Tuesday, August 4, 2015

ராசபக்சேவின் வெற்றிக்காக இந்திய உளவுத்துறையால் பலியிடப்படும் ஈழத்தமிழர்கள்!

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் கேந்திர முக்கியத் துவம்மிக்க இடத்தில் அமையப்பெற்றதால் தம்வசப்படுத்துவதற்கோ அல்லது தமக்கு ஆதரவான ஆட்சித் தலைமையை உருவாக்குவதற்கோ பிராந்திய உலக வல்லரசு நாடுகள் இலங்கைத் தீவை தமது ஆடுகளமாகிக் கொண்டுள்ளன.

இவர்களின் அரசியல் விளையாட்டில் தெரிந்தே இலங்கைத் தீவின் ஆதிக் குடிகளான தமிழர்களாகிய எமது வாழ்வு பணயம் வைக்கப்பட்டு வருகின்றது. இதில் வேடிக்கையான வேதனை என்னவென்றால் எமது சம்மதமோ கருத்தோ கேட்கப்படாமலேயே எம் வாழ்வும் எதிர்காலமும் பணயமாக்கப்பட்டு வருகின்றமைதான்.
சிங்கள குள்ளநரி அரசியல் தலைவர்களிடம் தோற்றுப்போகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமது நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக எமது வாழ்வை பணயம் வைக்கும் இந்தியாவின் செயல் இன்றும் தொடர்கின்றது.
இந்தியாவின் நலன்களுக்கு எதிராக சீனாவின் ஆதிக்கத்தை சிறிலங்காவில் தாராளமாக அனுமதித்திருந்த ராசபக்சேகளின் ஆட்சியை அகற்றுவது ஒன்றே பிராந்தியப் பாதுகாப்பிற்கு தீர்வாகும் என்ற முடிவினடிப்படையில் அமெரிக்காவுடன் கைகோர்த்து கடந்த ஜனவரி-8 இல் அதனை சாதித்திருந்தது இந்தியா.
சீனா என்கிற பிராந்திய எதிரியை விரட்டப்போய் நிரந்தர எதிரியான அமெரிக்காவை சிறிலங்காவில் காலூன்ற வழிவகுத்துவிட்டிருந்தது இந்தியாவின் இந்தச் செயற்பாடு. இன்று அமெரிக்கா சார்பு நல்லாட்சியை அகற்றி மீண்டும் மகிந்தவை அரியாசனத்தில் அமர்த்தி தமது மேலாதிக்கத்தினை நிலைநாட்ட முயற்சிக்கின்றது இந்தியா.
ராசபக்சேக்களின் அரசை தமது சார்புநிலையில் வைத்திருப்பதற்காக கடந்த ஆறு ஆண்டுகளாக சர்வதேச அழுத்தங்களில் இருந்து காப்பாற்றும் பொறுப்பினை தானாக ஏற்றிருந்தது இந்திய அரசு. அழித்து நிர்மூலமாக்கி விட்டதாக இவர்களால் சொல்லப்பட்ட புலிகள் இயக்கத்திற்கு உயிர்கொடுக்கும் முயற்சியில் இந்திய உளவுப்பிரிவு அதிதீவிரமாக செயலாற்றி வருகின்றமை நடைபெறும் சம்பவங்களின் மூலம் உறுதியாகின்றது.
தமிழகத்தில் புலிகள் என்று குற்றம்சாட்டப்பட்டு ஈழத்தமிழர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. தமிழக இந்திய ஊடகப்பரப்பில் பெரும் பரபரப்புடன் இச்செய்திகள் வெளியிடப்பட்டுவருகின்றன.
இச்செய்திகள் மேலதிக புனைவுகளுடன் உடனுக்குடன் சிறிலங்காவில் சிங்கள ஆங்கில ஊடகப்பரப்பில் மேலும் பரபரப்பாக்கப்படுகின்றது. இது போதாதென்று மகிந்த ராசபக்சே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தமது பிரச்சாரத்தின் முக்கிய விடையமாக இவற்றை முதன்மைப்படுத்தி வருகின்றார்கள்.
சிங்கள் மக்களிடையே மீண்டும் புலிப் பூச்சாண்டியை காட்டி ராசபக்சேக்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்திய உளவுத்துறையால் திட்டமிட்டு அரங்கேற்றப்படுவதையே மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் உணர்த்துகின்றது.
இந்திய உளவுத்துறையின் இம்முயற்சியால் தமிழகத்தில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்களியே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் தாம் புலி முத்திரை குத்தி கைதுசெய்யப்படலாம் என்ற அச்சத்துடனே பெரும்பாலானவர்கள் இருப்பதாக அறிய முடிகின்றது.
மீண்டும் புலிகள் இயக்கம் தோற்றம் பெறுவதாக காட்டிகொள்வதற்கு இவர்களால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் நீதிகான அனைத்துலக முயற்சிகளையும் பெரிதும் பாதிக்கும். புலிப் பூச்சாண்டியானது சிங்கள வாக்குவங்கியை குறிவைத்து அரங்கேற்றப்பட்டாலும் சிங்களத் தரப்பை சர்வதேச அழுத்தங்களில் இருந்தும் காப்பாற்றும் சக்திவாய்ந்த விடையமாகக் காணப்படுகின்றது.
சிங்கள அரசை தம்சார்பு நிலையில் தக்கவைக்கும் ஒரே காரணத்தை முன்வைத்து இந்தியா எடுத்துவரும் நிலைப்பாட்டினால் அநியாயமாக எங்களது வாழ்வு மேலும் மேலும் இருட்டிற்குள் தள்ளப்படுகின்றது.
நீதிக்கான எங்கள் போராட்டத்தில் இந்தியா உதவி செய்யாவிட்டாலும் பறவாயில்லை உபத்திரம் செய்யாமல் இருந்தாலே போதும் என்ற விரக்தி நிலைக்கு உலகத் தமிழர்களாகிய நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
swe

No comments:

Post a Comment