Wednesday, December 30, 2015

இரண்டு உலகமகா யுத்தங்களைச் சந்தித்த தமிழன்! உலகை விட்டுப் பிரிந்தார்

வவுனியா மாவட்டத்தின் மூத்த பிரஜையாகிய சதாசிவம் ஐயா என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் வேலாயுதம் சதாசிவம் செவ்வாயன்று குருமண்காட்டில் உள்ள 
தமது குறிஞ்சி இல்லத்தில் இறைபதம் அடைந்தார். 
இறைவனடி சேர்ந்தபோது, அவருக்கு வயது 104. இந்த வயதிலும் முதுமையின் தளர்ச்சியுடன் தானாகவே நடமாடி, தனது தேவைகளைப் பூர்த்தி செய்து நீண்ட ஆயுளுடன் வாழ விரும்புபவர்களுக்கு ஓர் உதாரண புருஷராக வாழ்ந்து காட்டியிருக்கின்றார்.
அனலைதீவு அவருடை சொந்த இடம். எட்டு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இளையவராக எட்டாவது பிள்ளையாக சதாசிவம் 1911 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி பிறந்த இவர் தனது ஏழு வயதில் தனது தாய்தந்தையரை இழந்தார்.
ஆரம்ப கல்வியை அனலைதீவில் பயின்ற இவர், பின்னர் சிங்கப்பூருக்குச் சென்று அங்கு தனது கல்வியைத் தொடர்ந்து மேற்கொண்டார். பின்னர் 1938 ஆம் ஆண்டு தாயகம் திரும்பிய அவர் அரச சேவையில் இணைந்து கொண்டார்.
உள்ளுராட்சித் திணைக்களத்தில் பணியாற்றிய இவர் 1945 ஆம் ஆண்டு வவுனியாவில் குடியேறிய பின்னர், அப்போது பட்டின சபையாக இருந்து நகர சபையாக தரமுயர்த்தப்பட்ட வவுனியா நகர சபையின் முதலாவது செயலாளராக நீண்டகாலம் பணியாற்றினார்.
இவருக்கு நான்கு பிள்ளைகள். ஆண் குழந்தையொன்று. மூன்று பெண் குழந்தைகள். தனது மனைவியை 1983 ஆம் ஆண்டு இழந்த இவர் தனது மூத்த மகளுடன் வசித்து வந்தார். வைத்தியராகப் பணியாற்றிய மகன் நோயினால் இறந்து போனார்.
ஒரு மகள் கனடாவிலும், ஒருவர் யாழ்ப்பாணத்திலும் மற்றவர் வவுனியாவிலும் வசித்து வருகின்றனர். இவருக்கு 9 பேரப் பிள்ளைகள். 9 பூட்டப்பிள்ளைகள்.
சிறந்த கல்வியறிவும், அபாரமான ஞாபக சக்தியும் கொண்ட சதாசிவம் ஐயாவுக்கு சமயம், இலக்கியம் என்பவற்றில் அதிக ஈடுபாடு உண்டு. ஆலய நிகழ்வுகளில் தவறாமல் கலந்து
கொண்டிருந்த இவருடைய ஆன்மீகச் செயற்பாடுகளுக்காகப் பலரும் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவமளித்து மகிழ்ந்துள்ளனர்.
திருவாசகம் என்றால் இவருக்கு உயிர். தினசரி அதிகாலையிலேயே எழுந்து திருவாசகப் பாடல்களை தேன்சொட்ட, பல மணித்தியாலங்கள் பாடுவார். ஆலயங்களுக்குச் செல்லத் தவறமாட்டார்.
மனதை சமநிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். கவலைகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பதே அவருடைய வாழ்வியல் இரகசியம்.
ஆங்கிலேயருடைய ஆட்சிக் காலத்தில் பிறந்து, இரண்டு உலக மகாயுத்தங்களைக் கண்டு, தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான சாத்வீகப் போராட்டம், ஆயுதப் போராட்டம் என்பவற்றையும் தரிசித்து, யுத்த நெருக்கடிகள், வாழ்வியல் நெருக்குதல்களுக்கு மத்தியிலும் சமனான மனநிலையுடன், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிச் சென்றுள்ள சதாசிவம் ஐயா ஒரு வாழ்வியல் சாதனையாளர் என்றால் மிகையாகாது.
அவருடைய ஆன்மா சாந்தியடைய இறைவன் அருள் புரிவானாக.
சதாசிவம் ஐயாவின் இறுதிக்கிரியைகள் இன்று வியாழக்கிழமை காலை பத்து மணியளவில் அவருடைய குறிஞ்சி இல்லத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது,

No comments:

Post a Comment