Tuesday, January 27, 2015

டேவிட் கமரூன் காதிலேயே பூ சுத்தி விட்டார்கள்: தொலைபேசியில் அழைத்தவர் யார் ?


பிரிட்டனின் பிரதமர் டேவிட் கேமரன் போலி தொலைபேசி அழைப்பு ஒன்றால் ஏமாற்றப்பட்டிருந்தாலும், பாதுகாப்பு விதிகள் ஏதும் மீறப்படவில்லை என்று கூறியுள்ளார். மிக உயர்மட்ட கூட்டுத் தொலைபேசி உரையாடல் என்று கூறப்பட்டு அந்த அழைப்பு அவருக்கு சென்றது. தனது குடும்பத்துடன் அவர் வெளியே நடந்து செல்லும்போதே இந்த அழைப்பு அவரது பிளாக்பெரி கைத்தொலைபேசியில் வந்தது. எனினும் தொலைபேசியில் உரையாடியவர் உண்மையான நபர் அல்ல என்றவுடன் தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டத்தாக டேவிட் கேமரன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனின் ஒட்டுக்கேட்பு நிறுவனமான ஜிசிஎச்க்யூ (GCHQ) அமைப்பின் தலைவர் ராபர்ட் ஹானிகன் அவர்களிடமிருந்து அழைப்பு என்று கூறப்பட்டே அந்த தொலைபேசி இணைப்பு பிரதமருக்கு தரப்பட்டது. இப்படியான போலித் தொலைபேசி அழைப்புக்கள் அவ்வப்போது நடைபெறுவதுதான் என்றும், அதனால் எந்தக் கேடும் ஏற்படவில்லை என்று டேவிட் கேமரன் செய்தியாளர்களிடம் கூறினார். ஆனாலும் இப்படியான போலி அழைப்புகளை ஒழிக்கும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரிட்டிஷ் பிரதமர் தெரிவித்துள்ளார். பிரிட்டிஷ் பிரதமருக்கு போலி அழைப்பு வந்ததை அடுத்து, பாதுகாப்பு நடைமுறைகள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாக பிரதமர் இல்லம் தெரிவித்துள்ளது.
இந்த அழைப்பு உள்ளூர் நேரம் காலை 11 மணிக்கு வந்தாலும், பேசிய நபர் பிரதமரை உறக்கத்திலிருந்து தான் எழுப்பவில்லை என்று நம்புவதாக கூறியதை அடுத்து, அந்த அழைப்பின் நம்பகத்தன்மை குறித்து தனக்கு சந்தேகம் ஏற்பட்டது என்று டேவிட் கேமரன் தெரிவித்துள்ளார். நண்பகலை நெருங்கும் வேளையில் தொலைபேசியில் வந்த அழைப்பு சிறிது ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கிறது என்று தான் எண்ணியபோதே, பேசிய நபர் அது போலி தொலைபேசி அழைப்பு என்று கூறியதுடன் உரையாடல் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் டேவிட் கேமரன் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் பிரிட்டனின் ஒட்டுக்கேட்பு நிறுவனத்தின் தலைவர் ஹானிகனின் கைத்தொலைபேசி எண் இவ்வகையில் வெளியானது குறித்தும் விசாரணைகளை நடைபெறுவதாக ஜிசிஎச்கியூ அமைப்பு கூறியுள்ளது.
பிரதமருக்கான அந்த அழைப்பு அவரது இல்லத்திலுள்ள தொலைபேசி இணைப்பகத்திலிருந்து ஏற்படுத்தப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment