Thursday, January 8, 2015

பிரான்சில் மீண்டும் துப்பாக்கி சூடு, உணவகத்தில் குண்டு வெடிப்பு! புதிய லிஸ்டை வெளியிட்டது அல்கொய்தா (வீடியோ இணைப்பு)!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று மீண்டும் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரான்சில் பத்திரிகை அலுவலகம் ஒன்றின் மீது நேற்று காலை உள்ளூர் நேரப்படி 11.30 மணிக்கு, ஆயுதம் தாங்கிய மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலில் 12 பேர் பலியானார்கள், 10 பேர் காயம் அடைந்தனர், இதனையடுத்து பாரிஸ் நகர் முழுதும் உஷார்நிலை பிறப்பிக்கப்பட்டது.
இத்தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று சரணடைந்த இளைஞனிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், மற்ற இருவரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மீண்டும் பாரிசின் தெற்குப் பகுதியான செத்தலியான் என்ற இடத்தில் குண்டு துளைக்காத கவசம் அணிந்த மர்ம நபர், பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பத்திரிக்கை அலுவலகத்தில் நேற்று நடந்த தாக்குதலுக்கும், இன்று நடந்த தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உணவகத்தில் குண்டுவெடிப்பு
பிரான்சின் லியோன் நகரத்தில் உள்ள உணவகத்தில் இன்று குண்டு வெடித்துள்ளது, இதனால் யாருக்கும் காயம் ஏதும் இல்லை என கூறப்படுகிறது.
தொடர்ந்து இவ்வாறு தாக்குதல் நடந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர், இதனையடுத்து அவசர ஆலோசனை நடத்த அதிகாரிகளுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மசூதிகள் மீது தாக்குதல்
பிரான்சில் சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, பல பகுதிகளில் மசூதிகள் தாக்கப்பட்டுள்ளதாக நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பாரிசின் மேற்கே லெ மான்ஸ் பகுதியில் உள்ள மசூதி ஒன்று கையெறி குண்டுகளால் தாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரான்சில் இச்சம்பவத்துக்கு பிறகு தங்கள் சமுதாயத்திற்கு எதிரான தாக்குதல்கள் தொடுக்கப்படலாம் என தாங்கள் அஞ்சுவதாக முஸ்லிம் பிரமுகர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அஞ்சலி நிகழ்வுகள்
பிரான்சில் நேற்று பாரிஸ் தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் தேசிய அளவில் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.
நேற்றிரவு நடந்த அஞ்சலி நிகழ்வுகளிலும் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இத்தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் தங்களது கண்டனங்களை வெளியிட்டுள்ளன.
புதிய லிஸ்டை வெளியிட்டது அல்கொய்தா
பிரான்சில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில், சார்லி ஹெப்டோ இதழின் ஆசிரியர் கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று டுவிட்டர் பக்கத்தில் அல்கொய்தா அமைப்பினர் புதிய படத்தை வெளியிட்டுள்ளனர்.
இதில் பல்வேறு தலைவர்கள், பிரமுகர்களின் படங்கள் மற்றும் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.
குறிப்பாக இப்படத்தில் சார்லி ஹெப்டோ இதழ் ஆசிரியரின் படத்தை கிராஸ் செய்து வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment