Thursday, April 16, 2015

உடன்படிக்கையின் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் மட்டுமே காட்டிய IBC வானொலி !


தமிழில் இன்று என்ன நடக்கிறது ? ஒரு திறந்த மடல் : தமிழீழ போராட்ட பரப்பில் முக்கிய இடத்தில் இருக்கும் ஒருவரால் எழுதப்பட்ட கடிதம் அதிர்வின் வாசகர்களுக்காக இங்கே இணைக்கப்படுகிறது.

அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் (IBC) வானொலி 1997 யூன் மாதம் 9ஆம் திகதி தனது சேவையை விண்கோள் வழியாக ஆரம்பித்தது. தமிழீழ ஊடகத் துறையின் மூத்தவர்களில் ஒருவரான தாசீசியஸ் மாஸ்ரர் போன்றவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த வானொலி நாளடைவில் தமிழீழத் தேசிய வானொலியாக வளர்ச்சி கண்டது. இந்த வானொலி ஆரம்பித்த காலம், தாயகத்தில் ஜெயசிக்குறு சமர் மிக உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கில் வாழ்ந்த எங்கள் மக்கள், தாயகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வீரம் செறிந்த போராட்டம் உட்பட்ட தாயகச் செய்திகளை இந்த வானொலி ஊடாகவே அறிந்து வந்தார்கள்.

பின்னர் அது லண்டனில் மத்திய அலை வரிசையிலும் தாயத்துக்கு சிற்றலை ஊடாகவும் தனது ஊடகக் கடமையை தவறாது செய்து வந்தது. எழுத்துக்களால் உணர்த்த முடியாத சுமைகளோடும் வலிகளோடும் வானொலியை நிர்வகித்தவர்களும், ஊடகப் பணி செய்த நல்ல உள்ளங்களும் அந்த வானொலிச் சேவையை தங்களால் முடிந்தவரை வழங்கி வந்தார்கள். 2006 யூலையில் தொடங்கி 2009 மே முள்ளிவாய்க்கால் வரை இடம்பெற்ற நெடிய போரினதும், தொடர்ச்சியான இடம் பெயர்வினதும், கொடிய சிங்கள அரசின் கோரப் பிடிக்குள் சிக்கி எங்கள் மக்கள் அநுபவித்த சொல்லொணாத் துயர்களையும், வலிகளையும் தன்னால் முடிந்தவரை அந்த வானொலி வானலைகளில் பதிவு செய்தது. 2009 முள்ளிவாய்க்காலின் பின்னர் தாங்கும் கரங்களின்றி 2010 ஏப்ரல் இறுதியோடு மத்திய அலையூடான தனது ஒலிபரப்பை அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் தொடர முடியாமல் போனது.

வர்த்தகரான திரு சத்தி அவர்கள் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதனை DAB வழியாக ஒலிபரப்ப ஆரம்பித்ததோடு ஆரம்பக் கூட்டங்களிலேயே இனிமேல் இந்த வானொலி தேசிய நோக்கத்தோடு இயங்காதெனவும் அந்த நோக்கத்தில் மட்டுமே உள்ளவர்களுக்கு வானொலியில் இடமில்லையெனவும் அறிவித்தார். தேசியத்தில் மிகுந்த இறுக்கமான நிலைப்பாட்டை கொண்டவர்கள் அதிலிருந்து உடனேயே வெளியேறினார்கள். ஊதியம் கிடைப்பதால் நிலைமையை அவதானித்து முடிவெடுப்போமென மற்றையவர்கள் பொறுத்துக் கொண்டார்கள். இந்த நிலையில் தான் தாசீசியஸ் மாஸ்ரர் போன்றவர்கள் மத்திய அலையில் தமிழ் வானொலி வந்தாக வேண்டுமென்ற நிலைப்பாட்டோடு 2010 மே மாதம் 5ஆம் திகதி உயிரோடைத் தமிழ் (ILC) வானொலியை ஆரம்பித்தார்கள்.

இன்று தேசிய, சமூக நிலைப்பாட்டில் உறுதியானவர்கள் இணைந்து உயிரோடைத் தமிழ் வானொலியை மிகுந்த நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நடாத்தி வருகின்றார்கள். அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் வானொலி, எந்தவிதமான ஊடக தர்மமுமின்றி இயங்கியது. ஆதாரமில்லாத குற்றச்சாட்டுக்களையும் உண்மைக்கு புறம்பான செய்திகளையும் வெளியிட்டதோடு பிரித்தானியாவில் மாவீரர் நாள் இரண்டாக நடைபெறுவதற்கும் தளமமைத்துக் கொடுத்தது. ஒரு தேசிய வானொலி தனது நிலைப்பாட்டிலிருந்து தவறி ஒரு தனியார் வானொலியாகவே நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தேசிய வானொலியாக இயங்கியபோது பணியாற்றிய பலர் சிறிது சிறிதாக அந்த வானொலியிலிருந்து வெளியேறினார்கள்.

சகட்டுமேனிக்கு எந்த விதமான ஊடக தர்மமுமின்றி ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களை முன் வைத்த அந்த வானொலி திரு ஜெயதேவன் அவர்கள் மீதும் தனது கைவரிசையைக் காட்ட அவர் மான நஸ்ட வழக்கைத் தொடர பெரிய தொகையொன்றை தண்டப் பணடாக கட்ட நேர்ந்தது. இதனை முன்மாதிரிகையாக எடுத்து பலர் மான நஸ்ட வழக்கு தொடரக் கூடிய நிலை எற்படுமென்று நினைத்தாரோ என்னவோ அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் வானொலியை கைவிடும் நிலைக்கு திரு சத்தி அவர்கள் வந்தார்.

இந்த நிலையில் 2014 பெப்ரவரி ஆரம்பத்தில் தான், வானொலியை திரு சத்தி அவர்களிடமிருந்து வாங்கி விட்டதாகவும் பழையபடி வானொலிப் பணியாளர்கள் எல்லோருமாகச் சேர்ந்து நடாத்துவோமென்றும் திரு பரா பிரபா கோரிக்கை விடுத்தார். முடிந்தவரை பணியாளர்களை அழைத்து கூட்டத்தை நடாத்தினார். தனக்கும் திரு சத்தி அவர்களுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டதாக ஒரு உடன்படிக்கையின் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் மட்டுமே அந்தக் கூட்டத்திலும் காட்டினார். ஆழமாகப் போக விரும்பாமல் மேலோட்டமாக அதனை ஏற்றுப் பணி புரிய பலர் முன் வந்தார்கள். இந்த நிலையில் உயிரோடைத் தமிழ் வானொலியின் (ILC) நிர்வாகிகள் சிலர் திரு பரா பிரபாவைச் சந்தித்தார்கள்.

திரு சத்தி அவர்களிடமிருந்து வானொலியை மீட்டதைப் பாராட்டி, அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் தனது நிலைப்பாட்டிலிருந்து பிறழ்ந்து போனமையால் தான், அனைத்துலக உயிரோடைத் தமிழ் வானோலிக்கான தேவை இருந்தது. IBC வானொலி பெயரை மட்டுமே பாதுகாத்தது. ஆனால் நோக்கத்தை ILC வானொலி மட்டுமே பாதகாத்து வருகின்றது. இனிமேல் 2 வானொலிக்கான தேவையில்லை ஒன்றாகவே இயங்கலாம். நிர்வாகத்துக்கு இரண்டு பக்கமிருந்தும் ஒரு குழுவை நியமிப்போம். தரமான வானொலிச் சேவையை வழங்குவோமென்ற கோரிக்கை உயிரோடைத் தமிழ் வானொலி நிர்வாகிகளால் விடுக்கப்பட்டது. அதனை திரு பரா பிரபா அவர்கள் ஒரேயடியாகவே நிராகரித்தார்.

குழுவாக முடிவெடுப்பதெல்லாம் நடைமுறைக்கு சரிப்பட்டு வராது. நான் தான் முடிவெடுப்பேன். வெண்டுமென்றால் ILC வானொலியை என்னிடம் தாருங்கள் என்று சுத்த வியாபரி போல் பேசினார். பேச்சுவார்த்தை முறிந்தது. உண்மையில் திரு பரா பிரபா தேசிய வேடமணிந்து லிபராவின் பினாமியாகவே IBC வானொலியை லிபரா வசமாக்கி உள்ளார். திரு பரா பிரபா கடந்த சில ஆண்டுகளாக லிபராவின் ஊழியராக உள்ளார். எமது தேசிய விடுதலை இயக்கம் முள்ளிவாய்க்காலில் மௌனித்ததன் பின்னர் தேசிய வேடதாரிகள் பலர் உண்மை முகத்தை காட்டி வருகின்றார்கள். முள்ளிவாய்க்காலின் பின்னர் பிழை செய்வதற்கு யாருக்கும் பயம் கிடையாது. நல்ல ஊதியத்துக்காகவும் புகழுக்காகவும் ஊடகப் பரப்பில் கொள்கையின்றி பலர் இடத்துக்கு இடம் தாவி வருகின்றார்கள்.

லிபரா போன்ற நிறுவனங்களால் பணத்துக்கு ஏனைய ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் வாங்கப்படுகின்றார்கள். இவர்கள் லிபராவின் ஊதியத்தில் தேசியம் பேசி வருகின்றார்கள். தேசிய, சமூக நிலைப்பாட்டில் உறுதி கொண்ட ஊடகங்கள் வர்த்தகர்களின் ஆதரவைப் பெறுவதில் தவறில்லை. ஆனால் அந்த வர்த்தக றிறுவனங்களால் நடாத்தப்படுவது மிகவும் தவறானது. அது மட்டுமில்லாமல் தமிழகத்து தலைவர்கள், உணர்வாளர்கள் பலரிடமும் IBC பழையபடி தேசியத்தின் கைகளுக்கே வந்து விட்டதாக உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளார்கள். IBC என்ற தேசிய ஊடகத்தை லிபராவுக்கு தாரை வார்க்கும் உரிமையை திரு பரா பிரபாவுக்கு வழங்கியது யார்? திரு பரா பிரபா போன்றவர்கள் இதற்காக வரலாற்றுக்கு என்றோ ஒரு நாள் பதில் சொல்லியே ஆக வேண்டும். தேசிய வானொலி என்று தம்மைத் தாமே அழைத்துக் கொள்பவர்கள் தங்களது வானொலியிலேயே தேசியத் தலைவரின் மகளுக்கு அஞ்சலியும் செலுத்தியுள்ளார்கள்.

எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதி IBC யின் தொலைக்காட்சி ஆரம்பம். அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற பெயரில் ஒளிபரப்பை நடாத்துகின்ற அளவுக்கு நிலமை. லிபரா ஒரு வர்த்தக நிறுவனம் அவர்கள் வேறு எந்தப் பெயரிலாவது வானொலியையோ தொலைக்காட்சியையோ நடாத்தி விட்டுப் போகட்டுமே. தேசியப் பெயரில் ஏன் இந்த நாடகம்? தேசியத் தலைவரின் மகளுக்கு அஞ்சலி செலுத்துகின்றார்கள், தேசிய ஊடகத்தின் பெயரை ஒரு வாத்தக நிறுவனம் பாவிக்கின்றது. தேசியத் தலைவரின் பிள்ளைகளாக, கட்டமைப்புக்களாக தம்மை உரிமை கோருபவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்?

முறையிடுவதற்கும் நெறிப்படுத்துவதற்குமான எங்களது விடுதலை அமைப்பு மௌனித்துள்ள நிலையில் இதற்கான முறையிடுதலை மக்கள் மன்றத்தில் வைத்துள்ளேன். ஆயிரமாயிரம் மாவீரர்களினதும் பொதுமக்களினதும் உயிர்க் கொடையால் கட்டி வளர்க்கப்பட்ட தேசியத்தை சிதைக்கின்ற, பலவீனப்படுத்துகின்ற உரிமை யாருக்கும் கிடையாது.

எங்களது தேசிய விடுதலையை உளமார நேசிப்பவர்கள்: சிந்திப்போம்: விரைந்து செயற்படுவோம்.

வாஞ்சையுடன்,

சமூக நேயன்.

No comments:

Post a Comment