Friday, January 30, 2015

இலங்கையின் 45 வது பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் பற்றிய சிறு குறிப்பு!

இலங்கையின் அடுத்த பிரதம நீதியரசராக கே. ஸ்ரீபவன் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன கொழும்பில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்ததார்.
ஸ்ரீபவன் சிரேஷ்ட சட்டத்தரணியாகவும் உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் நீதியரசராகவும் மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராகவும் கடமையாற்றியுள்ளார்.
அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களத்தில் சிரேஷ்ட ஆலோசகராகவும் பிரதி சட்டமா அதிபராகவும் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில், இலங்கை மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றான பிரதம நீதியரசர் பதவியை அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக நியமிக்கப்பட உள்ள கே.ஸ்ரீபவன் பற்றிய சிறு குறிப்பு.
கனகசபாபதி ஜே.ஸ்ரீபவன் 1952 ஆம் ஆண்டு பெப்ரவரி 29 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்தார். யாழ் இந்து கல்லூரியில் ஆரம்ப கல்வியை கற்ற அவர் 1சட்ட கல்லூரியில் இணைந்து கொண்டதுடன் 1976 ஆம் ஆண்டு சட்டக் கல்லூரியின் பரீட்சையில் முதல் தரத்தில் சித்தியடைந்தார்.
1978 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணிக்கு சேர்ந்த ஸ்ரீபவன், பதில் சட்ட ஆலோசகராக பணியாற்றினார். 1989 ஆம் ஆண்டு சிரேஷ்ட சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
1996 ஆம் ஆண்டு பிரதி சட்டமா அதிபராக நியமனம் பெற்ற அவர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராகவும் பணியாற்றியுள்ளார்.
புதிய சட்டக்கல்வியை தொடர்ந்தும் கற்று வந்த ஸ்ரீபவன், 1992 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்தில் தொழிற்சட்டம் சம்பந்தமான டிப்ளோமா பட்டத்தையும் பெற்றுள்ளார்.
அத்துடன் அதே ஆண்டில் லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டம் தொடர்பில் விசேட பட்டத்தையும் பெற்றுள்ளார்.
2002 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்ட ஸ்ரீபவன் 2007 ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக நியமிக்கப்பட்டார்.
உயர் நீதிமன்ற நீதியரசர் நிஹால் ஜயசிங்க ஓய்வுபெற்ற பின்னர் ஸ்ரீபவன் 2008 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment