Wednesday, April 29, 2015

செல்போனில் மரண வாக்குமூலம்..மாணவர் தற்கொலை: Whats App மூலம் நியாயம் கோரும் தந்தை

சென்னையில் மாணவன் ஒருவன் தனது கைப்பேசியில் மரண வாக்குமூலத்தை பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த கடையம் பகுதியை சேர்ந்த விவசாயி கண்ணன் என்பவரது இளைய மகன் கார்த்திக் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள கல்லூரியில், காய்கறிகளில் சிற்பங்களை வடிவமைக்கும் படிப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் கடந்த பிப்ரவரி மாதம், 7 ம் திகதி கல்லூரி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த துரைப்பாக்கம் பொலிசார், அவர் தற்கொலை செய்து கொள்ள யார் காரணம்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து காவல்துறையினர் கைப்பற்றிய பொருட்களை கடந்த பிப்ரவரி 23ம் திகதி, மாணவனின் தந்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
அதில் தனது மகன் கார்த்திக் மரண வாக்குமூலத்தினை பதிவு செய்து வைத்திருப்பதை கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதில், தனது மரணத்துக்கு என்ன காரணம் என்று தெரிவிக்காத கார்த்திக் மரணத்துக்கு காரணமானவர்கள் என்று தனது அறையில் தங்கியுள்ள 7 மாணவர்களின் பெயரை குறிப்பிட்டிருந்துள்ளான்.
இதையடுத்து கார்த்திக்கின் தந்தை அந்த பதிவை பற்றி கூறி துரைப்பாக்கம் பொலிசில் புகார் அளித்துள்ளார்
ஆனால் இதுவரை புகார் கூறப்பட்ட மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதற்கிடையே மாணவர் கார்த்திக்கின் மரண வாக்குமூலம் மற்றும் அவரது தந்தையின் கோரிக்கை வாட்ஸ்-அப் மூலம் பரவி வருகிறது.
வாட்ஸ்-அப்பில் பரவி வரும் அந்த பதிவில் பேசியுள்ள கார்த்திக்கின் தந்தை, எனது மகனின் கடைசி ஆசையான அவரது சாவுக்கு நீதி வேண்டும்.
கடந்த பிப்ரவரி மாதமே 7 மாணவர்கள் மீது புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
சம்பந்தப்பட்ட கல்லூரியின் நிர்பந்தத்துக்கு அடிபணிந்து பொலிசார் வழக்கை தொடர்ந்து விசாரிக்க வில்லை.
கூலி வேலை செய்து வரும் என்னால் கல்லூரி நிர்வாகத்தை எதிர்த்து போராட முடியாது.
மேலும், இதனை மற்றவர்களிடம் பகிரவும் என்றும் எனது மகன் போல் வேறு மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment