Wednesday, January 28, 2015

இலங்கையின் 45ம் பிரதம நீதியரசராக கே. ஸ்ரீபவன்??

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 45ம் பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்றின் சிரேஸ்ட நீதியரசர் கே. ஸ்ரீபவன் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் நீதிச் சேவையில் முன்னொரு போதும் இல்லாத குழப்ப நிலைமை உருவாகியுள்ளது. கடந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் குற்றப் பிரேரணை ஒன்றின் மூலம் 43ம் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை பணி நீக்கி, 44ம் பிரதம நீதியரசராக முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸை நியமித்திருந்தது.
இந்த பணி நீக்கம் மற்றும் நியமனம் இரண்டுமே சட்டவிரோதமானது என சட்டத்தரணிகள் சங்கம், எதிர்க்கட்சிகள் சர்வதேச அமைப்புக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வந்தன. அண்மையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பிரதம நீதியரசராக சிரானி பண்டாரநாயக்க நியமிக்கப்படுவார் என பொது வேட்பாளர் தரப்பு உறுதியளித்திருந்தது.
அதன் அடிப்படையில் 43ம் பிரதம நீதியரசராக கடமையாற்றி வரும் மொஹான் பீரிஸை பதவி விலகுமாறு அரசாங்கம் கோரிய போதிலும் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து சட்டத்தரணிகள் பிரதம நீதியரசரை பதவி விலகுமாறு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குற்றப் பிரேரணை மூலம் பணி நீக்கம் செய்யப்பட்ட சிரானி பண்டாரநாயக்க நாளைய தினம் உத்தியோகபூர்வமாக பிரதம நீதியரசராக கடமையாற்றி பின்னர், பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள உள்ளார்.
அதன் பின்னர், பிரதம நீதியரசராக கே. ஸ்ரீபவன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 9ம் திகதி சிரேஸ்ட நீதியரசர் ஸ்ரீபவன் முன்னிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/95716.html

No comments:

Post a Comment