Monday, August 3, 2015

ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு வேலை கிடையாது: பிரித்தானிய அரசு அதிரடி அறிவிப்பு

பிரித்தானியாவில் பொதுப்பணி துறையில் சேர்ந்து பணியாற்ற விரும்புவர்களுக்கு ஆங்கிலம் தெரியாவிட்டால், வேலை வாய்ப்பு வழங்க முடியாது என பிரித்தானிய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
பிரித்தானிய கேபினட் அமைச்சரான மேட் ஹேன்காக் வெளியிட்டுள்ள செய்தியில், பொது மக்களை நேரடியாக தொடர்புக்கொள்ளும் பொலிஸ் துறை, சமூக நலத்துறை, மருத்துவ துறை, கல்வித்துறை மற்றும் நகராட்சி, மாநகராட்சி துறைகளில் வேலை வாய்ப்பு பெற விரும்புவர்கள் கட்டாயம் ஆங்கிலத்தில் பேச தெரிந்திருக்க வேண்டும் என்றார்.
வெளிநாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்து பொதுப்பணி துறைகளில் பணி புரியும் மக்களுக்கு ஆங்கிலம் சரியாக பேசத்தெரியாததால், அவர்களால் பொதுமக்களின் குறை நிறைகளை கண்டறிய முடிவதில்லை.
இது தொடர்பாக புலம்பெயர்வு மசோதா ஒன்றை தாக்கல் செய்ய உள்ளதாகவும், இதனை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் நடை முறைப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுப்பணி துறையில் பணிபுரிபவர்கள் அல்லது புதிதாக பணியில் சேர விரும்புவர்கள் குறைந்த பட்சம் பள்ளி முடித்த அளவு ஆங்கிலத்தையாவது பேச வேண்டும்.
இதனை சிறப்பாக செயல்படுத்துவதற்கு அதிகாரிகள் நியமிக்கப்படுவதுடன், பணியில் இருப்பவர்கள் பொதுமக்களிடம் எவ்வாறு உரையாற்றுகிறார்கள் என்பதை கூர்ந்து கவனிப்பார்கள்.
ஏற்கனவே மேலே குறிப்பிட்ட துறைகளில் பணியில் இருப்பவர்களுக்கு ஆங்கிலம் தெரியாவிட்டால், அந்த மொழியை கற்றுக்கொள்ள கால அவகாசம் அளிக்கப்படும்.
இந்த நடவடிக்கை அதிக அளவில் பிரித்தானியாவில் குடியேறும் வெளிநாட்டினர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த உதவும் என்றும், பிரதமர் கேமரூனின் ஆலோசனைப்படி இதுபோன்ற மேலும் சில திட்டங்களை நடை முறைப்படுத்த உள்ளதாக மேட் ஹேன்காக் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment