Tuesday, August 4, 2015

இரண்டு நாக்குப் போக்குள்ள சித்தார்த்தனை மக்கள் நிராகரிக்க வேண்டும் – அனந்தி சசிதரன்

தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கின்றவர்களை நிராகரித்து தமிழ்த் தேசியத்தில் பற்றுறுதி கொண்டவர்களை தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியத்தைச் சிதைத்து தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்படுபவர்கள் தொடர்பில் பகிரங்கமாகவே நான் பல தடவைகள் தெரிவித்திருக்கின்றேன். அதே போன்று அவர்களை மக்களுக்கும் நன்றாகத் தெரியும். ஆகவே கிடைத்திருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தை மக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்த் தேசியத்தைக் காக்கின்றவர்களிற்கு வாக்களிக்க வேண்டும்.
யாழ் சுழிபுரத்திலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலையே மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது தேர்தலில் கூட்டமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,
நீண்ட நெடிய போரில் என்னைப் போல இழப்புகளுக்கு முகம் கொடுத்த உறவுகளுக்காக எனது தெரிவைப் பயன்படுத்திக் குரல் கொடுப்பேன் என்ற வாக்கை நான் மக்களுக்கு முற்கூட்டியே வழங்கியிருந்தேன். அது மட்டுமல்ல, எனது கணவரான எழிலன் தனது தேசிய அரசியல் கடமையை எவ்வளவு பொறுப்புணர்ச்சியுடன் செய்தார் என்பதையும் எமது மக்கள் அறிந்திருந்தார்கள்.
மாவிலாறில் போரை சிறிலங்கா அரசு பெரும் எடுப்புடன் ஆரம்பிக்கும் இறுதிக்கணம் வரை சர்வதேச போர்நிறுத்தக் கண்காணிப்பாளர்களுடன் எழிலன் எவ்வாறு ஒத்துழைத்து அந்தப் போரை தடுக்க முயன்றார் என்பதற்கு போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராக இறுதியாக இருந்தசுவீடன் நாட்டைச் சேர்ந்த உல்(க)ப்ஹென்றிக்சன் போன்றவர்களே நேரடிச் சாட்சியம்.
போரின் போக்கை ஒரு இன அழிப்புப் போராக சிறிலங்கா அரசு மாற்றியதற்கும், அந்தப் போரின் முடிவின் இறுதிக் கணங்களில் கூட காயமடைந்தவர்களைப் பராமரித்துக் கொண்டிருந்த எனது கணவர் எவ்வாறு நடந்து கொண்டார். அவருக்கு நடந்தது என்ன, எம்மைச் சுற்றியிருந்த மக்களுக்கு நடந்தது என்ன என்பதற்கு நான் ஒரு சாட்சியமாக எனது தேச மக்களுக்கு எனது கடமையைச் செய்வது என்ற நோக்கத்தோடு இன அழிப்புக்கெதிரான விசாரணையைச் சர்வதேசம் மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளை ஐ.நா. மனித உரிமைச் சபையில் முன் வைத்தேன்.
உண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாகவும், வடமாகாண சபை சார்பாகவும் முதன் முதலில் ஐ.நா மனித உரிமைசபையில் நேரடியாக இனஅழிப்புக்கான சர்வதேச விசாரணையை நான்கோரும் வரைவேறு எந்ததமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினரோ, மாகாணசபை உறுப்பினரோஅங்கு கலந்து கொண்டு அதைக் கோரியிருக்கவில்லை.
என்னைக் கூட இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையைக் கோரக் கூடாது என்று திரு.சுமந்திரன் அவர்கள் தடுத்தார் என்பதை கடந்த வருடமே நான் ஊடகங்களுக்கு அம்பலப்படுத்தியிருந்தேன்.
இன அழிப்புப் போரின் தாக்கத்தை நேரடியாகத் தரிசித்தவள் என்ற வகையில் என்னோடு சர்வதேச பிரநிதிகள் பலரும் நேரடியாக மனம் திறந்து பேசும் வாய்ப்புக்கள் உருவாகின.
ஜெனிவாவில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்த போது என்னிடம் ஒரு நாட்டின் பிரதிநிதி திரு.சுமந்திரன் அவர்கள் இன அழிப்புக்கெதிரான சர்வதேச விசாரணையை சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளிடம் நேரடியாக ஏன் வலியுறுத்தவில்லை என்று கவலையுடன் தெரிவித்திருந்தார்.
உங்களைப் போல ஏன் ஏனைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நேரடியாக கலந்து கொண்டு இன அழிப்பு விசாரணையை வலியுறுத்தத் தவறுகிறார்கள் என்றும் என்னிடம் அவர்கள் கேட்டார்கள்.
மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவாஜிலிங்கம் அண்ணையும் ஜெனிவாவில் இதேவிதமான கோரிக்கையை நேரடியாக கலந்து கொண்டு முன் வைத்தார்.
உண்மையில், மாகாண சபையில் இன அழிப்பு குறித்த சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அடிகோலுபவர்களாக சிவாஜி அண்ணையையும் என்னையும் போன்ற சில உறுப்பினர்கள் தொடர்ச்சியாக உழைத்தோம். எமது உழைப்பிற்கு மேலாக எதிர்பாராத பலனாக முதலமைச்சர் மாண்புமிகு விக்கினேஸ்வரன் அவர்கள் இந்த வருடத்தின் ஆரம்பதத்தில் நிறைவேற்றிய தீர்மானம் ஒருவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், சர்வதேச சக்திகளுக்கு நாம் தெளிவாக அந்த விடயத்தை எடுத்துச் சொல்லி விட்டோம்.
ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனஅழிப்புக்கு எதிரான சர்வதேச விசாரணை கோரப்படவில்லை. இது ஒரு அப்பட்டமான அநீதி என்பதை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முதலமைச்சர் போரின் சாட்சியங்களுக்கூடாக, மக்களின் அபிலாசைகளை விளங்கிய நிலையில் தழுவிய ஒரு தீர்மானத்தை, வடமாகாணசபை ஏகமனதாக வாக்களித்து நிறைவேற்றிய ஒரு தீர்மானத்தை தனது விஞ்ஞாபனத்தில் சேர்த்துக் கொள்ளாமல் விடப்பட்டிருப்பதன் பின்னணியை எமது மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
எமது மக்கள் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இன்று சர்வதேச சக்திகளிடையேயும் குழப்பமானநிலை இருக்கிறது. ஐ.நா.சபைக்கு உள்ளேயே அதன் செயலாளர் பான்கிமூனின் அலுவலகத்துக்கு உள்ளே இருந்து கொண்டே சில சக்திகள் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை என்ற எமது கோரிக்கையை முடக்கி ஒரு உள்ளகவிசாரணையை இலங்கைக்கு உள்ளேயே நடாத்திவிட வேண்டும் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான இன்றைய சூழலில் எமது குரலாக, எமது கோரிக்கையாக எது ஒலிக்க வேண்டும், யார் தெரிவாக வேண்டும் என்பது முக்கியமாகிறது.
அதே போல எமக்குள் இருந்து எந்தக் குரல், எந்தக் கோரிக்கை ஒலிக்கக் கூடாது என்பதும் முக்கியமாகிறது.
இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையைக் கோராது. வித்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் யார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர்களுக்கு உங்கள் விருப்பு வாக்குகளைச் செலுத்த வேண்டாம். அவர்களை உள்ளிருந்தே தோற்கடிக்கயாருக்கு முடியுமோ அவர்களுக்கு உங்கள் விருப்பு வாக்குகளைத் தவறாது செலுத்துங்கள்.
வேறு வகைகளில் குழப்பமானாவர்களாக நீங்கள் சிலரைக் கருதினாலும், இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையைத் தான் கோருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்தக்கோரிக்கை தவிர்க்கப்பட்டதை தான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றும் முதலமைச்சரின் கைகளைப் பலப்படுத்துவதே காலத்தின் கட்டாயம் என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் தெளிவாக யார் உரைக்கிறார்களோ அவர்களுக்கு உங்கள் விருப்பு வாக்கைத் தயவு செய்து செலுத்துமாறு கூட்டமைப்புக்கே எமது வாக்கு என்று தீர்மானித்திருக்கும் அனைவரையும் நான் தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
இன அழிப்பில் ஆகுதியாக்காப்பட்ட எமது ஆன்மாக்களின் குரலாக நான் இதை வேண்டுகிறேன்.
முதலமைச்சர் அவர்கள் கூட, நடுநிலை நின்று, ஆனால் பூடகமாக யாரை நீங்கள் தெரிவு செய்ய வேண்டும், யாரை நிராகரிக்க வேண்டும் என்று தனது நிலைப்பாட்டைக் கூறியிருக்கிறார். நான் அதைக் கொஞ்சம் விளக்கமாகவே இப்போது சொல்லியிருக்கிறேன்.
இலங்கைப் பாராளுமன்றின் கதிரைகளை யார் நிரப்பினாலும் பரவாயில்லை ஆனால், தற்போதைய சூழலில் சர்வதேச விசாரணையை சில சிக்கலான சக்திகளுடன் சேர்ந்து ஒத்துழைத்து குழி தோண்டிப் புதைப்பவர்களை மக்கள் ஆணை பெற்றவர்களாகத் தயவு செய்து தேர்ந்தெடுக்க வேண்டாம்.
இறுதியாக நான் ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.
நான் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளிருந்தவாறே பங்குபற்ற விரும்பினேன். இதற்கான காரணம் இன அழிப்புக்கான சர்வதேச விசாரணையை மேலும் பலப்படுத்துவதற்காகச் செயற்பட வேண்டும் என்ற ஒரு நோக்கத்துக்காகவே.
பல இன்னல்களையும் சவால்களையும் சந்தித்து இன அழிப்புப் போருக்கு ஊடாக தமது வாழ்வைத் தொடரும் எமது உறவுகளுக்கு தன்மானத்துடனான, நீதியான வாழ்வையும் உரிமையையும் பெற்றுக் கொடுப்பதற்கு தொடர்ந்தும் உழைக்க வேண்டும் என்பதும் எனது நோக்கமாக இருந்தது.
எனது குரலுக்குச் செவிசாய்க்கும் நட்பு உள்ளங்களை சர்வதேசப் பரப்பில் எனது கடந்த இரண்டு வருட அரசியல் வாழ்வில் நான் கண்டது எனது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.
நான் பல பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டவாறு தான் மாகாணசபை உறுப்பினராக இருந்தவாறு எனது அரசியல் பணியை மேற்கொண்டிருக்கிறேன். பாராளுமன்ற உறுப்பினர் ஆகினால் அது எனது பாதுகாப்புக்கு மேலும் சாதகமாக அமையும் என்றும் நான் நினைத்திருந்தேன். ஆனால், இந்த வாய்ப்பு முழுமையாக நிராகரிக்கப்பட்டது. அதற்கு எடுக்கப்பட்ட ஒவ்வொரு முயற்சியும் முறியடிக்கப்பட்டது.
நான் எனது கட்சியை விட்டும், கூட்டமைப்பை விட்டும் வேறு அணியில் சார்வதற்கோ, சுயேட்சையாக நிற்பதற்கோ ஒரு துளியும் திட்டமிட்டு இருக்கவில்லை.
சுயேட்சையாக நிற்பது போன்ற ஒரு அழுத்தத்தையும் நான் பிரயோகித்துப் பார்த்தேன். ஆனால், அந்த அழுத்தமும் பலனளிக்கவில்லை. என்னில் நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள் இதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை நான் இங்கு சொல்கிறேன்.
தற்போது இருக்கும் சூழலில், இனஅழிப்புத் தீர்மானத்தை சரியாக நிறைவேற்றிய மாகாணசபையும் அதன் முதலமைச்சரும் தமிழ்மக்களின் அபிலாசைகளைக்காக குரல் கொடுக்கும் தார்மீகத்தைக் கொண்டிருப்பதால் அந்தக்கட்டமைப்புக்குள் இருந்தவாறே தொடர்ந்தும் நாங்கள் செல்ல வேண்டிய திசையைத் தீர்மானிப்போம்.
ஆனால், சர்வதேச அரங்கில் நேர்மையில்லாமல் செயல்படும், இரண்டு நாக்குப் போக்குள்ளவர்களை பாராளுமன்ற அரசியலில் இருந்து ஓரம் கட்டும் பொறுப்பு வாக்காளர்களாகிய உங்களுக்கு உண்டு என்பதையே இந்தத் தேர்தலுக்கான இறுதியும் உறுதியுமான எனது செய்தி.
மிகுதி மக்களான உங்கள் கைகளில் உள்ளது.

No comments:

Post a Comment