Tuesday, February 10, 2015

சுவிஸ், பேர்ண் நகரில் கோயில்கொண்ட ஞானலிங்கேஸ்வரர் திருக்கோவில் திருக்குடமுழுக்கு பெருவிழா!



சுவிற்சர்லாந்தில் பேர்ண் நகரில் புதிதாக அமைக்கப்பபெற்ற ஞானலிங்கேஸ்வரர் திருக்கோவிலின் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா பல்லாயிரம் மக்கள் புடை சூழ, கடந்த வாரம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இயற்கை அழகுமிகு சுவிற்சர்லாந்து நாட்டில், பேர்ண் நகரின் மத்தியில் பல்சிறப்புகளுடன் புதிதாய் அமைக்கப்பட்ட ஐரோப்பா திடலில் அருள்மிகு ஞானலிங்கேஸ்வரர் சித்தி புத்தி உடனான வேழமுகத்து ஞான கருணாகரன், ஞானவள்ளிக் குறத்தி, ஞானாம்பிகை தெய்வானை உடனாய ஞானவடிவேலன் மற்றும் ஞானலிங்கேஸ்வரர் எழுந்தருளி அருளாட்சி புரியும் தெய்வங்களுக்கும் இறைபெருமக்களுக்கும் திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா கடந்த வாரம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
பெருந்திரளான மக்கள் சுவிஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரண்டு வழிபாடியற்றியது கண்கொள்ளாக் காட்சி. இவ் வழிபாடுகளில் இந்தியா நாட்டில் இருந்து சமூக ஆர்வலர்களும் மற்றும் கிழக்கு இந்துப் பேரவைத் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீ.யோகேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் பூசைகளையும் செய்து வைத்தமை குறிப்பிடத்தக்கது
அதுமட்டுமன்றி ஐரோப்பாக் கண்டத்தின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்திருந்து கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பெருங்காளிப் பெருஞ்சாந்தி வேள்வி போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
01.02.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 06.00 மணி முதல் வேழமுகப்பெருமானிற்கான வழிபாடு மற்றும் யாகத்துடன் திருக்குடமுழுக்குப் பெருவிழா வைபவங்கள் சிறப்பாக ஆரம்பித்து நடைபெற்றன.
மேலும் இக்கோயில் சுவிஸ் அரசுடைய உதவியுடன் இயங்கும் ஒரு ஆலயம் என்பதாகும்.
இவ்வாலயமானது அந்தணர்களல்லாத 5 இளைஞர்களினால் உருவாக்கப்பட்டு வெகு சிறப்பாக பரிபாலனம் செய்யப்பட்டு வருகின்றது. அத்துடன் இங்கு அர்ச்சனை, பூசை வழிபாடுகள் தமிழில் இடம் பெறுவது அத்துணை சிறப்பு வாய்ந்ததாகும்.
பேர்ண் நகரத்தில் கடும் பனிப்பொழிவு காணப்பட்ட போதிலும் சைவத்தமிழ் மக்கள் மட்டுமன்றி சுவிஸ் வாழ் வேற்றின மக்களும் வயது வித்தியாசமின்றி குடும்பத்துடன் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழ் ஊடகங்கள் உட்பட சுவிஸ் நாட்டு ஊடகங்களும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCSUKdix6.html

No comments:

Post a Comment