தொலைக்காட்சி!!

Wednesday, August 5, 2015

விஜயகாந்த் மதிப்பை கெடுக்கும் மலிவான சித்தரிப்புகள்: காரணம் என்ன?

அண்மை காலங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றி இணையதள ஊடகங்களில் கொமெடியனை போல சித்தரிக்கப்பட்டு வீடியோ காட்சிகள் வருகின்றன.
சமூக வலைதளங்களில் இது எல்லோராலும் விரும்பி பார்க்கப்படுவதால், இதுக்கு ஒரு வியாபார பின்னணியோடு இணையதள ஊடகங்களும் முனைப்பு காட்டுகின்றன.
ஆனால், எதிர்காலத்தில் அரசியலில் ஒரு உயர்ந்த பதவிக்கு வர வாய்ப்புள்ள விஜயகாந்த் மீது இப்படி ஒரு பொய்யான சித்தரிப்புகளை பரப்புவதன் மூலம், மக்கள் மனதில் அவரைப்பற்றிய மதிப்பு குறையலாம்.
அது தமிழக அரசியலுக்கு ஒரு இழப்பாகத்தான் அமையும் என்று, சமூக ஆர்வலர்கள் நினைக்கின்றனர்.
காரணம், அவர் முதல்வர் ஆகாவிட்டாலும் எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டு முதலமைச்சரின் மிரட்டலுக்கு அஞ்சாமல் தவறுகளை எதிர்ப்பதே ஆரோக்கிய அரசியலுக்கு அவசியம்தான்.
ஸ்மார்ட் போனுக்குள்ளே வாழும் சில பொழுதுபோக்கிகளும் முழுநேர முகநூல் ஊழியர்களும் சமூக சீரழிவின் காரணங்களாக மாறிவருகின்றனர்.
அவர்கள் பரப்புவதில் சில நல்லதும் நடக்கிறது. ஆனாலும், அதைகூட அதன் சிறப்பு அறிந்து செய்வதாக தெரியவில்லை.
தமிழகத்தில் எம்ஜிஆருக்கு பிறகு ஒரு தனிக்கட்சி ஆரம்பித்து நிலைத்து நின்றவர் நடிகர் விஜயகாந்த்.
முதல் தேர்தலிலே (2006) அனைத்து தொகுதியிலும் போட்டியிட்ட தேமுதிக, எல்லா தொகுதியிலுமே கணிசமான வாக்குகளை பெற்று அதிமுக, திமுகவுக்கு அடுத்த நிலையில் வந்தது.
விஜயகாந்தும் விருத்தாச்சலத்தில் அமோக வெற்றிபெற்றார். மேலும் அவர் சென்னையில் நடத்திய தேமுதிக மாநாட்டில் கூடிய கூட்டம் சென்னையை ஸ்தம்பிக்க வைத்தது.
இது தமிழக அரசியல் தலைவர்களையும் திகைக்க வைத்தது. அதனால்தான், கூட்டணிகளை பெரிதாக பொருட்படுத்தாத ஜெயலலிதாவே 2011 சட்டசபை தேர்தலில் நல்ல உபாயமாக, தேமுதிகாவுக்கு அதிக தொகுதிகளை கொடுத்து கூட்டணியில் சேர்த்துவெற்றியும் பெற்றார்.
அதன்பிறகு, சட்டமன்றத்திலேயே அதிமுகவுக்கும் தேமுதிகவுக்கும் சூடான விவாதங்கள் நடந்து, கூட்டணியில் பிளவும் ஏற்பட்டது.
திமுகவோடும் சேர விரும்பாத விஜயகாந்த் தனியாக ஆளுங்கட்சியை மேடைகளில் விமர்சித்து வந்ததால், ஆளுங்கட்சியால், விஜயகாந்த் மீது அதிகமான வழக்குகள் பல மாவட்ட நீதிமன்றங்களிலும் போடப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டார். அதுவே அவர் மீதான அனுதாபத்தையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
விஜயகாந்த் காமெராவை எடுத்துவிட்டால் நடிக்க தெரியாதவர். அவருடைய யதார்த்த நடவடிக்கைகளும் உண்மையான பேச்சும், அரசியலுக்கு பொருத்தமில்லாத கொமெடியாக அமைந்துவிடுகிறது.
பிரச்சாரத்திலே மது அருந்துவதை ஒப்புக்கொண்டதும் அடிக்க கை ஓங்குவதும், நாக்கை துருத்துவதும், நிருபர்களின் சில கேள்விகளுக்கு அது பற்றி இன்னும் தெரியாது படித்துவிட்டு சொல்கிறேன் என்பதும் வழக்கமான அரசியல் தலைவர்களிடமிருந்து மாறுபட்டுவரும் செயலாக தோன்றலாம்.
ஆனாலும் ஒரு உண்மையான மனநிலையின் வெளிப்பாடு என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
வழக்கமான அரசியல் குணத்தை கடைப்பிடிப்பவர்களின் ஆட்சி திருப்தியில்லாமலும் போவதால், யதார்த்தமான மனிதர்கள் உண்மை வெளிப்பாடான ஆட்சி தந்து மக்களை திருப்தியும் செய்யலாம் அல்லவா?
விஜயகாந்த் யோகா தினத்தில் ஆசனம் செய்ததையும், மெட்ரோ ரயில் துவங்கியதை பார்வையிட்டதையும் விஜயகாந்த் கொமெடி என்ற தலைப்பிட்டே போடுவது போன்ற அற்ப ரசனைகளை உருவாக்குவதை ஊடகங்கள் இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment