Wednesday, May 13, 2015

பராதி என்றால் மகிழ்வு! நிரபராதி என்றால் ஆத்திரமோ?

தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுக்களை கர்நாடக சிறப்பு மேல் நீதிமன்றம் நிராகரித்து அவரை விடுதலை செய்துள்ளது.
முன்னதாக தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்கு கர்நாடக நீதிமன்றத்தில் நடந்த போது, ஜெயலலிதா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதுடன் முதலமைச்சர் உள்ளிட்ட பதவிகள் பறிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கூடவே பத்து ஆண்டுகளுக்கு தேர்தலில் நிற்க முடியாது என்ற தீர்ப்பும் அறிவிக்கப்பட்டது. கர்நாடக கீழ் நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பு தமிழகம் என்ற எல்லை தாண்டி, ஏனைய மாநிலங்களிலும் தமிழ் மக்கள் வாழும் நாடுகளிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சட்ட சபைத் தேர்தலில் அமோக வெற்றி ஈட்டி முதலமைச்சராகிய செல்வி ஜெயலலிதாவுக்கு இக்கதியோ! என்று தமிழக மக்கள் அழுது புலம்பினர்.
ஈழத்தமிழர்களும் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக் கண்டு இதயத்தால் வெம்பினர். இருந்தும் ஜெயலலிதா மீது கோபம் கொண்டவர்கள் மட்டும் மகிழ்ச்சிக் கடலில் நீந்தினர்.
நேற்றுத் தமிழக முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா இன்று சிறையில் அடைக்கப்பட்டார் என்றால் நிலைமை எப்படி இருக்கும்? எனினும் ஜெயலலிதா பொறுமையைக் கடைப்பிடித்ததுடன் தமிழக மக்களையும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
நீதிமன்றத் தீர்ப்புக் கண்டு ஆத்திரம் கொள்ளாமல் மிகவும் நிதானத்தைக் கடைப்பிடித்ததன் காரணமாக செல்வி ஜெயலலிதா மீண்டும் முதல்வராகும் பாக்கியத்தைப் பெற்றுக் கொண்டார்.
ஆம், தனக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக கர்நாடகச் சிறப்பு மேல் நீதிமன்றில் மேல்முறையீடு செய்தார். ஜெயலலிதாவின் மேன்முறையீட்டை ஆராய்ந்த நீதிமன்றம் செல்வி ஜெயலலிதாவை அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிப்புச் செய்ததுடன், கர்நாடக கீழ் நீதிமன்றம் பிழையான தீர்ப்பை வழங்கி உள்ளது என்றும் குறித்துரைத்துள்ளது.
கர்நாடக சிறப்பு மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பால் தமிழகம் குளிர்ந்து போயுள்ளது. முன்னைய தீர்ப்பால் நெருப்பாய் எரிந்த தமிழக மக்களின் மனங்கள் பின்னைய தீர்ப்பால் வெம்மை தணிந்து வெற்றி என்று ஆர்ப்பரித்தன.
அதேவேளை முன்னைய தீர்ப்பால் குளிர்ந்த இதயங்கள் மேல் நீதிமன்றத் தீர்ப்பால் அதிர்ந்து போய் உள்ளன.
முன்னைய நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொண்டால் பின்னைய நீதிமன்றத் தீர்ப்பையும் மெளனமாக ஏற்றுக் கொள்வதே தார்மீகக் கடமையாகும்.
இதைவிடுத்து ஜெயலலிதா பராதி என்றால் மகிழ்வடைவதும் நிரபராதி என்றால் ஆத்திரம் அடைவதும் எந்த வகையில் நியாயமாகும்?
எதுவாயினும் செல்வி ஜெயலலிதாவுக்கு கிடைத்த விடுதலை தமிழகத்தின் முதல்வராக ஜெயலலிதா நீண்ட காலம் இருப்பார் என்பதற்கு கட்டியம் கூறுவதாக உள்ளது.

No comments:

Post a Comment