தொலைக்காட்சி!!

Wednesday, August 24, 2016

தமிழ் மக்களுக்கு மஹிந்த துரோகம் இழைத்தது உண்மை - வெளிப்படையாக கூறிய அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளார் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
யுத்தத்தை வெற்றி கொண்ட பின்னர் மஹிந்த ராஜபக்ஸ வடபகுதியிலுள்ள மக்களுக்கு எந்த விதமான உதவிகளையும் செய்யவில்லை. அதற்கு இடமளிக்கவுமில்லை என கூறினார்.
வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும், வாழ்க்கையை கொண்டு செல்வதற்கும் எந்த உதவிகளையும் வழங்கவில்லை எனக் குற்றம் சுமத்தினார்.
வடக்கில் பல புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன, கட்டிடங்கள் அமைக்கப்பட்டன, வீதிகள் புனரமைக்கப்பட்டன, இந்த புனரமைப்புப் பணிகளில் வேலை செய்வதற்குக் கூட வடக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
தெற்கிலிருந்தும் ஏனைய பகுதிகளிலும் இருந்து நபர்கள் வேலைக்காக வரவழைக்கப்பட்டனரே தவிர வடக்கிலிருக்கும் யாருக்கும் இதற்கு அனுமதியளிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவாமல் தெற்கிலிருக்கும் மக்களுக்கு சைக்கிள் மற்றும் பல வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார் என்றும், இதை பெற்ற மக்கள் வடக்கிலிருக்கும் மக்களை வந்து பார்வையிட்டு செல்வதாகவும் அதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
யுத்தத்தை முடித்து வைத்த பின்னர் வடக்கிலிருக்கும் மக்களை மஹிந்த ஒரு பார்வைப்பொருளாக மாற்றிவிட்டார் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
மேலும். தற்போது அந்த நிலைமை மாறியுள்ளது. வடக்கிலிருக்கும் மக்கள் இந்த நல்லாட்சியின் கீழ் மகிழ்ச்சியாக உள்ளனர் என்றும் ராஜித சேனாரத்ன கூறினார்.

No comments:

Post a Comment