Tuesday, January 27, 2015

லண்டனில் கொல்லப்பட்ட ரஷ்ய உளவாளி கொலை மர்மம் அறிந்த அமெரிக்க உளவுத்துறை


லண்டனில் கொல்லப்பட்ட முன்னாள் ரஷ்ய உளவாளி அலெக்சான்ட்டர் லிட்வினென்கோ கொலையில் உள்ள மர்மத்தை அமெரிக்க உளவுத்துறை NSA அறிந்திருந்தது என்ற தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலை வெளியிட்டுள்ள பிரிட்டிஷ் பத்திரிகை டெயிலி டெலிகிராஃப், இது பற்றி தெரிவித்துள்ள ஒரு விஷயம்தான் பரபரப்புக்கு காரணம்.
அப்படியான அந்த பரபரப்பு விஷயம் என்ன ?
முன்னாள் ரஷ்ய உளவாளி அலெக்சான்டரை லண்டனில் வைத்து கொன்ற உளவுத்துறை ஏஜென்ட்டுக்கும், ரஷ்யாவில் இருந்து அதற்கு உத்தரவு கொடுத்த நபருக்கும் இடையே நடந்த தொடர்புகளை, அமெரிக்க உளவுத்துறை இடைமறித்து தெரிந்து கொண்டது என்பதே அந்த விஷயம். கடந்த 2006-ம் ஆண்டு லண்டனில் உள்ள ரெஸ்ட்டாரென்ட் ஒன்றில் டீ குடித்த முன்னாள் ரஷ்ய உளவாளி அலெக்சான்டர், அவர் குடித்த டீயில் பொலோனியம்-210 என்ற கதிர்வீச்சு பொருள் கலக்கப்பட்டு கொல்லப்பட்டார். இவரது கொலையின் பின்னணியில் இருந்தது ரஷ்ய அரசுதான் என்று பிரிட்டிஷ் உளவுத்துறை MI6 வெளிப்படையாக தெரிவித்தது.
43 வயதான அலெக்சான்டர், ரஷ்ய உளவுத்துறை FSB-யில் உளவாளியாக இருந்தவர். உளவுத்துறை தலைமைக்கு அவர் மீது சந்தேகம் ஏற்படவே, ரஷ்யாவில் இருந்து தப்பித்து லண்டனுக்கு வந்தார். லண்டனுக்கு வந்தவர், ரஷ்ய உளவுத்துறை பற்றிய சில ரகசியங்களை வெளியிட்டார். உளவுத்துறை பற்றி மட்டுமல்ல, ரஷ்ய ஜனாதிபதி புட்டின் (இவரே ஒரு முன்னாள் ரஷ்ய உளவுத்துறை ஏஜென்ட்தான்) பற்றியும் சில விஷயங்களை வெளியிட்டார்.
அதன் பின்னரே மர்மமாக முறையில் கொல்லப்பட்டார். இந்த கொலை பற்றி புலனாய்வு செய்த பிரிட்டிஷ் உளவுத்துறை சில விஷயங்களை கண்டுபிடித்தது. அதன்படி, ரஷ்ய உளவுத்துறையில் பணிபுரிந்துவிட்டு, புட்டினின் நம்பிக்கைக்குரியவராக விளங்கும் அரசியல்வாதி அன்ட்ரேய் லொகோவோய் என்பவர்தான் அலெக்சான்டரை கொல்லும் ஆபரேஷனை திட்டமிட்டு நடத்தினார்.
இதற்காக ரஷ்ய உளவுத்துறை ஏஜென்ட் திமித்ரி கொவ்டன் என்பவரை லண்டனுக்கு அனுப்பி வைத்தார். இந்த கொவ்டன்தான், அலெக்சான்டரின் டீயில் பொலோனியம்-210 கலந்து, கொலை செய்த நபர். கொலை செய்துவிட்டு அவர் ரஷ்யாவுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இவ்வளவு தகவல்களையும் பிரிட்டிஷ் உளவுத்துறை தெரிந்துகொண்ட பின், லொகோவோய், கொவ்டன் ஆகிய இருவரையும் விசாரணைக்காக பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கும்படி ரஷ்ய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அவர்களை அனுப்ப ரஷ்ய அரசு மறுத்துவிட்டது. இப்படியான நிலையில்தான், இந்த விவகாரம் பற்றிய விபரங்கள் அமெரிக்க உளவுத்துறையிடம் இருக்கிறது என்ற விஷயத்தை வெளியிட்டுள்ளது பிரிட்டிஷ் பத்திரிகை.
ரஷ்யாவில் இருந்து கொலைக்கு உத்தரவு கொடுத்த லொகோவோய், தாம் லண்டனுக்கு அனுப்பி வைத்த கொவ்டனுடன் நடத்திய எலக்ட்ரோனிக் தொலைத் தொடர்புகளை அமெரிக்க உளவுத்துறை NSA இடைமறித்து தெரிந்து, பதிவு செய்துள்ளது என்பதே தற்போது வெளியாகியுள்ள தகவல். அத்துடன் இந்த இருவரும் பேசிய டெலிபோன் உரையாடல்களும் அமெரிக்க உளவுத்துறையால் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கொல்லப்பட்ட அலெக்சான்டரின் மனைவி (இவர் லண்டனில் உள்ளார்) மரினா லிட்வினென்கோ (மேலே போட்டோவில் உள்ளவர்), இந்த விபரங்களை தகவல் அறியும் சட்டத்தின்மூலம் அமெரிக்க உளவுத்துறையிடம் கோரியுள்ளார். ஆனால், இது உளவுத்துறை ரகசியம் என்பதால், அந்த சட்டம் இதில் எதையும் செய்ய முடியாது - இந்த விஷயத்தில் உள்ள ரகசியம் NSA-வால் நீக்கப்படும்வரை (Declassification)!
அமெரிக்க உளவுத்துறையிடம் பிரிட்டிஷ் உளவுத்துறை நேரடியாக கோரிக்கை விடுத்தால் மட்டுமே, இந்த உரையாடல் பதிவுகள் பிரிட்டன் வந்துசேர வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment