Friday, December 26, 2014

பணம், நகையை கொள்ளையடித்து அதிபர்-மகள் கொலை.... (படம் இணைப்பு)


கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த குமாரபாளையத்தை சேர்ந்தவர் ராக்கியப்பன் (வயது 45). இவரது மனைவி சரோஜினி (45). மகள்கள் வினோதினி (26), யசோதா (23). நேற்று முன்தினம் இரவு ராக்கியப்பனும், அவரது மகள் வினோதினியும் படுகொலை செய்யப்பட்டனர். சரோஜினியும், யசோதாவும் படுகாயத்துடன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பெரும்பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், உத்தரவின் பேரில் சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். அப்போது ராக்கியப்பனின் விசைத்தறி கூடத்தில் வேலை பார்த்த குமார் என்ற வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் குமார் கூட்டாளிகளுடன் சேர்ந்து ராக்கியப்பன் குடும்பத்தினரை கத்தியால் குத்தியது தெரியவந்தது.

இதையடுத்து தனிப்படை போலீசார் குமார் மற்றும் அவரது நண்பர்களான பரமசிவன் (23), அப்துல் காதர் (29) ஆகியோரை கைது செய்தனர். கைதான குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:�

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த நான் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு என் தந்தை இறந்த போது தாயுடன் கோவை அருகேயுள்ள பள்ளபாளையத்தில் வந்து குடியேறினேன். குடும்பம் நடத்த கிடைத்த வேலைக்கு சென்று வந்தேன். இந்நிலையில் தறி ஓட்ட கற்றுக்கொண்டேன். கடந்த 2 ஆண்டுகளாக தறி கூடங்களில் வேலை பார்த்து வந்தேன்.

தறிகூடத்தில் வேலை பார்த்த சமயத்தில் அட்வான்ஸ் தொகை உரிமையாளர்கள் தொழிலாளர்களுக்கு கொடுப்பதை தெரிந்து கொண்டேன். இதையடுத்து ஒவ்வொரு தறிக்கூடத்துக்கும் சென்று 2 நாட்கள் வேலை பார்த்து விட்டு 20 ஆயிரம் முதல் அட்வான்ஸ் தொகை கேட்டு வாங்குவேன். பணம் கிடைத்ததும் தலைமறைவாகிவிடுவேன்.

அந்த பணம் செலவாகும் வரை ஜாலியாக இருந்து விட்டு மீண்டும் வேறொரு தறிக்கூடத்தில் வேலை பார்ப்பது போல் நடித்து பணம் வாங்கிக்கொண்டு தப்பிவிடுவேன். இப்படித்தான் ராக்கியப்பனின் தறிக்கூடத்தில் கண்மணி பிரபு என்கிற தறிக்கூட புரோக்கர் மூலமாக வேலைக்கு சேர்ந்தேன். அட்வான்ஸ் தொகை பெற்றுவிட்டு ஏமாற்ற நினைத்தேன்.

இந்நிலையில் ராக்கியப்பனிடம் பணம் அதிகமாக இருப்பதும், அவரது மகள்கள் நகைகளை அணிந்து கொண்டு செல்வதையும் பார்த்தேன். அவற்றை அபகரிக்க திட்டமிட்டேன். இதற்காக எனது சொந்த ஊரான திருநெல்வேலியில் உள்ள எனது நண்பர் அப்துல் காதரை தொடர்பு கொண்டேன். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் குவைத்திலிருந்து ஊர் திரும்பியிருந்தான். வேலையில்லாததால் கையில் காசு இல்லாமல் திண்டாடிக்கொண்டு இருந்தான். அவனிடம் எனது திட்டத்தை தெரிவித்து கோவைக்கு வரவழைத்தேன்.

அவன் என்னிடம் கோவையில் பல இடங்களில் கொள்ளையடித்தால் நிறைய பணம் கிடைக்கும் என்று கூறினான். மேலும் துணைக்கு ஒரு ஆளை வைத்துக்கொள்ளலாம் என்றும் ஆலோசனை தெரிவித்தான். இதைத்தொடர்ந்து திருநெல்வேலியில் கூலிப்படையில் இருந்த பரமசிவனை வரவழைத்தோம்.

அவனிடம் எங்களது திட்டம் குறித்து கூறிய போது அவன் எங்களுக்கு தைரியம் அளிக்கும் விதத்தில் பேசினான். அது எங்களுக்கு ஊக்கமளிப்பாக இருந்தது. நான் ராக்கியப்பனிடம் 2 பேரையும் வேலைக்கு அழைத்து சென்றேன். அவரது தறிக்கூடத்தில் வேலை பார்ப்பது போல் நடித்து வீட்டை நோட்டமிட்டோம். இந்த நிலையில் 2 பேருக்கும் சரியாக வேலை தெரியாததால் சந்தேகமடைந்த ராக்கியப்பன் 2 பேரையும் வேலையை விட்டு நீக்கி விட்டார்.

இதையடுத்து சம்பவத்தன்று பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிக்க திட்டமிட்டோம். இதற்காக கடைக்கு சென்று புதிதாக 3 கத்திகள் வாங்கினோம். பின்னர் ஒரே மோட்டார் சைக்கிளில் ராக்கியப்பனின் தறிக்குடோனுக்கு சென்றோம். அங்கு ராக்கியப்பனை அழைத்தோம்.

அவர் வீட்டுக்குள் இருந்து தறிக்குடோனுக்குள் வந்தபோது காலை பிடித்து இழுத்து கீழே தள்ளி அவரது கை மற்றும் கால்களை பிடித்துக்கொண்டோம். பின்னர் பணத்தை தரும்படி மிரட்டினோம். அவரோ கூச்சலிடத்தொடங்கினார். இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் 3 பேரும் ராக்கியப்பனை சரமாரியாக 28 இடங்களில் கத்தியால் குத்தினோம். அவரது சத்தம் கேட்டு மூத்த மகள் வினோதினி வந்தார். அவரையும் குத்தினோம். இதில் 2 பேரும் இறந்தனர். அப்போது அங்கு சரோஜினியும், யசோதாவும் வந்தனர். அவர்களையும் தாக்கினோம். அப்போது யசோதா எங்களிடமிருந்து தப்பித்து ரோட்டுக்கு சத்தம் போட்டபடியே ஓடினார். சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்ததால் சிக்கிக்கொள்வோம் என பயந்து நாங்கள் அங்கிருந்து தப்பி ஓடினோம்.

இதனால் எங்களால் திட்டமிட்டபடி நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் இருந்தால் போலீசிடம் சிக்கிக் கொள்வோம் என பயந்து மோட்டார் சைக்கிளை ரோட்டில் போட்டு விட்டு பஸ்சில் கிருஷ்ணகிரி சென்று அங்கிருந்து மும்பை செல்ல திட்டமிட்டோம். பஸ்சில் செல்லும்போது போலீசார் எங்களை கைது செய்து விட்டனர் என்று தெரிவித்தார்.
26 Dec 2014

No comments:

Post a Comment