Tuesday, July 28, 2015

பிரித்தானியாவில் வெளிநாட்டினர்கள் வீடுகள் வாங்குவதை தடுக்க வேண்டும்: பிரதமர் கேமரூன் அதிரடி அறிவிப்பு

கொள்ளை மற்றும் பண மோசடி மூலம் பிரித்தானியாவில் சொத்துக்களை வாங்க வெளிநாட்டினர்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என பிரதமர் கேமரூன் அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரித்தானிய பிரதமரான டேவிட் கேமரூன் மற்றும் அந்நாட்டை சேர்ந்த 31 தொழிலதிபர்கள் மலேசியா, இந்தோனேஷியா, வியட்னாம் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
சிங்கப்பூரில் அந்நாட்டு பிரதமருடன் நடக்கவிருக்கும் கூட்டத்தில் பிரதமர் கேமரூன் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
உலகம் முழுவதும் கொள்ளை மற்றும் பண மோசடிகளில் ஈடுபட்டு அதன் மூலம் பெறப்பட்ட ஊழல் பணத்தை கொண்டு பிரித்தானியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் வாங்குவது அதிகரித்து வருகிறது.
அந்நிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர் ஊழல் பணத்தை சேமித்து வைக்கும் ஒரு சொர்க்கமாக பிரித்தானியா மாறுவதை தடுக்க வேண்டும்.
லண்டன் நகரில் சுமார் 36 ஆயிரம் சொத்துக்கள் உள்பட நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் சொத்துக்கள் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் நபர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் சொத்துக்களின் மதிப்பு மட்டும் சுமார் 122 பில்லியன் பவுண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருட இறுதிக்குள் அல்லது அடுத்த வருட தொடக்கத்தில், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களின் சொத்து பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளதாக பிரதமர் கேமரூன் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
வறுமை எதிர்ப்பு நிறுவனமான ‘ஒன்’ கடந்த 2014ம் ஆண்டு வெளியிட்ட புள்ளிவிபரத்தில், ஊழல் மற்றும் லஞ்சத்தின் மூலம் ஏழை நாடுகளிலிருந்து ஆண்டுக்கு சுமார் 600 பில்லியன் பவுண்டுகள் வெளிநாடுகளுக்கு செல்வதாக தெரிவித்துள்ளது.
இதனை தடுக்கும் விதத்தில் பிரித்தானியாவில் மட்டுமின்றி, சர்வதேச நாடுகளும் தங்கள் தேசத்தில் பண மோசடி செய்து சொத்துக்கள் வாங்கும் வெளிநாட்டினர்களின் முயற்சியை முறியடிக்க அனைத்து தலைவர்களும் முன் வர வேண்டும் என தனது ஆசிய சுற்றுப்பயணத்தில் கேமரூன் அறிவிப்பார் என பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment