Wednesday, May 13, 2015

பிரித்தானிய பொதுத்தேர்தலில் இலங்கை தமிழர்கள் வெற்றி பெறாதது ஏன்?

பிரித்தானிய பொதுத்தேர்தலில் 10 இந்தியர்கள், 09 பாகிஸ்தானியர்கள், 03 பங்களாதேஸியர்கள், 01 சிங்களவர் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். எனினும் சுமார் 03 லட்சத்துக்கும் 04 லட்சத்துக்கும் இடையிலான சனத்தொகையை கொண்ட இலங்கை தமிழர்கள் மத்தியில் இருந்து எவரும் தெரிவுசெய்யப்படவில்லை.  
இதற்கான காரணம் குறித்து இந்திய செய்திச்சேவை ஒன்று கருத்துக்களை வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய தேர்தலில் தொழில்கட்சி சார்பில் உமா குமரன் மற்றும் தேசிய லிபரல் கட்சியின் சார்பில் சொக்கலிங்கம் யோகலிங்கம் ஆகியோர் போட்டியிட்டனர்.
உமா குமரனை பொறுத்தவரையில் தொழில்கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு அவரின் தோல்விக்கும் காரணமானது. யோகலிங்கத்தை பொறுத்தவரை அவர் போட்டியிட்ட கட்சி சிறிய கட்சியாகும்.
எனினும் இதற்கு அப்பால் இலங்கை தமிழர்களின் தெரிவின்மைக்காக லண்டனை மையமாகக்கொண்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர் எஸ் ஏ என் ராஜ்குமார் என்பவர் காரணங்களை கூறியுள்ளார்.
இந்தியர்களை காட்டிலும் பிரித்தானியாவில் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை குறைவானது. ஏனைய தென்னாசியர்களை போன்று இலங்கை தமிழர்கள் அரசியலை கணக்கெடுக்கவில்லை.
அத்துடன் இலங்கை தமிழர்கள் அண்மைக்கால குடிப்பெயர்வாளர்கள். அதிலும் மூன்றாம் தலைமுறையினரே அரசியலில் உள்ளூராட்சி சபைகளிலும் நாடாளுமன்றத்திலும் அங்கம் வகிக்கவேண்டும் என்று விரும்புகின்றனர். எனினும் இரண்டாம் தலைமுறையினர் இன்னும் அந்த நோக்கத்தை கொண்டிருக்கவில்லை.
இலங்கை தமிழர்களின் குடும்பங்களை பொறுத்தவரையில் அவர்கள், தம்மில் இருந்து எவரும் அரசியலுக்கு செல்வதற்கு ஊக்கம் அளிப்பது குறைவாகவே உள்ளது.
இலங்கையிலும் இந்தியாவிலும் அரசியல் சாக்கடை என்ற எண்ணத்தை கொண்ட அவர்கள், பிரித்தானிய அரசியல் வித்தியாசமானது என்பதை உணரவில்லை.
அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் என்ற நடக்கிறது என்று பிரித்தானிய இலங்கை தமிழர்கள் பார்க்கிறார்களே ஒழிய பிரித்தானிய அரசியலை பார்க்கவில்லை. எனினும் இது மாற்றம் பெற்றுவருகிறது.
உள்ளூர் சபைகளில் இலங்கை தமிழர்கள் போதியளவு பங்கை கொண்டிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகளிலும் பங்கேற்க தலைப்பட்டுள்ளனர்.
எனவே அவர்கள் அரசியலில் காத்திரமான பங்கை வகிக்க காலம் செல்லும் என்றும் ராஜ்குமார் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment