Monday, December 29, 2014

அல்-ஸபாப் இயக்க டாப் தளபதி சரணடைந்தார்: சி.ஐ.ஏ.-வுக்கு தகவல் கொடுத்தது இவரா ?

சோமாலியாவில் யுத்தம் புரியும் அல்-ஸபாப் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதி, சரணடைந்திருக்கிறார் என்ற தகவலை சோமாலிய உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஜகாரியா இஸ்மாயில் அஹ்மத் ஹெர்சி என்ற பெயருடைய இந்த தீவிரவாத தளபதியின் தலைக்கு, $3 மில்லியன் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. சோமாலிய மீடியாக்களில் நேற்றுக்காலையில் பரபரப்பான ஹெட்லைன் நியூஸாக வெளியாகியுள்ள இந்த செய்தி இதுவரை உறுதி செய்யப்படவில்லை. சோமாலிய உளவுத்துறை அதிகாரி ஒருவர் இந்த தகவலை கூறியதாகவே, சோமாலிய மீடியாக்கள் கூறுகின்றன. அந்த அதிகாரி தமது பெயரை வெளியிட விரும்பவில்லை.
கடந்த 2012-ம் ஆண்டு அமெரிக்க அரசு, அல்-ஸபாப் இயக்கத்தின் முக்கிய 7 டாப் புள்ளிகளின் தலைக்கு மொத்தம் $33 மில்லியன் சன்மானம் அறிவித்திருந்தது. அந்த 7 பேரில் தற்போது சரணடைந்ததாக கூறப்படும் அஹ்மத் ஹெர்சியும் ஒருவர். இவரை பிடித்துக் கொடுத்தாலோ, கொன்றாலோ, அல்லது தகவல் கொடுத்து இவர் பிடிபட்டாலோ $3 சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. இவர் பற்றிய தகவல் உண்மை என்றானால், இந்த சன்மானம் வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. காரணம், இவர் சரணடைந்தது எப்படி என்ற விபரம் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
பாதுகாப்பு படையினர் இவரது மறைவிடத்தை சுற்றி வளைத்து முற்றுகையிட்ட நிலையில் தப்ப முடியாமல் சரணடைந்திருந்தால், $3 மில்லியன் சன்மானம் வழங்கப்படும். ஆனால், இவராக வலியப்போய் சரணடைந்திருந்தால், $3 மில்லியன் கிடையாது. சமீப காலமாக அல்-ஸபாப் இயக்கம் அடுத்தடுத்து பின்னடைவுகளை சந்தித்துக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் இந்த இயக்கத்தின் தலைவர் அஹ்மத் அப்தி கொடானே கொல்லப்பட்டார். அவரது மறைவிடம் பற்றிய உளவுத் தகவல் கிடைத்ததையடுத்து, அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.-வால் இயக்கப்பட்ட உளவு விமானம் ஒன்று ஏவிய ஏவுகணையில் அவர் பலியானார்.
தலைவரின் மறைவிடம் பற்றிய உளவுத் தகவல், இயக்கத்துக்கு உள்ளே உயர்மட்ட நபர் ஒருவரால் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம், அஸ்-ஸபாப் இயக்கத்துக்கு ஏற்பட்டதில், இயக்கத்தின் உயர்மட்ட தளபதிகள் சிலர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதையடுத்து, இயக்கத்துக்கு உள்ளே சில மோதல்களும் நடந்தன. சில கொலைகளும் விழுந்தன. தற்போது சரணடைந்ததாக கூறப்படும் அஹ்மத் ஹெர்சி, தாமாகவே வலியச் சென்று சரணடைந்திருந்தால், அவருக்கும், தலைவரின் மறைவிடம் பற்றி சி.ஐ.ஏ.-வுக்கு தகவல் கொடுத்த விவகாரத்துக்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாம்.

No comments:

Post a Comment