Tuesday, June 30, 2015

பிரித்தானிய மகாராணியின் சொத்து எவ்வளவு? வியக்கவைக்கும் விரிவான தகவல்கள்

பிரித்தானிய நாட்டின் மகாராணியான இரண்டாம் எலிசபெத்தின் சொத்துக்கள் தொடர்பான வியக்கவைக்கும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
பிரித்தானிய நாட்டில் வெளியாகும் சண்டே டைம்ஸ் என்ற பத்திரிகை ‘2015ம் ஆண்டின் பணக்காரர்களின் பட்டியலை’ அண்மையில் வெளியிட்டது.
இந்த பட்டியலில், மகாராணிக்கு சுமார் 340 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இது கடந்தாண்டை விட சுமார் 10 மில்லியன் பவுண்டுகள் அதிகரித்துள்ளது.
ஆனால், இவ்வளவு சொத்துக்களும் மகாராணிக்கு எப்படி, எங்கிருந்து வருகிறது?
பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத் மற்றும் அவர்களது அரசு குடும்பத்திற்கு இரண்டு வகையில் வருமானம் வருகிறது.
ஒன்று, மகாராணி தன்னுடைய தனிப்பட்ட வருமானத்தின் மூலம் ஒரு பெருந்தொகையை ஆண்டுதோறும் ஈட்டுகிறார்.
இரண்டாவதாக, பிரித்தானிய அரசாங்கம் மகாராணிக்கு ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை பொது நிதியாக வழங்கி வருகிறது.
அதாவது, அரசு குடும்பத்திற்கு சொந்தமான Crown Estate என்கின்ற வர்த்தக மூலதனத்திலிருந்து வருடந்தோறும் அரசிற்கும், அரச குடும்பத்திற்கும் மில்லியன் பவுண்டுகளில் வருமானம் கிடைக்கிறது.
இந்த கிரவுன் எஸ்டேட் என்பது 18,454 ஹெக்டேர்கள் அளவில் வர்த்தக, விவசாய மற்றும் குடியிருப்பு பகுதிகளை உள்ளடக்கியது.
இந்த கிரவுன் எஸ்டேட்டின் பெரும் பகுதி லண்டனில் இருந்தாலும், எஞ்சிய பகுதிகள் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் அமைந்துள்ளது.
கடந்த 1760ம் ஆண்டில் பிரித்தானியாவை ஆண்ட மூன்றாம் ஜார்ஜ் என்ற மன்னர் அரசாங்கத்துடன் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டார். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், கிரவுன் எஸ்டேட்டிலிருந்து வரும் வருமானம் அரசாங்க கஜானாவிற்கு செல்லும் என்றும், அதில் 15 சதவிகிதம் அரச குடும்பத்திற்கு செல்லும் வகையில் ஒப்பந்தம் இடப்பட்டது.
அரச குடும்பத்திற்கு சொந்தமான கிரவுன் எஸ்டேட்டிலிருந்து அரசாங்கத்திற்கு வருமானம் செல்வதால், மன்னரோ அல்லது மகாராணியோ அரசாங்கத்திற்கு ஆகும் செலவு மற்றும் கடன்களுக்கு தேவையான நிதியை செலுத்த தேவையில்லை.
பிரித்தானியா நாட்டிற்கு மன்னராக அல்லது ராணியாக பட்டம் சூட்டிக்கொள்ளும் ஒவ்வொருவரும் இந்த ஒப்பந்தத்தை புதுப்பித்து கொள்வார்கள்.
அதேபோல், இந்த எஸ்டேட் முழுவதும் அரச குடும்பத்திற்கு சொந்தமாக இருந்தாலும், அதனை அவர்களால் விற்பனை செய்ய முடியாது. எஸ்டேட்டிலிருந்து வரும் வருமானத்தை மட்டுமே அவர்கள் அனுபவிக்க முடியும்.
சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில், கடந்தாண்டு மட்டும் கிரவுன் எஸ்டேட்டிலிருந்து வரலாறு காணாத வகையில் அரசாங்கத்திற்கு சுமார் 285 மில்லியன் பவுண்டுகள் வருமானமாக கிடைத்துள்ளது.
வருமானம் அதிகமாக உள்ளதால், மகாராணிக்கு வழங்கப்படும் பொது நிதியின் தொகையை விட கூடுதலாக 2 மில்லியன் பவுண்டுகள் அடுத்தாண்டு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
சுமார் 11.5 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள இந்த கிரவுன் எஸ்டேட் மூலமாக கிடைக்கும் வருமானத்தில் மகாராணிக்கு 15 சதவிகிதம், அதாவது 37.9 மில்லியன் பவுண்டுகளை கடந்தாண்டு அரசாங்கம் வழங்கியது.
இந்த 37.9 பவுண்டுகளில் இதுவரை 35.7 மில்லியன் பவுண்டுகளை மகாராணி செலவு செய்துள்ளார்.
மகாராணியின் செலவுகளில் அரண்மனையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் காவலர்களின் ஊதியம், அரண்மனையை பராமரிப்பது, வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்வது, அரண்மனைக்கு தேவையான பொருட்களை வாங்குவது உள்ளிட்ட செலவுகள் அடங்கும்.
மேலும், மகாராணியின் தனிப்பட்ட வருமானமாக, தனியார் நிறுவனங்களில் தனக்கு உள்ள பங்குகள், Duchy of Lancaster வர்த்தக மூலதனத்திலிருந்து வரும் வருமானங்களை சேர்த்து கடந்தாண்டு மட்டும் சுமார் 13.3 மில்லியன் பவுண்டுகள் மகாராணிக்கு வருமானமாக கிடைத்துள்ளது.
இது தவிர, மகாராணியின் தனிப்பட்ட முறையில் சேகரித்து வரும் விலை உயர்ந்த கார்கள், ஆபரணங்கள், ஓவியப்பொருட்கள் என மில்லியனுக்கும் அதிகமான பொருட்கள் உள்ளன.
இவற்றின் மதிப்பு 10 பில்லியன் பவுண்டுகளாக இருந்தாலும், இது மகாராணியின் சொத்து பட்டியலில் சேராது. அரச குடும்பத்திற்கு அடுத்தடுத்து மன்னராக, மகாராணியாக வருபவர்கள் அதனை உபயோகம் மட்டுமே செய்துக்கொள்ளலாம்.
இவ்வாறு ஆண்டுதோறும் பெரும்தொகையை அரசாங்கத்திடமும் தன்னுடைய சொந்த வருமானத்தின் மூலமாகவும் சுமார் 340 மில்லியன் பவுண்டுகள் சொத்து இருப்பதாக பத்திரிகைகள் தெரிவித்தாலும், மகாராணியின் சொத்துக்கள் இதனை விட கூடுதலாகவே இருக்கும் என்ற கருத்தையும் தெரிவித்துள்ளன.
ஏனெனில், பிரித்தானிய மகாராணியின் சொத்துக்களை அதிகாரப்பூர்வமாக பொது மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்ற வரை முறை அரசு குடும்பத்திற்கு பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment