Thursday, December 18, 2014

சுடுகாட்டில் கொத்து கொத்தாக புதைக்கப்பட்ட 10 லட்சம் மம்மிக்கள்!

எகிப்தில் ஒரே இடத்தில் 10 லட்சம் மம்மிக்கள் புதைக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எகிப்தில் பாக்-இல்-கேமஸ் (Fag el-Gamous) என்ற 300 ஏக்கர் மயானத்தை கண்டுபிடித்த அமெரிக்காவின் உடாஹ் (Utah) நகரில் உள்ள ப்ரிகாம் யங் பல்கலைக்கழக (Brigham Young University)தொல்லியல் ஆய்வு குழு கடந்த 30 ஆண்டுகளாக அங்கு ஆய்வு நடத்தி வருகிறது.
சுமார் 75 அடி ஆழம் வரை பூமிக்குள் பள்ளம் தோண்டி இந்த மம்மிகள் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த மிகப்பெரிய மயானத்திலிருந்து, இதுவரை 1700 மம்மிக்களை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
அதிலும் 18 மாத பெண் குழந்தை மம்மிக்கு அணிவிக்கப்பட்டிருந்த, கழுத்தணி மற்றும் வளையல் இன்றும் அப்படியே உள்ளது.
மேலும் 7 அடி உயரம் கொண்ட ஆண் மம்மி ஒன்றையும் கண்டுபிடித்துள்ளனர். இவை அனைத்தும் கி.பி. முதலாம் நூற்றாண்டு முதல் கி.பி. 7ம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
குறிப்பாக தலைமுடியை கொண்டு மம்மிக்கள் வகைப்படுத்தப்பட்டு கூட்டம் கூட்டமாக புதைக்கப்பட்டுள்ளனர். தலையில் மஞ்சள் நிறத்தில் முடி கொண்டவர்கள் ஒரு கூட்டமாகவும், சிகப்பு நிறத்தில் முடி கொண்டவர்கள் மற்றொரு கூட்டமாகவும் புதைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் என்ன காரணத்திற்காக இவ்வளவு பேர் ஒட்டுமொத்தமாக புதைக்கப்பட்டனர்? என்பது தான் மிகப்பெரிய மர்மமாக உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ப்ரிகாம் யங் பல்கலைக்கழக திட்ட இயக்குனரான பேராசிரியர் கெர்ரி முஹ்லெஸ்டின் (Kerry Muhlestein) கூறுகையில், ஒரே இடத்தில் 10 லட்சம் மம்மிக்கள் புதையுண்டு இருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் வரும் காலத்தில் மேலும் அதிசயிக்கத்தக்க தகவல்கள் இங்கிருந்து கிடைக்க வாய்ப்புள்ளது எனவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment