Friday, May 1, 2015

கணவரை புறக்கணித்துவிட்டு கவலைப்படும் பெண்கள்!

கணவன்–மனைவி உறவு என்பது பூர்வஜென்ம அடிப்படையில் அமைவது. அவர்களது இல்லற உறவில் கசப்புகளோ, கவலைக்குரிய விஷயங்களோ இருக்கத்தான் செய்யும். ஆனாலும் ஒருவர் மீது இன்னொருவர் வெளிப்படுத்த முடியாத அளவுக்கு ஆழமான பாசம் வைத்திருக்கத்தான் செய்வார்கள்.

அதை உணர்ந்து கொள்ளாமல் கணவரை புறக்கணிக்கும் பெண்கள், அவர் இறந்த பின்பு உண்மையை உணர்ந்து, சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்ந்து போகிறார்கள்.
விசாலம் கிராமப் பகுதியை சேர்ந்தவள். 21 வயதில், நகரத்தில் அரசு அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவருக்கு அவளை மணமுடித்து கொடுத்திருக்கிறார்கள்.
“திருமணமான பத்தாவது நாளே அவர் என்னை தன்னோடு அழைத்து வந்துவிட்டார். நான் என் அம்மாவை பிரிய மனமின்றி அழுதுகொண்டே பிரிந்து வந்தேன். அவருக்கு வேலைதான் முக்கியம். எனக்கு என் அம்மாதான் முக்கியம்.
அதனால் அடிக்கடி என் அம்மாவை பார்க்க கிராமத்துக்கு போய்விடுவேன். அது என் கணவருக்கு பிடிக்கவில்லை. அதனால் கோபமடைந்து, ‘இப்படியே நீ தொடர்ந்து உன் அம்மா வீடே தஞ்சம் என்று இருந்தால், நான் இன்னொரு பெண்ணை என் தேவைக்கு வைத்துக்கொள்வேன்’ என்று மிரட்டினார்.
அப்படி அவர் சொன்னதைக் கேட்டு நான் அதிர்ந்து போனேன். அப்போதே ‘என் கணவர் இன்னொரு பெண்ணை சேர்த்துக்கொள்வாரோ’ என்ற கவலை என்னை வாட்டத் தொடங்கியது. அதனால் என் கணவர் தாமதமாக வீட்டிற்கு வந்தாலும், வேலை விஷயமாக வெளியூருக்கு சென்றுவிட்டு திரும்பினாலும் சந்தேகத்தோடு அவரிடம் கேள்விகள் கேட்பேன்.
நான் துருவித்துருவி கேள்விகள் கேட்டதால், ‘இப்படி நீ என்னை சந்தேகப்படாதே! உன் தொணதொணப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியாவிட்டால் உன்னை விவாகரத்து செய்து விடுவேன்’ என்றார். அன்றிலிருந்து அவரை எனக்கு பிடிக்காமல் போய்விட்டது. அடிக்கடி நாங்கள் சண்டை போட்டுக்கொள்வோம்” என்றாள்.
இந்த தம்பதிக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறாள்.
“என் கணவரை எனக்கு பிடிக்காததாலும், அவரை நினைத்து பயந்ததாலும் குழந்தையே பெற்றுக்கொள்ளக் கூடாது என்று நினைத்தேன்.
ஆனால் எப்படியோ ஒரு மகள் பிறந்துவிட்டாள். அதன் பின்பு நான் உஷாராகி அவருக்கு படுக்கையில் இடம் கொடுக்கவில்லை. அதனால் எங்களுக்குள் கருத்துவேறுபாடு அதிகரித்தது. சில நேரங் களில் என்னை தாறுமாறாக அடித்துவிடுவார்.
அதனால் அவர் செத்து தொலைந்தால் நல்லது என்று நினைத்தேன். அதுபோல் அவர் செத்துப்போய்விட்டார்…” என்றபடி கதறி அழுதாள்.
இப்போது விசாலத்திற்கு 45 வயது. கணவருக்கு இவளைவிட 7 வயது அதிகம். 6 மாதத்திற்கு முன்பு கணவர் அலுவலக பணியில் இருந்தபோதே மாரடைப்பால் மரணமடைந்திருக்கிறார்.
அவர் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு மகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்.
விசாலத்திற்கு திருமணமான புதிதில் இருந்தே கணவர் மீது பிடித்தம் இல்லாமல்தான் இருந்திருக்கிறது. ஆனால் இப்போது சோகத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் அழுகிறாள்.
‘திடீரென்று இவ்வளவு சோகம் கொப்பளிக்க என்ன காரணம்?’ என்று அவளிடம் கேட்டேன்.
“என் கணவர் இறந்த பின்புதான் அவர் என்னை எவ்வளவு உயர்வான இடத்தில் வைத்திருக்கிறார் என்பதை உணர்ந்தேன். அதை தெரிந்ததில் இருந்து ‘அவருக்கு நல்ல மனைவியாக இருந்து இல்லற சுகத்தை முழுமையாக கொடுக்கவில்லையே! அவருக்கு நல்ல மனைவியாக இருந்து பணிவிடைகள் செய்யவில்லையே!’ என்ற குற்ற உணர்வுக்கு உள்ளாகிவிட்டேன்” என்றாள்.
கணவர் அகால மரணம் அடைந்த பின்புதான் அவரது வங்கி கணக்கு, சேமிப்பு, முதலீடுகள் பற்றி விசாலத்திற்கு தெரியவந்திருக்கிறது.
திருமணமான புதிதில் இருந்தே அவர்களுக்குள் பிரச்சினைகள் இருந்தபோதும், தனது மரணத்திற்கு பிறகு மனைவி எந்த விதத்திலும் கஷ்டப் படக்கூடாது என்று கருதி மனைவி பெயரில்தான் அனைத்தையும் சேமித்திருக்கிறார்.
தனது முதலீடு, சேமிப்புகளுக்கு ‘நாமினி’யாகவும் மனைவியின் பெயரையே குறிப்பிட்டிருந்திருக்கிறார். கணவரின் அலுவலகத்தில் இருந்தும் நிறைய பணம் கிடைத்திருக்கிறது.
“எனது கணவர் இறந்ததும் தொல்லை ஒழிந்தது என்ற மனநிலையில் நான் இருந்ததால், சும்மா பெயரளவுக்குத்தான் அழுதேன். ஆனால் இப்போது இப்படிப்பட்ட நல்ல மனிதரை தவறாக புரிந்துவிட்டோமே என்று நினைத்து நித்தம் நித்தம் அழுகிறேன். குற்ற உணர்வால் துடிக்கிறேன்.
அவர் எனக்காக சேர்த்து வைத்திருக்கும் பெருந்தொகையை பார்க்கும்போதெல்லாம் ‘இப்படிப்பட்ட நல்ல மனிதருக்கு துரோகம் செய்துவிட்டாயே… அவரது பணத்தை அனுபவிக்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது?’ என்று என் மனசாட்சியே என்னை உலுக்குகிறது…” என்று ஒப்பாரி வைக்காத குறையாக கதறினாள்.
‘அழாதே! இப்போது நீ முன்பைவிட ஆரோக்கியமாக, மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.
புத்திசாலித்தனமாக சிந்தித்து செயல்பட வேண்டும். அப்போதுதான் உன் கணவரின் ஆத்மா திருப்தியடையும். அவரது ஆத்மா சாந்தியடையவும் செய்யும்’ என்றேன்.
“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்! அவருக்கு நான் செய்த துரோகத்திற்கு அவரது ஆத்மா என்னை பழிவாங்கத்தானே செய்யும்? நான் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும்?” என்று கண்களை துடைத்துக்கொண்டு கேட்டாள்.
‘நடந்ததையே நினைத்து அழாமல் இனியாவது அவர் உன் மீது வைத்திருந்த பாசத்திற்கு கைமாறு செய். தினமும் இருமுறை அவரை மனதில் நினைத்து, அவரது போட்டோ முன்னால் நின்று அவரது நல்ல உள்ளத்துக்கு நன்றி சொல்.
நீ மட்டுமின்றி மக்களும் அவரை நினைக்க வேண்டும், போற்ற வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அவர் சேர்த்து வைத்த பணத்தில் டிரஸ்ட் ஒன்றை நிறுவி, ஏழை விதவைப் பெண்களுக்கு உதவு. நீ மட்டுமின்றி ஊரே அவரை நினைத்து பெருமிதம் கொள்ளும் அளவுக்கு செயல்பட்டு அவருக்கு உன் அன்பை காணிக்கையாக்கு.
அது உனது குற்ற உணர்வை போக்கும். கவலையையும் நீக்கும்’ என்றேன்.
கண்ணீருக்கு விடை கொடுத்துவிட்டு, அவள் காலத்திற்கு தக்கபடி சிந்திக்க முன்வந்தாள்.
கணவரின் உண்மை அன்பை மனைவிகள் புரிந்துகொள்ள வேண்டும்! இறந்த பின்பு அல்ல! உயிரோடு இருக்கும்போதே!
–விஜயலட்சுமி பந்தையன்.

No comments:

Post a Comment