Sunday, January 10, 2016

இன்னொரு திம்புப் பிரகடனம்வேண்டும்!!


இது நினைவில் இருக்கிறதா.
இன்னொரு திம்புப் பிரகடனம்வேண்டும் ,
ஏறத்தாழ 31 வருடங்களுக்கு முன் இந்த அதிசயம் நடந்தது.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF), ஈழப் புரட்சி அமைப்பு (EROS), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE), தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE), தமிழீழ விடுதலை இயக்கம் (TELO), மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) ஆகிய இந்த விடுதலை அமைப்புகளெல்லாம் 1985 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி பூட்டானின் தலைநகர் திம்புவில் ஒன்றுக் கூடி இலங்கைத் தமிழர்களின் வாழ்வியல் உரிமைகளுக்காக நடந்த பேச்சுவார்த்தையின் முதலாம் கட்ட முடிவு நாளன்று ஒரு பிரகடனத்தை வெளியிட்டார்கள். 'திம்புப் பிரகடனம்' என்று வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட அந்த பிரகடனம் இதுதான்....

தமிழ்த் தேசியப் பிரச்சனைக்கான தீர்வெதுவும் பின்வரும் நான்கு முக்கிய கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்பது எமது ஆள்ந்தாராய்ந்த கருத்தாகும்.

(1) இலங்கைத் தமிழர்கள் ஒரு தேசிய இனமாக அங்கிகரிக்கப்படுதல்.

(2) இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு இனங்காணப்பட்ட ஒரு தாயகம் உள்ளதென்பதை அங்கிகரித்தல்.

3) தமிழ்த் தேசிய இனத்தின் சுய நிர்ணய உரிமையை அங்கிகரித்தல்

(4) இத்தீவைத் தமது நாடாகக் கருதுகின்ற எல்லாத் தமிழரினதும் பிரசாவுரிமையையும், அடிப்படை உரிமைகளையும் அங்கீகரித்தல்.

இக்கோட்பாடுகளை உறுதி படுத்துவதற்கு வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு அரசாங்க முறைமைகளை வகுத்தமைத்துள்ளன.

எமது மக்களுக்கு இந்த அடிப்படை உரிமைகளை மறுத்ததனால் எழுந்துள்ள இப்பிரச்சினைக்குப் பதிலளிப்பாக நாம் சுதந்திரமான தமிழ் அரசொன்றைக் கோரியுள்ளதுடன் அதற்காகப் போராடியும் வந்துள்ளோம்.

இப்பிரச்சினைக்கு அவர்களின் தீர்வாக இலங்கை அரசாங்கத் தூதுக் குழுவினரால் முன் வைக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ளப் படமுடியாதவை. எனவே 1985 ஜுலை 12 ம் தேதிய எமது கூற்றில் நாம் தெரிவித்துள்ளவாறு அவற்றை நாம் நிராகரித்துள்ளோம்.

எனினும் சமாதானத்துக்கான எமது மனமார்ந்த விருப்பின் நிமித்தம் மேலே குறிப்பிட்ட கோட்பாடுகளுக்கிணங்க, இலங்கை அரசாங்கம் எமக்கு முன் வைக்கும் ஆலோசனைகளின் தொகுதி எதனையும் நாம் பரிசீலனை செய்யத் தயாராயுள்ளோம்.

திசைக்கொன்றாக இவர்கள் பிரிந்து செயல்பட்டாலும் ஒன்றுப்பட்டு ஒரு கொள்கைக்காகச் சேர்ந்த போது ஈழத் தமிழ் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்திருந்தது இன்றும் பசுமையாக ஞாபகத்திற்கு வருகிறது. ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீடித்திருக்கவில்லை.

திடிரென்று இந்த அமைப்புகளுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதை தொடக்கி வைத்த பெருமை பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் அமைப்புக்கே உரியது. தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீசபாரத்தினம் உட்பட பல நூற்றுக்கணக்கான இயக்க உறுப்பினர்களை ஈவிரக்கமின்றி கொன்று ஒழித்ததுடன், அந்த இயக்கத்தையும் சொந்த மண்ணில் செயல்படவிடாமல் ஜனநாயக உரிமையையும் மறுத்த பெருமையும் புலிகளுக்கே உரியது.

இந்தச் சகோதர யுத்தத்திற்கெதிராக ஜனநாயக ரீதியில் குரல் கொடுத்த பத்மநாபா தலைமையிலான EPRLF மீதும் தாக்குதலைத் தொடுத்து அவர்களையும் செயல்படவிடாமல் தடுத்ததும், நாளடைவில் அதன் தலைவர் பத்மனாபாவையும், அவரது சகாக்களையும் சென்னையில் வைத்து கொலை செய்ததன் மூலம், மேலும் தங்களின் பாசிசப் போக்கை உலகத்துக்கு அம்பலப்படுத்திக் கொண்டனர்.

அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் ஈழத் தமிழ் மக்களின் மரியாதைக்குரிய தலைவர் அமிர்தலிங்கம் போன்ற சாத்வீக தலைமையையும் கொன்று ஒழித்ததன் மூலம் ஈழத்தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக தங்களை தாங்களே உருவகப்படுத்திக் கொள்ள எடுத்த முடிவுதான் இந்த கொலை வெறி என்பது மெல்லப் புரியத்தொடங்கியது. இதனால் பலரது வாய்கள் மூடிக்கொண்டன. புலிகளின் ராட்சியம் தங்குத் தடையின்றி தொடர்ந்தது. உலகத்தமிழினமே இவர்களின் பின்னால் அணித்திரண்டு உள்ளது போன்ற ஒரு சூழலும் இருந்ததை மறுக்க முடியாது.

இவர்களின் கடந்த காலத் தவறுகள் மறக்கப்பட்டு, தமிழர்களின் பாதுகாப்பும், உரிமையை மீட்டெடுக்கும் கடமையும் தமிழ் மக்களால் இவர்களிடமே வழங்கப்பட்டிருந்ததும் அனைவரும் அறிந்ததே. ஆனால் இன்று நடந்ததோ நம்ப முடியாத ஒரு சோக நிகழ்வு.

ஏறத்தாழ இருபது வருடங்கள் கழித்து புலிகளின் கொடுமையான வீழ்ச்சியும், தமிழ் மக்களின் பேரழிவும் சர்வதேசத்தையும் இலங்கையை நோக்கி திரும்ப வைத்துள்ளதுடன் ஜனநாயகத்தை நேசிக்கும் பலரையும் வாய் திறக்கவைத்துள்ளது.

கடந்த காலத்தில் நாம் அனைவரும் விட்ட தவறுகளை கிண்டிக் கிளறி அதனால் ஏற்படும் நாற்றத்தில் திளைத்துக் கொண்டிருக்காமல், தவறுகளிலிருந்து பாடம் கற்று வரப் போகும் காலத்தை எமது தேசத்துக்கும் மக்களுக்கும் பொற்காலமாக்கிக் கொடுக்கும் பணியில் எவ்வாறு ஒன்றுப்பட்டுச் செயல்படப் போகிறோம் என்பதே இன்று எம்முன் உள்ள கேள்வியாகும்.

திசைக் கொன்றாக பிரிந்திருக்கின்ற இயக்கங்களையும், அவர்களைச் சார்ந்த அறிஞர் பெருமக்களையும் கீழ்கண்டவாறு பிரித்து நோக்கலாம்.

புலிகளை எதிர்த்து நின்றோர், அவர்களை அண்டி அடிப்பணிந்தோர், வேறு வழியின்றி ஆதரித்தோர், உளமார நேசித்தோர், இன்னும் அவர்கள் வழி செல்வோர்... இவர்கள் ஒருபுறம்.

அரசை எதிர்த்தோர், அரசை நம்பினோர், அரசை அண்டினோர், அரசால் அடிமைப்படுத்தப்பட்டோர், அரசின் குரலாகவே மாறிப்போனோர்.... இவர்கள் மறுபுறம்.

இப்படிப் பிரிந்து கிடக்கின்ற தமிழ் மக்கள்... சரியாகச் சொன்னால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள்... ஒன்றாகக் கரமிணைத்து களத்திற்கு வருவார்களா, உரிமையெனும் குரல் ஒலித்து?.

அனைத்ததுலகத்துக்கும் இலங்கைச் சிக்கல் ஒரு திறந்த காட்சியாகிவிட்ட நிலையில்... இத்தகைய ஒற்றைக் குரல் (திம்புவில் ஒலித்ததைப் போல) அதன் செவிகளை ஊடுருவி - அந்நாடுகளின் மனசாட்சியை உலுக்கும்; ஒரு புதிய தீர்வை எழுப்பும் என்கிற நம்பிக்கை இன்னமும் எம்போன்றோர்க்குத் தொக்கி நிற்பதற்கு காரணத்தை கற்பிக்க முடியுமா? - இலங்கைத் தமிழர்களின் இன்னல் தீர வேண்டுமென்கிற உறுதி ஒன்றைத் தவிர.

No comments:

Post a Comment