Friday, June 19, 2015

பகிரங்க கடிதம் 01 (கௌரவ. பா.உ. சுமந்திரன் அவர்கட்கு,)

                                                                                              கம்பன் கழகம்,
                                                                                             இல.12, இராமகிருஷ்ண தோட்டம்,
                                                                                                  கொழும்பு-06.
                                                                                        15.06.2015.

கௌரவ. ம.ஆ. சுமந்திரன் அவர்கட்கு,
பாராளுமன்ற உறுப்பினர்.
கொழும்பு.

திருமிகு. சுமந்திரன் அவர்கட்கு,
வணக்கம்,

நலம் வேண்டிப் பிரார்த்திக்கிறேன்.
கம்பன் விழாவில் சந்தித்ததைத் தவிர,
தங்களுடன் நேரடி அறிமுகம் ஏதும் இல்லாதவன் நான்.
எனினும், தூர இருந்து இனநலம் நோக்கிய தங்களது செயற்பாடுகளை,
நீண்டநாட்களாய்க் கவனித்து வருகிறேன்.
அவ்வடிப்படையிலேயே இன்று இக் கடிதத்தினை வரைகிறேன்.

******

நடந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர்,
அரங்கேறிவரும் தமிழர் சார்பான அரசியல் நகர்வுகள் கவலை தருகின்றன.
காலாகாலமாகச் செய்து வந்த தவற்றினை,
மீண்டும் தமிழ்த்தலைமைகள் செய்ய விழைகின்றனவோ? என்று,
ஐயப்படவேண்டியிருக்கிறது.
நம் தேசத்தின் இன முரண்பாட்டில்,
தமிழர்க்குச் சார்பான சூழ்நிலை தோன்றும்போது நம் தலைவர்களும்,
சிங்களவர்களுக்குச் சார்பான சூழ்நிலை தோன்றும்போது அவர்களது தலைவர்களும்,
யதார்த்தம் விளங்காமல் உச்சாணிக்கொம்பில் ஏறிநின்று,
வீணான பிடிவாதங்கள் பிடித்து பிரச்சினைகளை வளர்த்ததும்,
சேதங்களை உண்டாக்கி இனங்களைச் சிதைத்ததுமே வரலாறு.

******

நமது தமிழ்த் தலைவர்களும் இயக்கத் தலைவர்களும் கூட,
இதனையே காலாகாலமாகச் செய்து வந்தனர்.
இதனால் கடந்த காலங்களில் நாம் அடைந்த இழப்புக்களை அனைவரும் அறிவர்.
எடுத்துக் கொண்ட காரியத்தின் வலிமை, நம் வலிமை, எதிரியின் வலிமை,
இருசாராருக்குமான நட்பின் வலிமை என்பவற்றைக் கணக்கிடாது,
வெறும் உணர்ச்சிவயப்பாட்டிற்கு இடம் கொடுத்து செயற்பட்டதே,
நமது இன்றைய அவல நிலைக்குக் காரணம் என்பது என் கருத்து.

******

இன்றும் நம் தலைமை,
கடந்த கால வரலாற்றின் அனுபவப்பதிவு ஏதுமின்றி,
தொடர்ந்தும் பழைய பாதையில் நடைபோடத் தலைப்படும் அவலத்தைக் காணும்போது,
இன்னும் என்னென்ன இழப்புக்களை நாம் சந்திக்கப்போகிறோமோ? என மனம் அஞ்சுகிறது.
அது நோக்கியே இக்கடிதத்தினைத் தங்களுக்கு வரைகிறேன்.

******

இன்றைய நிலைமையில் கூட்டமைப்புக்குள்,
நிதானமும், வலிமையும், செயல் திறனும் உடையவராய்த் தாங்கள் பதிவாவதை உணர முடிகிறது.
சூழ்நிலைகளை அறிந்து அறிவாற்றலோடு செயற்பட முனையும்,
உங்களின் யதார்த்த சிந்தனை மகிழ்வு தருகிறது,
ஆனால், உங்களின் அந்த நிதர்சனமான தீர்க்கதரிசனத்தை  உள்வாங்க முடியாமல்,
பலரும் உங்கள் மீது பகை வலை வீச முனைவதைக் கண்டு வருந்துகிறேன்.
மக்கள் உணர்ச்சிகளை வீணே கிளப்பி அரசியல் செய்யும்,
பழைய முறைமையை இன்றும் சிலர் கையாள நினைப்பது, அதிர்ச்சி தருகிறது.
அத்தகையோரின்  முயற்சிகளை முறியடித்து,
நம் இனத்தைச் சோர்வின்றி நெறிசெய்யவேண்டும் என,
தங்களைக் கோருவதே என் கடிதத்தின் நோக்கம்.

******

தற்போதைய அரசியல் சூழ்நிலைகளில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விடயங்கள்:
  • வேறுபட்டு நின்று இதுவரை இனபேதத்தை வளர்த்துவந்த இரு பெரிய பேரினக்கட்சிகளும் ஒன்றுபட்டிருக்கும்  கிடைத்தற்கரிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பது.
  • அவர்தம் வெற்றிக்குத் தமிழர்தம் ஆதரவு காரணமானதாலும், உலகச் சூழ்நிலையால் தமிழர்தம் பிரச்சினைகளை ஒப்பவேண்டிய சூழ்நிலை உருவாகியிருப்பதாலும்  இனத்தீர்வு பற்றிய முயற்சிகளில்  புதிய சிங்களத் தலைமை தமது நேர்மையை நிறுவ முனைந்து நிற்பது.
  • இனவாதிகளின் எதிர்ப்பைப் புறந்தள்ளி புதிய சிங்களத் தலைமை தமிழ்மக்களின் பிரச்சினையைத் தீர்க்கும் அடையாளங்களை வெளிப்படுத்தி நிற்பது.  
  • அண்மைக்காலமாக தமிழர் சார்பாக இயங்கி வரும் நாடுகளின் ஆளுமைக்குள் இலங்கை அரசியல் வந்திருப்பது.
  • ஒருமித்த சிங்களத்தலைமையும், ஒருமித்த தமிழ்த்தலைமையும் உருவாகிப் பலம் பெற்று நிற்பது.


இவை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு கிடைத்திருக்கக் கூடிய வரப்பிரசாதங்கள்.
கழிந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும்,
இச்சூழ்நிலை சிதைந்து வருவதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்நிலையில் எமது அரசியல் நகர்வு உணர்ச்சிகளைக் கடந்து,
அறிவு சார்ந்து நிதானமாக எடுக்கப்படவேண்டியது அவசியத்திலும் அவசியம்.

******

தற்போதைய பேரினத்தலைமைக்கு இருக்கக் கூடிய,
யதார்த்த சிரமங்களை நாம் விளங்கியாகவேண்டும்.
இன உணர்வைத் தூண்டி அரசியல் செய்ய,
சில பேரினவாதிகள் கடுமையாக முனைந்து வரும் இன்றைய நிலையில்,
தமிழர் சார்பான கோரிக்கைகளை உடனடியாகவும் முழுமையாகவும்,
இன்றைய அரசு நிறைவேற்ற வேண்டும் என நாம் நினைப்பது தவறென்றேபடுகிறது.
ஏதோ நம் கைக்குள் இன்றைய அரசு அகப்பட்டு விட்டாற்போல் காட்டி,
நம்மால் வெளியிடப்படும் அறிக்கைகளும், பேச்சுக்களும், 
சிங்கள இனவாதிகளைப் பலப்படுத்தவே செய்யும் என்பது திண்ணம்.

******

அதுமட்டுமன்றி,
உலக அரசியலில் வலிமை பெற்றிருக்கும்,
நம் சார்பான பிராந்திய, உலக வல்லரசுகள்,
இலங்கை அரசின் புதிய மாற்றத்தை வரவேற்கத் தொடங்கியிருக்கின்றன.
அத்தோடு அவ் வல்லரசுகள்,
இலங்கையின் தமது சார்பான மாற்றத்தைக் கருத்திற்கொண்டு,
இலங்கை அரசு பற்றிய மென்மைப் போக்கை,
கடைப்பிடிக்கவும் தொடங்கியிருக்கின்றன.
ஐ.நா. சபையில் போர்க்குற்ற பிரேரணை தள்ளி வைப்பில் அமெரிக்காவின் முயற்சி.
இலங்கைக்கான இந்தியப் பிரதமரின் வருகை என்பவை,
மேற்கருத்திற்கான கட்டியங்கள்.

******

இதைக் கூட உணரமுடியாமல் நாம் நம் வாக்குப்பலத்தாற்றான்,
இன்றைய அரசு அமைந்தது என்று கூறி,
தேவையற்ற வாய்ச்சவடால்கள் மூலம்,
அரசை நிர்ப்பந்திப்பதாய்க் காட்ட நினைந்து,
மூக்கில் குத்துப்பட முனைந்து வருகிறோம்.
வல்லரசுக்களைப் பொறுத்தவரை,
தம் சார்பான நகர்வுகளே அவர்களுக்கு முக்கியமானவை.
எமது பிரச்சினை அவர்களுக்கு இரண்டாம் பட்சமே.
இது புரியாமல் வீண் பிடிவாதங்கள் பிடித்து,
கிடைத்தற்கரிய இன்றைய சூழலை நாம் சேதப்படுத்திவிடக் கூடாது.
எமது கடும்போக்கால் சிங்களத் தலைமையின் பகைமையை நாம் மீண்டும் பெறுவதோடு,
நமக்கு ஆதரவான வல்லரசுச் சக்திகளையும் இழக்க நேரிடும்,
நமது கோரிக்கை அனைத்தையும் நூறு நாள் ஆட்சிக்குள் புதிய அரசு,
நிறைவேற்றிவிடும்  என நினைத்தது நம் அறியாமை.

******

தற்போதைய புதிய அரசின் தமிழர் சார்பான சில நகர்வுகளே,
சிங்கள இனவாதிகளைத் தூண்டி இருப்பதை நாம் உணரவேண்டும்.
நமக்கான நீதியை நாம் கோருவதில் தவறில்லை தான்.
ஆனால் ஒன்று.
இறந்தகால சம்பவங்களுக்கான தீர்வு கிடைப்பதை விட,
வருங்கால வாழ்வுக்கான தீர்வைப் பெறுவதே மிக முக்கியம்.
இன்றைய சூழ்நிலை அதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
ஐ.நா.வில் நம்மைப் பற்றிய பிரேரணை ஒத்தி வைப்பிற்கு மட்டுமே ஆளாகியிருக்கிறது.
இன்றைய புதிய அரசு தன்னை நிதானப்படுத்திக் கொள்ள,
அந்த கால அவகாசத்தை நாமும் வழங்குவதில் தவறில்லை என்றே படுகிறது.

******

உடனடியாக ஐ.நா. விசாரணை உட்பட்ட,
நமது அத்தனை கோரிக்கைகளுக்கும் இன்றைய அரசு செவிசாய்த்தால்,
வரப்போகும் தேர்தலில் இவ்வரசு பேரினவாதிகளால் தூக்கி எறியப்படும் என்பது நிதர்சனம்.
அதன் பின் வரப்போகும் இனபேதத் தலைமையோடு நாம் எதனையும் சாதிக்க முடியாது.
இது நாம் கற்ற இறந்தகாலப் பாடம்.
கடந்த காலத்தில் ஒரு ஆளுநரைக்கூட மாற்றமுடியாமல்,
நாம் பட்ட அவலத்தை அதற்குள் எப்படி மறப்பது?
கைகோர்க்க வருகிறவர்களை உதறிவிட்டு,
பின் கையேந்தி நிற்கும் அவல நிலை தோன்றும்.
இந்நிலையை உணர்ந்து,
ஐ.நா. விசாரணை பிற்போடப்பட்டமையை,
முன்பு தாங்கள் வரவேற்றதை அறிவார்ந்த செயலென்றே கருதினேன்.

******

புலம்பெயர்ந்தோர் சிலரும் இங்கு வாழும் சிலரும்,
விசாரணை பற்றிய தங்களின் அந்தக் கருத்திற்காக,
சூழ்நிலை உணராமல்; தங்களை எதிர்த்தனர்.
தொடர்ந்து எதிர்த்தும் வருகின்றனர்.
இந்த இடத்தில் ஒன்றை அழுத்திச் சொல்ல விரும்புகிறேன்.
புலம்பெயர்ந்தோர் இனிவரும்  காலத்தில்,
ஈழத்தமிழர்தம் நல்வாழ்வுக்காக இங்குள்ளோர் எடுக்கின்ற முயற்சிகளுக்கு,
ஆதரவும், ஆலோசனையும் தருவதோடு,
தமது செயற்பாடுகளைக் கட்டுப்படுத்திக்கொள்வது நல்லது.
தேசம் கடந்தும் நேசம் கடவா அவர்தம் அக்கறை பாராட்டப்படவேண்டியதே.
ஆனாலும் இங்குள்ளோரின் நிலையையும் அவர்கள் உணர வேண்டியது அவசியம்.
அவர்கள், பாதுகாப்பும் வாழ்வுறுதிப்பாடும் தேடிக்கொண்டு,
அவை ஏதுமற்ற இங்குள்ளவர்களின் அவலநிலை உணராது,
நம் எதிர்காலத்தைத் தீர்மானிக்க நினைப்பது பெருந்தவறு.
இங்குள்ள தலைமைகள் அச்செய்தியை அவர்களுக்கு துணிவோடு உரைக்க,
முன் வரவேண்டும்.

******

புலம்பெயர் தமிழர்களில் ஒருசாரார்,
இனநலம் நோக்கி உண்மையாய்ப் பாடுபட,
வேறோரு சாரார் யதார்த்தம் உணராமல்,
வெற்றுப் போர்க்கூச்சல் போட்டபடி இருக்கின்றார்கள்.
தமது கருத்தை யாரும் ஏற்க மறுத்தால்,
உடனே அவர்களுக்கு இனத்துரோகி பட்டம் வழங்கி இழிவு செய்வதே,
அவர்களின் வேலையாய் இருக்கிறது. 
நடந்து முடிந்த சம்பவங்களை மனதில் வைத்து,
சிங்களத் தலைமைகள் நீட்டும் நட்புக்கரங்களை,
உதறி எறியவேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.
இத்தனை அனுபவங்களுக்குப் பின்பும்,
அவர்களது இவ் அறியாமைக் கோரிக்கையை எங்ஙனம் ஏற்பது?

******

அத்தகையோரிடம் ஈழத்தமிழ் மக்கள் ஒன்றைக் கேட்க விரும்புகின்றனர்.
இந்நாட்டில் தமிழர்கள் சிறுபான்மையினர்.
சிங்களவர்கள் பெரும்பான்மையினர்.
அதனால் தனித்து நாம் அவர்களை எதிர்ப்பது கடினம்.
தொடர்ந்து நாம் பகை பாராட்டினால்,
அவர்கள் ஓர் எல்லையில்,
ஒன்று நம் உரிமையில்  அடிப்பார்கள்.
அல்லது நம்மை அடிப்பார்கள்.
இவ்விரண்டிலிருந்தும் நம்மை நாம் பாதுகாக்க,
இன்றைய நிலையில் நமக்கு இருக்கக் கூடிய வலிமை யாது?

******

புலிகளின்  மறைவோடு நமது போர்ப்பலம் முடிந்துவிட்டது.
நட்பு என்ற அளவில் நமக்காக உரிமையுடன் உடன் கைகொடுக்க,
வலிமையுள்ள  நாடுகள் எவையும்,
உடன் வருவதற்கான சாத்தியம் இன்று இருப்பதாய்த் தெரியவில்லை.
தமிழரின் முழு உரிமையைப் பெறுதற்குத் தேவையான பலமோ மிகப் பெரியது.
வினைவலியும், தன்வலியும், மாற்றான்வலியும், 
துணைவலியும் தூக்கிச் செயல் என்றார் வள்ளுவர்.
வினைவலி மிகப் பெரியது.
மாற்றான் வலி மிகப்பெரியது.
தன் வலி சிறியது, 
துணை வலி நிச்சயமில்லாதது என்ற நிலையில்,
பகையை வளர்க்க ஆலோசனை கூறும்,
புலம்பெயர் தமிழர் ஒரு சிலரின் அறிவை என்னென்பது?

******

ஈழத்தமிழர்கள் பகையால் துன்புற்றால்,
அதனைத் தடுக்கும் வலிமை அவர்களிடம் இருக்கிறதா?
அதுபற்றி அவர்கள் சிந்திக்க வேண்டும்.
அங்ஙனம் இருந்தால் இறுதிப்போரில் அவர்கள் ஏன் அந்த வலிமையைப் பயன்படுத்தவில்லை?
உண்ணாவிரதம் இருந்தோம், ஊர்வலங்கள் சென்றோம் என்பார்கள்.
உண்மை!  அதனைப் பாராட்டலாம்!
எமக்காக எம் உறவுகள் குரல் கொடுக்கின்றன என்ற ஆறுதலைத் தவிர,
அதனால் எதனைச் சாதிக்க முடிந்தது?
இலட்சக்கணக்கில் உயிர்ப்பலியும், சரணாகதியும் தான் மிச்சம்.
நடந்து முடிந்த சம்பவத்திலிருந்தேனும் பாடம் படிக்காவிட்டால்,
நாம் எங்ஙனம் அறிவுத்தமிழர்கள் ஆவோம்?
ஆகவே உணர்ச்சிவயப்பட்ட அச்சிறுபான்மையினரின் விருப்பைப் புறந்தள்ளி,
நீங்கள் செயல்பட வேண்டும் என,
வினயத்துடன் தங்களிடம் வேண்டிக்கொள்கிறேன்.

******

இங்குள்ளவர்களில சிலரும் தம் சுயநல வளர்ச்சிக்காகவும்,
கூட்டமைப்புக்கு தாமே தக்க எதிராளிகள் எனக் காட்டுவதற்காகவும்,
மக்கள் உணர்வைத் தூண்டி, 
தங்களின் கருத்தை எதிர்ப்பதாய்க் காட்டி வருகின்றனர்.
கூட்டமைப்புக்குள்ளும் அங்ஙனம் ஒருசிலர் இயங்க நினைப்பதுதான் பெருங்கவலை.
அண்மையில் வெளிநாட்டில் நீங்கள் நடத்திய இரகசியப் பேச்சுவார்த்தையை வைத்து,
உங்களை ஒரு இனத்துரோகியாய்க் காட்;ட,
மேற்படி குழுக்கள் முயன்று வருவதை பத்திரிகைகள் மூலம் அறியமுடிகிறது.
இந்தச் சிலுசிலுப்பல்களுக்கு அஞ்சாமல்,
இனநலம் நோக்கிய தங்கள் நன் முயற்சிகள் தொடரவேண்டும் என்பது என் விருப்பு.

******

மேற்சொன்னவை தங்களுக்குத் தெரியாத விடயங்கள் அல்ல.
ஆனாலும் இதை ஏன் எழுதுகிறேன் என்றால்,
தங்களுக்கான எதிர்ப்பறிக்கைகள் விடவும்,
கொடும்பாவிகள் எரித்துக் கூத்தாடவும்,
சமூகத்தில் ஒருபகுதியினர் இருக்கிறார்கள் என்றால்,
தங்களின் தீர்க்கதரிசனமானதும் யதார்த்த பூர்வமானதுமான, வழிகாட்டலை ஆதரிக்கவும்,
சமூகத்திற்குள் பலபேர் இருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பதற்காகவே.
தயைகூர்ந்து பொறுப்பற்றவர்களின்  மேற்படி நடவடிக்கைகளால் மனம் சோர்ந்து விடாமல்,
துணிவுடன் நம்இனத்தை சரியான முறையில் வழிநடத்த,
தாங்கள் தொடர்ந்தும் முயலவேண்டுமென,
தமிழ் மக்கள் சார்பாக தங்களிடம் வேண்டிக்கொள்கிறேன்.
நீண்டகால இடரிலிருந்து நம் இனத்தைக் காக்க,
இறைவன் தங்களுக்கு ஆற்றலையும், துணிவையும் அருள வேண்டுமென,
பிரார்த்தித்து நிற்கிறேன்.
'இன்பமே எந்நாளும் துன்பமில்லை'
நன்றி.
வணக்கம்
அன்பன்
இ.ஜெயராஜ்

http://uharam.blogspot.nl/2015/06/01_19.html

No comments:

Post a Comment