமிழகத்தின் முதலமைச்சர் நாற்காலியில் ஐந்தாவது முறையாக அமர்ந்திருக்கிறார். அவர் மீது ஏராளமான விமர்சனங்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, அது அவரது கையில் இல்லை. அவரது வாழ்க்கையை இதுவரை மூன்று கால கட்டங்களாகப் பிரித்தால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவர் என மூன்று பேர் அவரது வாழ்க்கை முழுக்க ஆளுமை செய்திருக்கின்றனர்.
அம்முவும் சந்தியாவும்!
ஜெயராமன், சந்தியா தம்பதிக்கு மகளாகப் பிறந்த ஜெயலலிதாவுக்கு கோமளவள்ளி என்றுதான் பெயர் வைக்கப்ப்பட்டிருந்தது. ஆனால், அவர் அம்மா அவரை அம்மு என்றுதான் செல்லமாக அழைத்து வந்தார். தாய் சந்தியா அம்முவை கவனமாக வளர்த்து வந்தார். அவருடைய அனுமதி இல்லாமல் அம்மு எதையும் செய்ய முடியாது. அம்மு தனக்கு என்று தனியே எந்த முடிவையும் எடுக்க முடியாது. முழுக்க முழுக்க தாய் சந்தியாதான் அம்முவின் வாழ்க்கையில் இருந்தார்.
படப்பிடிப்புக்கு சந்தியா செல்லும்போதும், அவர் அருகில் இல்லாவிட்டாலும் அவருடைய கட்டுப்பாட்டில்தான் அம்மு வளர்ந்தார். சட்டம் படிக்க விரும்பிய அம்மு, நடிக்க வந்ததும் தாய் சந்தியாவின் நிர்பந்தத்தினால்தான். குடும்ப சூழ்நிலையும் அதற்கு ஒரு காரணம். எந்தப் படத்தில் நடிக்க வேண்டும், எவ்வளவு சம்பளம் என அனைத்தையும் தாய் சந்தியாதான் கவனித்து வந்தார்.
ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரும்!
சந்தியா இறந்த பிறகு ஜெயலலிதாவின் அரசியல் குருவான எம்.ஜி.ஆர் அவரது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத சக்தியாகத் திகழ்ந்தார். ஜெயலலிதாவின் துணிச்சலும், அவரது திறமையும் எந்தக் காரியத்தையும் முடித்து காட்டும் தன்மையும் எம்.ஜி.ஆரைக் கவர்ந்திருந்தது. சொல்லப் போனால் ஜெயலலிதா எந்தப் படத்தில் நடிக்க வேண்டும், எதில் நடிக்கக் கூடாது, எங்கு போக வேண்டும் என்பதையெல்லாம் முடிவு செய்யும் அளவுக்கு எம்.ஜி.ஆர் ஜெயலலிதா மீது மிகவும் பொசஸிவ் மனப்பான்மை கொண்டிருந்தார்.
ஜெயலலிதாவுக்கு அ.தி.மு.க-வில் எம்.ஜி.ஆர் கொடுத்த பொறுப்புகள் காரணமாக நாளடைவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கொள்கைப் பரப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்தெல்லாம் கூட ஜெயலலிதா நீக்கப்பட்டார். அதையும் மீறி எம்.ஜி.ஆரின் தவிர்க்க முடியாத அரசியல் வாரிசாக ஜெயலலிதா உருவெடுத்தார்.
அம்மாவும் சசிகலாவும்!
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் பிளவு பட்டிருந்த அ.தி.மு.க-வை ஒன்றிணைத்து வெற்றியின் பாதையை நோக்கித் தனி ஆளாக வளர்த்தெடுத்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்கு ரத்த உறவுகள் இருந்தாலும் கூட அவர்கள் யாரையும் பெரிதாக ஜெயலலிதா தனக்கு அருகில் சேர்த்துக்கொள்ளவில்லை. வீடியோ லைப்ரைரி வைத்திருந்த சசிகலா, வீடியோ கேசட்கள் கொடுக்க வந்த போது ஜெயலலிதாவுடன் பழகினார். நாளடைவில் ஜெயலலிதாவின் அரசியல் முடிவுகளில் சசிகலாவும் ஆளுமை செய்தார்.
சசிகலாவால் ஜெயலலிதாவுக்கு எவ்வளவோ சிக்கல்களும், துன்பங்களும் வந்தன. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி தனது உடன்பிறவா சகோதரி என்று ஜெயலலிதாவே குறிப்பிடும் அளவுக்கு சசிகலாவின் செல்வாக்கு உயர்ந்தது. இன்று ஜெயலலிதா நம்பும் ஒரே நெருங்கிய நபராக சசிகலா மட்டுமே இருக்கிறார்.
சந்தியா, எம்.ஜி.ஆர், சசிகலா மூவரும்தான் தனது நலம் விரும்பிகள் என்று பரிபூரணமாக நம்பினார். அது உண்மையும்கூட. ஜெயலலிதாவின் சுக துக்கங்கள் அனைத்தையும் பகிர்ந்துகொள்ள மூவர்தான் அவர் அருகில் இருந்தனர்.
சிறு வயதில் தன் மீது செலுத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிர்வினை ஆற்றத் தெரியாமல், தனியே அறைக்குள் சென்று அழுத அம்முவில் இருந்து, இன்று அப்போலோவில் யாரையும் தன் அருகே அனுமதிக்காத அம்மா வரையான ஜெயலலிதா இறுக்கமான ஒரு நபராகவும், யாரும் நெருங்க முடியாத ஒரு நபராகவும் இருப்பதற்கு இவர்கள் மூவரும் கூட ஒரு காரணம்.
- Vikatan

No comments:

Post a Comment