Monday, February 16, 2015

அமெரிக்காவும் துப்பாக்கி கலாசாரமும்! (வீடியோ இணைப்பு)


அமெரிக்கா பற்றிய சமீபத்திய செய்திகளில் துப்பாக்கிச் சூடு பற்றி செய்தி இல்லாத நாட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அங்கு துப்பாக்கி கலாசாரம் பரவிக்கிடக்கிறது.
அமெரிக்காவில் கார் விபத்தினால் உயிரிழப்பவர்களை விட துப்பாக்கிச் சூட்டில் அல்லது துப்பாக்கியால் நடக்கும் விபத்தில் உயிரிழப்பவர்கள் தான் அதிகம் என சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 2014-ல் நவம்பர் 24ம் திகதி அன்று, Oklahoma-வில் 26 வயது தாயாரை 3 வயது சிறுவன் தெரியாமல் துப்பாக்கியால் சுட்டதில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதேபோல 2014 நவம்பர் 25ம் திகதியில், Florida-வில் நபர் ஒருவர் தனது மனைவியின் நாயை துப்பாக்கியால் சுடுவதாக மிரட்டியுள்ளார். ஆனால் அவர் எதிர்பாராவிதமாக தனது முகத்திலேயே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு பெரியவர்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் உள்பட பலரும் விபத்துக்களை ஏற்படுத்தும் விதத்திலே வீடுகள், கல்வி நிலையங்கள், பொது இடங்கள் என அனைத்து இடத்திலும் துப்பாக்கியின் பயன்பாடு உள்ளது.
தற்கொலை செய்து கொள்பவர்களில் கூட பலரும் துப்பாக்கியையே தெரிவு செய்கின்றனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கி அல்லது ஆயுதம் வைத்துக் கொள்வது பற்றி, அமெரிக்காவின் ஒவ்வொரு மாகாணங்களிலும் வெவ்வேறு வகையிலான சட்ட திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன.
பெரும்பாலான மாகாணங்களில் துப்பாக்கியை வெளிப்படையாக வைத்து கொள்ளவும் சில மாகாணங்களில் மறைத்து வைத்து கொள்ளவும், இன்னும் சிலவற்றில் உரிமம் பெற்று வைத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் ஒரு சாரார் இது சரியே என்றும், மற்றோரு சாரார் இது ஆபத்தானது என்றும் பல்லாண்டுகளாக வாதிட்டு வருகின்றனர்.
பல்லாண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கர்களில் பலரும் மிருகங்களை வேட்டையாடுவதை தொழிலாக பெற்றிருந்ததால் அப்போது அனைவரிடமும் துப்பாக்கி இருந்துள்ளது.
மேலும் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர், தங்களின் சுய பாதுகாப்பிற்காகவும், அண்டை நாடுகளின் படையெடுப்பின் போது தற்காத்துக் கொள்ளவும் அனைவரும் துப்பாக்கி வைத்திருந்துள்ளனர்.
அதேபோல 18ம் நூற்றாண்டில் நடந்த புகழ்பெற்ற அமெரிக்க புரட்சிப் போரில் அமெரிக்காவிடம் போதிய நிதியில்லாததால் தனக்கென தனி ராணுவத்தினை வழிநடத்த முடியவில்லை.
இதன் காரணமாக ராணுவத்தினருடன் இணைந்து ஆயுதம் தாங்கிய குடிமக்களும் தங்களுடைய பங்களிப்பினை ஆற்றியுள்ளனர். எனவே அமெரிக்கர்கள் பல்லாண்டுகளாகவே ஆயுதத்துடன் தான் பொதுவெளியில் வலம் வந்துள்ளனர்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் சாமானியர்களுக்கான துப்பாக்கியின் தேவை மற்றும் அவசியம் குறித்து அமெரிக்க அரசு விரைந்து சட்டம் இயற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஒவ்வொரு முறை துப்பாக்கி மற்றும் ஆயுதம் தாங்கிய விபத்துக்கள் நடக்கும்போதும் நாட்டின் அதிபர் இதுதொடர்பான சட்டங்கள் மாற்றப்படும் என்று கூறுவதும் பின்னர் வழக்கம் போல துப்பாக்கியால் விபத்துக்கள் நடப்பதும் இயல்பாகிவிட்டது.
மக்கள் மனதில் பாதுகாப்பு பற்றிய புரிதலை ஏற்படுத்தி இனியாவது துப்பாக்கி மற்றும் ஆயுதம் வைத்துக் கொள்வதற்கான நடைமுறைகளை அமெரிக்கா மாற்றியமைக்கவில்லை எனில் எதிர்காலத்தில் குடிமக்கள் அனைவரும் அண்டை வீட்டார் உள்பட எவரையும் பாதுகாப்பானவர்களாக கருதமாட்டார்கள் என்பதே உண்மை.
http://www.newsonews.com/view.php?22KMC203lOo4e2BnBcb280Mdd208Obc3nBze42OlJ023gAI3

No comments:

Post a Comment