Thursday, February 5, 2015

லண்டன் ஹரோவில் போட்டியிடும் உமா: தேர்வானால் முதல் தமிழ் பெண்மணி இவர்தான் !


லண்டனில் வரும் மே மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் , எதிர்கட்சியான லேபர் கட்சி சார்பில் உமா குமாரன் என்னும் ஈழத் தமிழ் பெண் களமிறக்கப்பட்டுள்ளார். இளவயதான உமா அவர்கள் , லண்டன் ஹரோ கிழக்கு(HARROW EAST) பகுதியில் பாராளுமன்ற வேட்ப்பாளராக போட்டியிட உள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஹரோ கிழக்கில் , லேபர் கட்சி வெறும் 3,000 வாக்குகளால் தான் தோற்றுப்போனது. ஆனால் இம்முறை போட்டியிடும் உமா ஈழத் தமிழர் என்பதனால் அவருக்கு அதிகபடியான வாக்குகள் விழும் என்று எதிர்பார்கப்படுகிறது. மே மாதம் நடக்கவுள்ள தேர்தலில் தற்போது எதிர்கட்சியாக இருக்கும் லேபர் கட்சியே வென்று ஆட்சியமைக்கும் என்று லண்டனில் நடந்த கருத்து கணிப்புகள் தற்போது தெரிவிக்கின்றன.
ஹாரோவில் மட்டும் சுமார் 5,000 ஈழத் தமிழர்கள் செறிவாக வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரது வாக்குகளும் உமா குமாரணுக்கு செல்ல வேண்டும். அப்படி என்றால் தான் நாம் வரலாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தலில் வென்று , தமிழர் ஒருவரை முதன் முறையாக பிரித்தானிய பாராளுமன்றம் அனுப்ப முடியும்.
கனடாவில் தமிழர்கள் எவ்வாறு இணைந்து ராதிகா சிற்சபேசனை MP ஆக்கினார்களோ. அதுபோல லண்டன் தமிழர்கள் நினைத்தால் உமா குமாரணை வெற்றிபெறச் செய்யலாம். இதனூடாக எமது அரசியல் காய் நகர்த்தல்களை மேற்கொள்வது மிகவும் இலகுவாக இருக்கும். நேற்றைய தினம்(04) உமா குமாரனுக்கு ஆதாரவு தெரிவிக்கும் கூட்டம் ஒன்று ஹரோவில் நடைபெற்றுள்ளது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய உமா அவர்கள், இலங்கையில் சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்று தேவை என்றும். அதனை சர்வதேசம் நடத்த தானும் தனது கட்சியும் கடும் அழுத்தத்தை கொடுப்போம் என்றும் தெரிவித்தார். ஏற்கனவே பிரித்தானிய லேபர் கட்சியானது , இலங்கையில் ஒரு இன அழிப்பு நடைபெற்றுள்ளது என்பதனை ஏற்றுள்ளது. 2009ம் ஆண்டு லேபர் கட்சி ஆட்சியில் இருந்தவேளை , இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டுவரப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தது பலருக்கு நினைவிருக்கலாம்.
இத்தீர்மானத்தை சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி , நிராகரித்தது. ஒருவேளை லேபர் கட்சி அன்றைய தினம் தீர்மானம் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறி இருந்தால் முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்று இருந்திருக்காது. லேபர் கட்சி பிரித்தானியாவில் தமிழர்களோடு நீண்ட கால உறவில் உள்ள ஒரு கட்சியாகும். எனவே வரும் மே மாத தேர்தலில் தமிழர்கள் நிச்சயம் தமது வாக்குகளை உமா குமாரனுக்கும், லேபர் கட்சிக்கும் இடுவார்கள் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment