Wednesday, April 22, 2015

பாட்டுக்கார செல்லப்பா 50 லட்சத்தை ஆட்டையைப் போட்டார்: உணர்ச்சிக் கவிஞர் !

இன்று அனைவராலும் தேனிசை செல்லப்பா என்று அறியப்படும் நபர்  , தமிழீழ மக்களுக்கு உதவ இருந்த 50 லட்சம் ரூபாவை அபகரித்தார்  என்று பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியுள்ளார் "உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்"  ஐயா அவர்கள். உண்மையில் என்ன நடந்தது என்ற விளக்கம் அவரால் இங்கே தரப்பட்டுள்ளது. இதனை தேசிய ஊடகங்களில் ஒன்றான "பதிவு" வெளியிட்டுள்ளது. முழு விபரம் இதோ !
பாட்டுக்கார செல்லப்பா இப்போது இலண்டனில் உலா வருகிறார்.உணர்ச்சி பாவலர் காசி ஆனந்தன் அவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கை : இலண்டனில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அவரது பாட்டு கச்சேரி பற்றி எதையும் நான் சொல்லப்போவதில்லை. ஆனால் என்னைக் களங்கப்படுத்தும் வகையில் இந்தப் பாட்டுக் கூட்டமும், கச்சேரி ஏற்பாட்டாளர்களும் பேசி வருவதாக அறிந்து வருந்துகிறேன்.
1960 ஆம் ஆண்டு நான் ஆதித்தனார் ஐயா தலைமையில் நாம் தமிழர் இயக்கத்தில் இயங்கிய நாட்களில் எனது தமிழீழ எழுச்சிப் பாடல்களை பாடத்தொடங்கியவர் செல்லப்பா. இன்று வரை அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக எனது பாடல்களை பாடியே அவர் மக்கள் முன் அறிமுகமானார். அதனாலேயே "செல்வந்தர்" செல்லப்பா ஆனார். 1977 ஆம் ஆண்டு ஜெயவர்த்தனா ஆட்சிக்காலத்தில் சிங்கள வெறிப்படையால் தேடப்பட்டு தலைமறைவு வாழ்வை மேற்கொண்டு நானும் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களும் ஒரே படகில் தமிழ்நாட்டிற்கு கடல் தாண்டி வந்தோம். அப்போதுதான் ஆதித்தனார் அவர்களின் பழைய தொண்டர்கள் சிலரை சென்னையில் ஒரு சின்னஞ்சிறிய அறையில் பூட்டி தலைவருக்கு நான் அறிமுகம் செய்துவைத்தேன். செல்லப்பா அவர்களில் ஒருவராக இருந்தார். தலைவருக்கு செல்லப்பாவை நான் தான் அறிமுகம் செய்துவைத்தேன்.
பின்னாளில் தலைவரோடு பேசி செல்லப்பா தமிழீழம் செல்லவும், பாடவும், உலகெல்லாம் சுற்றவும், பாடவும் ஏற்பாடு செய்தேன். அவரை எமது விடுதலை இயக்கத்திற்காக பயன்படுத்த வேண்டுமென்று நினைத்தேனே தவிர வேறில்லை. பாட்டுக்கார செல்லப்பாவிற்கும் எனக்கும் கருத்து வேறுபாடு வந்ததற்கான காரணத்தை இதுவரை பாரறிய பறைசாற்றியதில்லை. இன்று நான் களங்கப்படுத்தப்படுவதால் ஏன் அவரோடு கருத்துவேறுபாடு கொண்டேன் என்பதைச் சொல்லியாகவேண்டும். 17 ஆண்டுகளுக்கு முன்பு செல்லப்பா “என்னுடைய மருமகன் வறுமையில் இருக்கிறார் கடை வைத்துப் பிழைக்க உதவுங்கள் – காப்பாற்றுங்கள்” என்று என் முன் கண்ணீரோடு வந்து நின்றார். சென்னையில் வாழ்ந்த எனக்குத் தெரிந்த தமிழீழ அகதிகள் சிலரிடம் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து ஐந்து இலட்சம் ரூபா பணத்தை அவரிடம் நான் கொடுத்தேன்.
இன்று அந்தப் பணத்தின் பெறுமதி ஏறத்தாழ 50 இலட்சம் ரூபா. அகதிகளுக்கு அந்தப் பணம் தேவைப்பட்டபொழுது அவரிடம் அதனைக் கேட்டேன். “தரமுடியாது” என்று மறுத்தார். ஐயா பழ நெடுமாறன் அவர்களிடம் முறையிட்டும் பயனற்றுப்போனது. அந்தக் கடனை திருப்பியடைக்க நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். பாட்டுக்கார செல்லப்பாவின் பொய்யான கண்ணீரை அப்போதுதான் புரிந்துகொண்டேன்.
தமிழீழ அகதிகள் பணத்தை திருடிக்கொண்டு அவர் தமிழீழ விடுதலைப் பணியில் ஈடுபடுவது தவறாக எனக்குப் பட்டது தள்ளியிருங்கள் என்று உறவைத் துண்டித்துக்கொண்டேன். இன்று காசி ஆனந்தனோ அவர் எழுதும் பாடல்களுக்கு பணம் வாங்குகிறவர்தான் என்று இலண்டனில் பாட்டுக்கார செல்லப்பாவின் கூட்டாளிகள் சிலர் என் மீது வசைபாடுவதாக அறிந்தேன் இதனை மறுக்கவேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு என்பதாலேயே இந்த அறிக்கையை விடுகிறேன். இல்லையென்றால் வாய் மூடி இருந்திருப்பேன்.
எம்.ஜி.ஆர் விடுதலைப்புலிகளுக்கு உதவுவதற்கு முன்பு 1975 இல் என்று நினைக்கின்றேன் சென்னையில் தலைவரும் புலிகளும் வறுமையில் இருந்த காலத்தில் எனது முதல் கவிதைத்தொகுப்பை வெளியிட்டு சேர்த்த பணம் தான் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு கிடைத்த முதல் நிதி என்பதையும் அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இளங்குமரன் (பேபி) செயற்பட்ட காலத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தமிழ்நாட்டு சிற்றூர்களில் பொதுக்கூட்டங்களை நடாத்தி நான் சேர்த்த பணமே புலிகளின் தொடக்க கால நிதித் ‘திரட்டு’ என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள். புலிகளின் பணத்தில் பாட்டுக்கார செல்லப்பா உலகச் சுற்றுலா நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார். அவர் போகாத நாடுகளே இல்லை எனலாம். எல்லா நாடுகளிலும் எனது பாட்டையே பாடினார்.
எந்த நாட்டிலுள்ளவர்களாவது நான் எழுதிய பாடல்களுக்கு எனக்குப் பணம் தந்தார்களா? என்றைக்காவது நாட்டு விடுதலைக்காக எழுதிய பாடல்களுக்கு நான் பணம் வாங்கினேன் என்று யாராவது சொல்வார்களா ?
என்னைக் களங்கப்படுத்தாதீர்கள். ஆதித்தனார் ஐயா காலத்தில் ஒரு குடிசை கூட இல்லாது வாழ்ந்த பாட்டுக்கார செல்லப்பா விடுதலைப்புலிகளுக்காக நடத்திய உலகச்சுற்றுலாவில் இதுவரை சேர்த்த பணத்தில் சென்னையில் பலகோடி பெறுமதியான மூன்று வீடுகளுக்குச் சொந்தக்காரராக இருக்கிறார். அவருடைய குடும்பத்தில் இன்று இரண்டு கார்கள். ஒரு தமிழ்ப் பாடகர் பொருளாதார நிலையில் முயற்சி பெற்று வளர்ச்சி பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் மட்டக்களப்பில் என் சொந்த வீட்டில் வாழ முடியாதவனாக வாழ்ந்த வீட்டையும் இழந்து, நாட்டையும் இழந்து சென்னை வந்து கடவுச்சீட்டு (Pஅச்ச்பொர்ட்) பறிக்கப்பட்டவனாய் காவல் சிறையில் வாழ்பவன் போல் நொந்து கிடக்கும் என்னைக் களங்கப்படுத்தாதீர்கள்.
எங்கோ ஓர் இடத்தில் இந்தப் பாட்டுக்கூட்டம் “பாட்டு எழுதுவதில் என்ன இருக்கிறது பாடுகிறவன் தான் பாட்டுக்கு உயிர் கொடுக்கிறான்” என்று கூறியிருப்பதாகக் கூட அறிந்தேன். நான் என்னைப் பாரதியோடோ இல்லை பாரதிதாசனோடோ ஒப்பிடுவதாக தவறாக யாரும் புரிந்துகொள்ளக்கூடாது. எடுத்துக்காட்டுக்காக சொல்லுகிறேன் பாரதியாரை விட அவர் பாட்டைப் பாடிய சௌந்தரராஜன் உயர்ந்தவன், பாரதிதாசனை விட அவர் பாட்டைப் பாடிய சுசீலா உயர்ந்தவள் என்கிறவர்களா இவர்கள். சௌந்தரராஜனும், சுசீலாவும் சிறந்த பாடகர்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால் பாரதியையும், பாரதிதாசனையும் விட அவர்கள் உயர்ந்தவர்கள் என்றால் அவர்களே ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
நன்றி: பதிவு
http://www.athirvu.com/newsdetail/2987.html

No comments:

Post a Comment