Tuesday, February 3, 2015

இலங்கையில் ஏப்ரல் தேர்தல்: பிரதமர் ரணில் போட்டு வைத்துள்ள திட்டம் இதுதான்: ஆனால் சற்று குழப்பமாக உள்ளது !


இலங்கையில் தற்போது அமைந்துள்ள புதிய அரசு தொடர்பான குழப்பம் ஒன்று உள்ளது - வரும் ஏப்ரல் 23-ம் தேதி பொதுத்தேர்தல் வரும்போது, கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்ரியை ஆதரித்து ஒரேயணியில் நின்ற கட்சிகள் ஒரே சின்னத்தில் போட்டியிடுவார்களா? தனித்தனியாக போட்டியிடுவார்களா? ஜெயித்தால் யார் ஆட்சியமைப்பது ? இந்தக் குழப்பத்துக்கு பதில் கூறியுள்ளார், பிரதமர் ரணில் விக்ரமசிங்க. ஐக்கிய தேசியக் கட்சியின் திட்டப்படி, ரணில் விக்ரமசிங்க தலைமையில் அக்கட்சி சொந்த சின்னத்தின் (யானை) போட்டியிடவுள்ளது. ஜனாதிபதி மைத்ரி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் தனியாக போட்டியிடும் (கை சின்னத்தில் போட்டியிடுவார்களா என்பது சரியாக தெரியவில்லை)
தேர்தல் முடிந்தபின் இரு கட்சிகளும் சேர்ந்து (கட்சி இணைப்பு அல்ல) தேசிய அமைச்சரவையை அமைக்கும். அதாவது அமைச்சரவையில் இரு கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் இருப்பார்கள். இந்த திட்டத்தை தமது கட்சி தலைவர்களிடம் தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “தேர்தலில் அதிக எண்ணிக்கையில் நாம் (ஐக்கிய தேசியக் கட்சி) வெற்றி பெற்றால், அமைச்சரவையில் எம் கட்சியினர் அதிக எண்ணிக்கையில் அமைச்சர்களாக இருப்பார்கள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் பணி ஆற்றவும்” என்று கூறியிருக்கிறார். இதன் அர்த்தம், இரு தரப்பினரும் தேர்தலில் எதிரெதிராக போட்டியிடவுள்ளனர். தேர்தல் முடிந்தபின் ஒரே அமைச்சரவையில் இணையவுள்ளனர். ஓரளவுக்கு குழப்பமான விஷயம்தான்.
மகிந்த ராஜபக்ஷே தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் அல்ல. இதனால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்றால், மைத்ரி தலைமையிலான ஒரே கட்சிதான். ஒருவேளை மகிந்த ராஜபக்ஷே தனியாக ஒரு கட்சி தொடங்கி, தற்போதுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டவர்களை ஒன்றிணைத்து போட்டியிட்டால் என்னாகும்? அப்போது யாருக்கு வாய்ப்பு அதிகம் ? தமக்குத்தான் என நினைக்கிறார் ரணில் விக்ரமசிங்க. எப்படியென்றால், சுதந்திரக் கட்சி வாக்குகள் இரண்டாக பிரியும். அதில் ஒரு பகுதி ராஜபக்ஷேவுக்கு செல்லும் (ஜனாதிபதி தேர்தலில் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ராஜபக்ஷேவுக்கு வாக்களித்தனர்) இம்முறை தேர்தல் சுவாரசியமாகத்தான் இருக்கப் போகிறது.
மகிந்த ராஜபக்ஷ கட்சி ஒன்றை ஆரம்பிக்காமல் அப்படியே ஒதுங்கினால் எதிர்கட்சியாக யார் வரப்போகிறார்கள் என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment