Thursday, November 27, 2014

சீன விமானம்தாங்கி கப்பல் தளத்தை ரகசியமாக போட்டோ எடுத்தது எந்த நாட்டு உளவுத்துறை ?


சீனாவை சேர்ந்த உளவாளிகள் தமது நாட்டில் உளவு பார்ப்பதாக அமெரிக்கா அவ்வப்போது குற்றம் சாட்டிக் கொண்டிருக்கும் நிலையில், வெளிநாட்டு உளவுத்துறைக்காக தமது விமானம் தாங்கி கப்பல் தளத்தை உளவு பார்த்த நபர் என ஒருவரை கைது செய்துள்ளது, சீன உளவுத்துறை. சைனா சென்ட்ரல் டி.வி. சேனல் வெளியிட்டுள்ள இந்த தகவலில், குறிப்பிட்ட நபர் எந்த நாட்டு உளவுத்துறைக்காக உளவு பார்த்தார் என்ற விபரம் குறிப்பிடப்படவில்லை.
“சமீபகாலமாக சீனாவைச் சேர்ந்த இளைய தலைமுறையினரை சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்புகொள்ளும் வெளிநாட்டு உளவுத்துறைகள், அவர்களை சொந்த நாட்டிலேயே உளவு பார்க்கும் நபர்களாக மாற்றி விடுகின்றன” எனவும் உபரியாக குற்றம்சாட்டியுள்ளது சீன டி.வி. சேனல்.
இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவலின்படி, கைது செய்யப்பட்ட நபரின் குடும்ப பெயர், காவ். சீனாவின் கிழக்கு துறைமுக நகரான குவிங்டாவோவில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் இருந்து சக்திவாய்ந்த கேமரா, டெலஸ்கோபிக் லென்ஸூகள், கம்ப்யூட்டர், மற்றும் ‘இதர சாதனங்கள்’ கைப்பற்றப்பட்டதாக, சீன பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நபரை இணையத்தளம் மூலம் தொடர்புகொண்ட மற்றொரு நபருக்கு, சீனாவின் விமானம் தாங்கி கப்பல் தளத்தை வெவ்வேறு கோணங்களில் போட்டோ எடுத்து இவர் விற்பனை செய்ததாக சீன உளவுத்துறை தெரிவித்துள்ளது. போட்டோக்களை வாங்கிய நபர், தம்மை ஒரு ராணுவ ஆய்வு சஞ்சிகையின் ஆசிரியர் என அறிமுகம் செய்திருந்தாராம்.
குறிப்பிட்ட சஞ்சிகை எந்த நாட்டில் இருந்து வெளியாகும் சஞ்சிகை என்ற விபரம் வெளியிடப்படவில்லை.

No comments:

Post a Comment