Thursday, November 27, 2014

முதுபெரும் எழுத்தாளர் எஸ்போ இயற்கை எய்தினார் !



இலங்கையின் முதன்மையான தமிழ் கலை இலக்கிய படைப்பாளியான எஸ்.பொ என அழைக்கப்படும் எஸ். பொன்னுத்துரை சிட்னியில் நேற்று காலமானார்.
இவர் யூன் 4ம் திகதி, 1932ம் ஆண்டு நல்லூர், யாழ்ப்பாணத்தில் பிறந்தார் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார்.
நைஜீரியாவில் ஆங்கிலத்துறையில் தலைவராக பணியாற்றிய இவர் மட்டக்களப்பில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியதுடன் தனது வாழ்க்கைத்துணையையும் மட்டக்களப்பில் தேடிக்கொண்டார். நாவல், சிறுகதை, நாடகம், கவிதை, பத்தி எழுத்து, விமர்சனம் முதலிய துறைகளிலும் ஆளுமையுடன் செயலாற்றினார்.
இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் சக படைப்பாளிகளுடன் கருத்து வேறுபாடு கொண்டு அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொடக்கினார்.
அவுஸ்திரேலியாவில் சிறிது காலம் வெளிவந்த "அக்கினிக்குஞ்சு" சர்வதேச இதழின் கௌரவ ஆசிரியராக விளங்கியவர். செம்பென் ஒஸ்மான என்ற செனகல் நாட்டு எழுத்தாளர் எழுதிய ஹால என்ற நாவலை மொழி பெயர்த்துள்ளார். மற்றும் நுகுகி வா தியங்கோ என்ற கென்யா நாட்டு இலக்கிய எழுத்தாளரின் "Weep Not Child" என்ற நாவலை தமிழில் "தேம்பி அழாதே பாப்பா" என்று மொழிபெயர்த்துள்ளார்.
இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய இனி ஒரு விதி செய்வோம் என்ற நூலும் வெளிவந்துள்ளது. சுமார் இரண்டாயிரம் பக்கங்களில் வரலாற்றில் வாழ்தல் என்ற தமது சுய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். சென்னையில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2010 க்கான வாழ்நாள் இயல் விருது வழங்கப்பட்டது.
தமிழர்களில் தம்மைத்தாமே புத்திஜீவிகளாகவும் மேதாவிகளாகவும் காட்டிக்கொள்ளும் இவரது துறை சார்ந்த சிலரால் இவரது பெருமைகள் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பதுவும் வருத்தம் தரும் செய்தியாகும். எது எப்படியானாலும் ஒருவரது பெருமை அவர் வாழ்ந்த நாட்களைவிட அவர் இறந்தபின்னே இந்த உலகம் புரிந்துகொள்ளும் அந்தவகையில் திரு எஸ்போ அவர்களின் பெருமையும் தமிழ் உலகம் கொண்டாடும் அவரது கனவுகள் மெய்ப்படட்டும்.
http://www.tamilwin.com/show-RUmszBRbKZnrz.html

No comments:

Post a Comment