Tuesday, July 21, 2015

ஏட்டுச்சுரக்காய் கறிக்குதவுமா?புத்தக சட்டமும் நடைமுறை சாத்தியமும்!


சுயநிர்ணயம் = தனி நாடு என்ற கணிப்பில் இந்தப் பதிவு எழுதப்பட்டுள்ளது. இது தவறானது. மேலும் ஒற்றையாட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்வதை 6ஆவது திருத்தம் தடை செய்யவில்லை. 
என என்னை நோக்கி சில விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.... அது குறித்து எனது விளக்கத்தை முன்வைக்கலாம் என நினைக்கிறேன்...

சுயநிர்ணயம் = தனி நாடு என்ற கணிப்பில் இந்தப் பதிவை நான் எழுதவில்லை...

அதற்கமைவாக ஒற்றை ஆட்சி சமஸ்டி ஆட்சி, இருதேசம் ஒருநாடு, சுயநிர்ணய உரிமை, தன்னாட்சி என்ற கோட்பாடுகள் இந்தப் பாராளுமன்றில் அதன் சட்டதிட்டங்களுக்கு அமைவாக சாத்தியமா? பிரிக்கப்பட முடியாத, பராதீனப்படுத்தப்படாத இறைமையை உடைய ஒற்றை ஆட்சிக் குடியரசின் பாராளுமன்றில் சுயநிர்ணய உரிமை, தன்னாட்சி, ஒரு நாடு இருதேசம் என்பவை சாத்தியமா? சாத்தியம் இல்லாவிடின் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, இவற்றை செய்ய மாட்டோம் என்று சத்தியப் பிரமாணம் செய்துவிட்டு, அதனை எவ்வாறு சாத்தியப் படுத்தவது, அதில் ஏற்படப்போகும் பிரச்சனைகள் என்ன என்பது பற்றி தமிழ் கட்சிகள் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளிப்படையாக முன்வைக்குமா? என்ற கேள்விகள் எழுப்பினேன்

இந்தக் கேள்விகளுக்கு மழுப்பல் பதில்கள் இல்லாமல் ஒற்றை ஆட்சிக்கு உட்பட்ட பாராளுமன்றில் அதற்குரிய அனைத்து பரிமானங்களையும் ஏற்று சத்தியம் செய்து பாராளுமன்ற படிகளில் ஏறும் கட்சிகள் மக்களுக்கு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவுபடுத்த வேண்டும். வெறுமனே கவர்ச்சிகரமான கோசங்கள் விடுதலையை பெற்றுத் தரப் போவதில்லை... எனச் சொல்லி இருந்தேன்...

ஒற்றை ஆட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்வது அரசியல் அமைப்புக்கு முரண் என்றோ அல்லது செய்யக் கூடாது என்றும் நான் சொல்லவில்லை...

1. தேசம், சுயநிர்ணயம், தாயகம் போன்றவற்றைக் கோருவது தனி நாட்டைக் கோருவதாகாது. தேசமொன்று தனக்கெனவொரு தனி நாட்டை அமைப்பதன் மூலமாக தனது நோக்கங்களை அடைந்து கொள்ள முடியும். இது குறித்தும் எனக்கு எந்த முரண்பாடும் கிடையாது..

2. அதே வேளை ஓர் அரசிற்குட்பட்டு சுய ஆட்சி (autonomous self-government) மூலமாகவும் அந்த நோக்கங்களை அடைந்து கொள்ளலாம். இந்தக் கருத்திலும் எனக்கு முரண்பாடு கிடையாது...

இங்கு எனது பிரச்சனை, கேள்வி என்னவென்றால் தத்துவார்த்த ரீதியாகவும், சில நாடுகளில் நடைமுறையிலும் உள்ளன அதிகாரப் பரவலாக்க அலகுகள் சிறப்பாக தொழிற்படுகின்றன....

கனடாவின் கியுபெக்கிலும், பிரித்தானியாவின் ஸ்கொட்லாந்திலும் சரியாக இருக்கலாம்... உலகின் சிறப்பான சமஸ்டி நாடுகளின் உதாரண வரிசையில் கனடாவுக்குள் கியுபெக் வருகிறது...

பிரித்தானியாவின், Great Britain என்ற பதத்துள் ஸ்கொட்லன்ட் வருகிறது... எழுதப்படாத அரசியல் யாப்பை கொண்டுருந்தாலும் தன்னுடன் இணைந்திருக்கும் பிரதேசங்களின் உரிமை குறித்து ஒப்பீட்டளவில் ஜனநாயக விழுமியங்களைக் கொண்டுள்ள பிரித்தானியா, பிரிந்து செல்லும் உரிமை தொடர்பாக, கடந்த பொதுஜன வாக்கெடுப்பை வெற்றிகராமாக நடாத்தி முடித்ததுடன், மெலும் அதிகாரங்களை பகிர இணங்கி இருக்கின்றது...

ஆனால் இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கை உயர்நீதிமன்ற தீர்ப்பு பிரித்து வைத்தது...

வடகிழக்கு தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டைக் கூட இலங்கை அரசமைப்பிற்கு உட்பட்ட நீதிமன்றம் ஏற்க மறுத்தது...

மாகாண சபைகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட காணி பொலிஸ் அதிகாரங்களைக் கூட இலங்கை ஒற்றை ஆட்சிக் குடியரசு கொடுக்க மறுக்கிறது...

அவ்வாறு கொடுத்தால் அது autonomous self-government அமைந்து விடும் என இலங்கை ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள்...

விடுதலைப் புலிகளால் கோரப்பட்ட இடைக்கால நிர்வாக சபையையும், அன்றைய அரசாங்கம் நிராகரித்தது...

ஒற்றை அட்சிக்குரிய அரசில் இவை எதுவும் சாத்தியப்படாது என இலங்கையின் பெரும்பான்மையின சட்ட வல்லுணர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள்... அது தொடர்பான இலங்கையின் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் விளக்கங்களும் நம் கண்முன்னே உள்ளன... இடைக்கால நிர்வாக சபைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு, வடக்கு கிழக்கு பிரிப்புக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய சட்ட விளக்கம் என்பன இதற்கு சிறந்த உதாரணங்கள்..

கடந்த காலத்தில் நான் இங்கு பெயர் குறிப்பிடவில்லை எத்தனை பாராளுமன்ற உறுப்பினர்கள், அவர்கள் ஆற்றிய உரை குறித்து இலங்கை புலனாய்வுப்பிரிவுக்கு விளக்கம் அளிக்க வேண்டி இருந்தது... அவற்றிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் வழக்குத் தொடர முற்பட்ட போதெல்லாம், அரசாங்கத்துடன் விட்டுக் கொடுப்பை செய்யவேண்டியேற்றபட்டது... எத்தனை தரம் பாராளுமன்றத்தில் பயன்படுத்தப்பட்ட சொற்பிரயோகங்கள் கன்சாட்டில் இருந்து நீக்கப்பட்டன...

அதனால் தான் சொல்கிறேன்... பலர் சொன்ன, சொல்கின்ற விடயங்கள் எழுதப்படட்ட தத்துவங்களாக இருக்கின்றன..., ஜனநாயகப் பண்புகளை ஏற்றுக் கொண்டுள்ள சில நாடுகளில் நடைமுறையிலும் இருக்கின்றன.... ஆனால் இலங்கைப் பாராளுமன்ற தேர்தலில் பங்கு கொண்டு, உறுப்பினர்களாகி தாம் மக்கள் முன் பிரசாரப்படுத்தும் கோட்பாடுகளை எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறார்கள், அதனை மக்கள் முன் தெளிவுபடுத்துவார்களா? என்பதுவே எனது கட்டுரையின் சாராம்சம்....

No comments:

Post a Comment