தொலைக்காட்சி!!

Monday, August 3, 2015

கூடப்பிறந்த சகோதரியை வல்லுறவுக்கு உட்படுத்திய 16 வயது சகோதரனுக்கு 5 வருட கடூழியச் சிறை

சொந்த சகோதரியாகிய 12 வயதுடைய சிறுமியை 16 வயதுடைய அவரது கூடப்பிறந்த சகோதரன் 8 வருடங்களுக்கு முன்னர் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில் சகோதரனுக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், 5 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இந்த வழக்கு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே, இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் 2007 ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதனையடுத்து, 12 வயது நிரம்பிய கூடப்பிறந்த சகோதரியை பாலியல் வன்புணர்வு புரிந்ததாக அவருடைய சொந்த சகோதரனாகிய 16 வயதுடைய சிறுவனுக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றம் சுமத்தப்பட்டு, யாழ் மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.
பாதிக்கப்பட்ட பெண் (இப்போது அவருக்கு 20 வயது. சகோதரனுக்கு வயது 24.  இன்று அவர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
அப்போது, எதிரிக் கூண்டில் நின்றவரைக் காட்டி, அவர் தனது மூத்த சகோதரன் என்றும் அவர் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும், அதனைக் கண்ட தனது தந்தையார், தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தியதற்காக, தனது சகோதரனை அடித்ததாகவும் தனது சாட்சியத்தில் அந்தப் பெண் தெரிவித்தார்.
இதனையடுத்து எதிரி, தான் பாலியல் வன்புணர்வு குற்றம் செய்ததை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
அப்போது எதிரி தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, குற்றச் செயல் இடம்பெற்றபோது, எதிரிக்கு 16 வயது. இந்த வழக்கின் விசாரணை காலத்தில் அவர் 3 வருடங்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
அத்துடன், பதினாறு வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட பதின்பாராயமுடைய ஆண் மகன் ஒருவர் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டால், அவருக்கு தண்டனை குறைப்பு உள்ளது என்று சுட்டிக்காட்டி, எதிரிக்கு குறைந்த பட்ச தண்டனை வழங்க வேண்டும் என விண்ணப்பம் செய்தார்.
ஆனால் அரச சட்டத்தரணி, திருமதி நளினி சுபாகரன் சொந்த சகோதரி மீது பாலியல் குற்றம் புரிந்த எதிரிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நீதிபதியிடம் கோரினார்.
அத்துடன். பாதிக்கப்பட்ட பெண் சத்தியப் பிரமாணத்தின் அடிப்படையிலேயே, தனக்கு நேர்ந்த குற்றச் செயல் குறித்து, சாட்சியமளித்துள்ளார். கூடப்பிறந்த சகோதரன் தன்னை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகவும் அவர் தெளிவாக சாட்சியமளித்துள்ளார்.
இதனையடுத்தே, எதிரி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என்று சட்டம் பரிந்துரைக்கின்றது.
குறைந்தபட்ச தண்டனை பரிந்துரைக்கப்படவில்லை. எனவே, எதிரிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் சமர்ப்பணம் செய்தார்.
இதனையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப்பில் தெரிவித்ததாவது:
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரும், குற்றம் சுமத்தப்பட்டவரும் கூடப் பிறந்த சகோதரர்கள். எதிரி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணும் தனது சகோதரன் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என்று நீதிமன்றத்தில் அளித்த சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.
விசாரணை நடைபெற்ற போது, எதிரி தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 ஆண்டுகள் விளக்கமறியல் காலமும் கவனத்திற் கொள்ளப்படுகின்றது.
எதிரி 16 வயதிலேயே குற்றம் புரிந்தார் என்பதும் கவனத்தில் எடுக்கப்படுகின்றது. இருப்பினும் கூடப் பிறந்த சகோதரியை காட்டுமிராண்டித்தனமாக வன்புணர்வு செய்ததைக் குற்றச் செயலாகவே மன்று கருதுகின்றது.
குற்றம் புரிந்தபோத எதிரி 16 வயது சிறுவன் என்பதால் அவருக்கு 5 ஆண்டுகள் கடூழியச்சிறைத்தண்டனை விதிக்கப்படுகின்றது என்றார் நீதிபதி இளஞ்செழியன்.
அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, எதிரி 25 ஆயிரம் ரூபா நட்டயீடு செலுத்த வேண்டும் என்றும், தண்டப்பணமாக, அவர் ஐயாயிரம் ரூபா செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்

No comments:

Post a Comment