Tuesday, March 31, 2015

தலைவர் இரா.சம்மந்தன் ஆற்றிய உரை தேர்தலுக்கான கோஷமாக மட்டுமே பயன்படுத்துகின்றது: கஜேந்திரகுமார்



தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பேசுவது பிரிவினைவாதம் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் விபரித்தால், கூட்டமைப்பு தமிழ் தேசியவாதத்தை தேர்தலுக்கான கோஷமாக மட்டுமே பயன்படுத்துகின்றது என்பதை சம்மந்தன் மக்களுக்கு முன்பாக ஒத்துக்கொள்ள வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை திருகோணமலையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் ஆற்றிய உரை தொடர்பில் விளக்கமளிப்பதற்கான பத்திரிகையாளர் சந்திப்பொன்றைய யாழ்.ஊடக அமையத்தில் முன்னணி நடத்தியிருந்தது.
இதன்போது கலந்து கொண்டு அவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
இரா.சம்மந்தன் ஐயா அங்கு குறிப்பிடுகையில், இங்கே சிலர் இருதேசம் ஒரு நாடு என கூறிக்கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான கோஷங்களினால் எதனையும் சாதிக்க முடியாது.
இது ஒருவகையில் பிரிவினைவாதமாகும் என கூறியிருப்பதுடன் இந்தியா, சுவிஸ், கனடா போன்ற நாடுகளில் சமஷ்டி முறை நடைமுறையில் உள்ளதைபோன்று ஒற்றுமையாக வாழலாம் என கூறியுள்ளார். 
அந்தச் சந்திப்பிலேயே தமிழர்கள் ஒரு தேசமாகவும், சிங்களவர்கள் ஒரு தேசமாகவும் இணைந்து இருதேசங்கள் ஒரு நாட்டுக்குள் வாழப்போவதாக கூறுகின்றார்கள் என்றும் கூறியிருக்கின்றார்.
அந்தவகையில் முதலில் இருதேசம் ஒரு நாடு பிரிவினைவாதம் என கூறியவர். இந்த விடயத்தை அவதானிக்கவில்லையா? அதாவது ஒரு நாடு என்பதை ஒரு நாடு என்பது எப்படி பிரிவினைவாதம்?
மேலும் ஐயா ஒரு விடயத்தை புரிந்துகொள்ள வேண்டும். இருதேசம் ஒரு நாடு கொள்கையினை நாங்கள் முன்வைத்திருக்கவில்லை. முதன்முறையாக திம்பு பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட கொள்கையே அதுவாகும்.
 அந்தப் பேச்சுவார்த்தையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான விடயம் தேசமாக வாழும் மக்களே சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பது.
இதுபோக நாங்கள் தனியே இந்த நிலைப்பாட்டை வலியுறுத்தவில்லை. தற்போது வடமாகாண முதலமைச்சராக இருக்கும் நீதியரசர் சீ.வி.விக்னேஷ்வரன் கூட இந்தவிடயத்தை பேசியிருக்கின்றார்.
அவர் நன்றாக சட்டத்தை அறிந்தவர். அவர் பிரிவினைவாத சிந்தனையை விதைக்கிறாரா? எனவே இது மக்களை தவறான பாதையில் கொண்டுசெல்வதற்கான முயற்சியாகும் என தெரிவித்தார்.
மேலும் சந்திரிக்காவை தலைமையாக கொண்டு ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பாக தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படும் எனவும் அவர் கூறியிருக்கின்றார்.
அது மிக மோசமான விடயமாகும். இதே சந்திரிக்கா தமிழ் மக்களுடைய நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பேன் என்ற கோஷத்துடன் வந்தவர்.
பின்னர் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை ஆரம்பித்து அதில் எந்தவொரு தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்காமல் பேச்சுவார்த்தை முறிந்த பின்னர் ஒரு தீர்வு திட்டத்தை முன்வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளை மக்களிடமிருந்து பிரிப்பதற்கு முயற்சித்தவர்.
பேச்சுவார்த்தை முறிந்த பின்னர் முன்வைக்கப்பட்ட தீர்வு திட்டத்திற்கு சம்மந்தன் ஐயா போன்றவர்கள், ஆதரவு தெரிவித்த நிலையில் விடுதலைப் புலிகளை பிடிவாதக்காரர்களாகவும், தீர்வினை விரும்பாத ஒரு தரப்பாகவும் காண்பிக்க நினைத்தார்.
அதற்கு இவர்கள் துணைபோனவர்கள். இதனை மறைந்த அன்டன் பாலசிங்கம் தனது புத்தகத்தில் எழுதியிருக்கின்றார். அவர் பிரபாகரனுக்கும் சந்திரிக்காவுக்குமிடையில் பரிமாறப்பட்ட கடிதங்களை அதில் பதிவுசெய்துள்ளார்.
எனவே சிங்கள மக்களிடம் வாக்குறுதி கொடுத்த தரப்புக்கள் அதனை மீறி ஒருபோதும் செயற்படப்போவதில்லை என்பதே உன்மை.
மேலும் சந்திரிக்கா தீர்வு தருவார் என கூறுவது மிகமோசமான பாதைக்கு தமிழ் மக்களை அழைத்துச் செல்லூம் பாதையாகும். மேலும் புதிய அரசாங்கத்தை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என சம்மந்தன் ஐயா கூறியிருக்கின்றார்.
எவ்வாறு சரியாக பயன்படுத்துவது? நாம் சரியாக பயன்படுத்தியிருக்கலாம். எப்போதென்றால் தமிழ் மக்களுடைய வாக்குகள் இல்லாமல் ஆட்சிமாற்றம் இல்லை. என்பதை உணர்ந்துகொண்டபோது அந்த தரப்புக்களுடன் பேரம் பேசப்பட்டிருந்தால் நாம் சரியாக பயன்படுத்திக் கொண்டிருந்திருக்கலாம்.
ஆனால் இன்று வடகிழக்கிற்கு வரும் வெளிநாட்டவர்கள், கூறுகின்றார்கள் தமிழர்கள் எதனையும் கேட்கவேண்டாம். அது சிங்கள மக்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கி விடுகின்றது.
எனவே அமைதியாக இருங்கள் மீண்டும் மஹிந்தாவை கொண்டுவந்துவிட வேண்டாம் என்று. எனவே நாங்கள் எங்களுடைய பிரச்சினைகளை கூற கூட வழியில்லாத போது எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது?
எனவே நாம் கூட்டமைப்பிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான், கூட்டமைப்பின் கடந்த 5வருடகால இராஜதந்திரம் எதனை சாதித்தது?
சர்வதேச விசாரணை உள்ளூர் விசாரணையாக மாறிவிட்டது. தமிழ்தேசம் என்ற அடிப்படையிலான தீர்வு 13ம் திருத்தச் சட்டமாகிவிட்டது. இதனைவிட எதுவும் சாதிக்கவில்லை. என்பதே உன்மையாகும். எனவே கூட்டமைப்பு மற்றவர்களுடைய நலன்களுக்காக, தமிழ் மக்களை அழிவுகளுக்குள் தள்ளியதுபோதும் என்றார்.

No comments:

Post a Comment