Tuesday, March 24, 2015

விபத்துக்குள்ளான விமானத்தில் ஜெர்மன் பள்ளி சேர்ந்த 16 மாணவர்கள் உட்பட 150பேரும் உயிரிழப்பு - கருப்பு பெட்டி கிடைத்தது



பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டி கிடைத்து விட்டதாகவும், அதை ஆய்வு செய்யும் பணி உடனடியாக தொடங்கப்படுமென்றும் அந்நாட்டு உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
ஜெர்மன்விங்ஸ் விமான நிறுவனத்தின் 4யூ 9525 என்ற பயணிகள் விமானம் நேற்று ஸ்பெயின் நாட்டின் கடலோர நகரமான பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனின் டஸ்சல்டிராப் நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இதில், 16 பள்ளிக்குழந்தைகள் உட்பட 144 பயணிகளும், விமானிகள் உள்ளிட்ட 6 விமான ஊழியர்களும் பயணம் செய்தனர்.
பிரான்சின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள பனிச்சறுக்கு பகுதி அருகே பறந்துகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து விமானம் விபத்துக்குள்ளானது. 5000 அடி உயரத்தில் பறந்தபோது அபாய எச்சரிக்கை கிடைத்ததாகவும், அதன்பின்னர் தரைக்கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து விழுந்ததாகவும் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
அடர்ந்த மலைப்பகுதியில் விமானம் விழுந்ததால் அதில் பயணம் செய்த 150 பேரும் இறந்ததாக பிரான்ஸ் போக்குவரத்து துறை துணை மந்திரி தெரிவித்தார். பலியானவர்களில் 67 பேர் ஜெர்மானியர்களென்றும், 45 பேர் ஸ்பானியர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான விமான விபத்து இதுவாகும். அந்த பகுதியை சென்றடைவது மிகவும் கடினம் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் பிரான்ஸ் காவல்துறையின் ஹெலிகாப்டர் சம்பவ இடத்தை நெருங்கி விமானத்தின் கருப்பு பெட்டியை மீட்டுள்ளது.
விமானத்தின் கருப்பு பெட்டி பதிவுகளில் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் அது உடனடியாக ஆய்வு செய்யப்படும் என்றும் பிரான்சின் உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்
பனி படர்ந்த அப்பகுதிக்கு சென்று மீட்புப் பணியை மேற்கொள்வது மிகவும் சவாலாக இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyDRYSUlt5A.html

No comments:

Post a Comment