Thursday, July 23, 2015

ஸ்பெயின் நாட்டில் புதிய சட்டம்: ஆண், பெண் திருமண வயது 14-லிருந்து 16 ஆக சட்டப்பூர்வமாக உயர்த்தியுள்ளது அந்நாட்டு அரசு

ஸ்பெயின் நாட்டில் ஆண், பெண் சட்டப்படி திருமணம் செய்யக்கூடிய வயதை அந்நாட்டு அரசாங்கம் அதிரடியாக உயர்த்திய புதிய சட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளிலேயே 14 வயதில் சட்டப்படி திருமணம் செய்யக்கூடிய வழக்கம் ஸ்பெயின் நாட்டில் மட்டுமே பல வருடங்களாக இருந்து வந்துள்ளது.
பிரித்தானியா, ஜேர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் ஆண், பெண் இருவரும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்யும் வயது 16 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயினில் திருமண வாழ்க்கை பற்றிய போதிய அனுபவம் மற்றும் அறிவு இல்லாததால், 14 வயதில் செய்யப்படும் பெரும்பாலான திருமணங்கள் வெற்றிகரமாக நீடிக்கவில்லை என்பது அண்மையில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனினும், திருமண வயதை உயர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என கடந்த 2013ம் ஆண்டே அறிவித்திருந்தபோதும், இன்று தான் அதனை அரசு செயல்படுத்தியுள்ளது.
இன்று முதல் அமலுக்கு வரும் புதிய சட்டத்தின் படி, ஆண், பெண் இருவரும் திருமணம் செய்யக்கூடிய வயதை 14-லிருந்து 16 ஆக சட்டப்பூர்வமாக உயர்த்தியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை குழந்தைகள் நல அமைப்புகள் உள்ள பல அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் வரவேற்று வருகின்றன.
கடந்த 2000 முதல் 2014 ஆண்டுகள் வரை சுமார் 365 திருமணங்கள் 16 வயதிற்கு கீழ் நடந்துள்ளன.
தற்போது புதிய திருமண வயது வரம்பு சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால், பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றி உள்ளதாக ஸ்பெயின் அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment