Sunday, January 17, 2016

அகதிகளுக்கு புகலிடம் அளிப்பது குறித்து இறுதி வாக்குப்பதிவு: தமிழர்களுக்கு சாதகமாக அமையுமா?

சுவிட்சர்லாந்து நாட்டில் அகதிகளுக்கு புகலிடம் அளிப்பது தொடர்பாக இறுதியான வாக்கெடுப்பை பொதுமக்கள் மத்தியில் நடத்த அரசு விரைவில் ஒரு திகதியை தீர்மானிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் சில மாதங்களில் சுவிட்சர்லாந்து நாட்டில் இரண்டு முக்கிய சட்டங்கள் அமுல்படுத்தப்பட உள்ளன. முதலாவதாக, அந்நாட்டின் மிகப்பெரிய கட்சியான சுவிஸ் மக்கள் கட்சி ஒரு புதிய கோரிக்கையை அரசுக்கு வைத்துள்ளது.
அதில், சுவிஸில் புகலிடம் கோரி வரும் அகதிகளை அரசு கட்டிடங்களில் தங்க வைக்கக் கூடாது. மேலும், அகதிகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனைகளை வழங்கும் வழக்கறிஞர்களை அரசு நியமிக்கக்கூடாது என கண்டிப்புடன் கூறியுள்ளது.
மேலும், சுவிட்சர்லாந்து அகதிகளை கவர்ந்து இழுக்கும் நாடாக இருக்க கூடாது. நேர்மையான, போலித்தன்மை இல்லாத அகதிகளுக்கு மட்டுமே புகலிடம் வழங்க வேண்டும்.
சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய அகதிகளை உடனடியாக நிராகரிக்க வேண்டும் என சுவிஸ் மக்கள் கட்சி அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. இந்த கோரிக்கைக்கு ஆதரவாக ஏற்கனவே 65,000 பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று அரசிடம் வழங்கியுள்ளது.
சுவிஸ் மக்கள் கட்சி கோரியுள்ள இந்த சட்டமானது சுவிஸில் குடியேற முயலும் தமிழர்களுக்கு சாதகமாக அமையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இரண்டாவதாக, சுவிட்சர்லாந்து நாட்டின் இடது சாரி கட்சிகள் அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது. அதில், ‘சுவிஸ் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தற்போது இருப்பதை விட கூடுதல் அதிகாரங்களை அளிக்க வேண்டும் என்ற சட்டத்தை அரசு ஏற்க கூடாது.
ஏனெனில், இந்த கூடுதல் அதிகாரங்கள் மூலம் பொதுமக்கள் தொலைப்பேசி மற்றும் இணையத்தளம் வழியாக மேற்கொள்ளும் உரையாடல்களை ஒட்டுக்கேட்க உதவுகிறது.
இது முற்றிலும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டித்ததுடன் இதற்கு எதிராக மக்களிடம் இருந்து சுமார் 67,000 கையெழுத்துக்களை பெற்று அரசிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த இரண்டு சட்டங்களுக்கும் அரசு கடந்த வருடமே ஒப்புதல் வழங்கிவிட்டது. இருப்பினும், இது தொடர்பாக மக்களிடம் இறுதி வாக்கெடுப்பு நடத்த உள்ளதாகவும் அதற்கான ஒரு திகதியை அரசு விரைவில் அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment