Saturday, November 29, 2014

உலகெங்கும் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்!!



மெல்பேர்ணில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 04:58.44 PM GMT ]
தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
ஸ்பிறிங்வேல் நகர மண்டபத்தில் 27 - 11 – 2014 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற இந்நினைவெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்து கொண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மாலை 6 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளில் ஒருவரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளருமான  திரு டொமினிக் சந்தியாப்பிள்ளை அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த கரன் மயில்வாகனம் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த செயற்பாட்டாளர் திரு. கிறிஸ்ரி அவர்கள் ஏற்றி வைத்தார்.
அதனையடுத்து ஈகச்சுடரேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. முதல் மாவீரன் லெப்.சங்கரினதும் முதற்பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியினதும் திருவுருவப்படங்களுக்கான ஈகச்சுடரை திருமதி நிர்மலா கதிர்காமத்தம்பி அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து நூறு வரையான மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோரும் உரித்துடையோரும் தமது மாவீரச் செல்வங்களுக்கு ஈகச்சுடரேற்றி, மலர்வணக்கம் செய்தனர்.
அதன்பின்னர் இடம்பெற்ற அகவணக்கத்தைத் தொடர்ந்து துயிலுமில்லப்பாடல் ஒலித்தது. மண்டபத்தில் நிறைந்திருந்த அனைவரினதும் கைகளில் தீபங்கள் எரிந்து கொண்டிருக்க அப்பாடல் முழுவதும் உணர்வுமயமாக மக்கள் ஒன்றித்திருந்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்களின் மலர்வணக்கம் மிகவும் உணர்வுபூர்வமானதாக நடைபெற்றது.
மலர்வணக்க நிகழ்வின்போது தாயக துயிலுமில்லக் காட்சிகளை தாங்கிய காணொளிகளும், மாவீ­ரர் கவிதைகளின் பின்னுாட்டத்தில் அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தாயக துயிலுமில்ல நிகழ்வுகளை நினைவில் சுமந்து மாவீரர்களுக்கு தமது மலர்வணக்கத்தை அனைவரும் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து மாவீரர்களை நெஞ்சிலிருத்தி தமிழீழ விடுதலைக்காக அனைவரும் அயராது உழைப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து மாவீரர் நினைவான நடனத்தை நிருத்தக் சேத்திரா நடனப்பள்ளி மாணவர்கள் வழங்கினர்.
மாவீரர் நினைவுரையை திரு.சிந்துாரன் திலகராஜா அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து நடனாலய நடனப்பள்ளி மாணவர்களின் மாவீரர் நினைவு நடனம் இடம்பெற்றது.
நினைவு நடனத்தைத் தொடர்ந்து மாவீரர் நினைவுரையை திரு. ஈசன் அவர்கள் நிகழ்த்தினார்.
 மாவீரர்களின் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் மையப்படுத்தி அமைந்த அவ்வுரையில் குறிப்பிட்ட சில மாவீரர்களின் தியாகச் சம்பவங்களைத் தொட்டுக்காட்டிய ஈசன், போராட்ட வடிவங்கள் மாறினாலும்  ஒன்று பட்ட சக்தியாகத் தொடர்ந்தும் பயணிப்பதே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையுமென்ற கருத்தை முன்வைத்தார்.
இறுதி நிகழ்வாக நாட்டிய நாடகம் ஒன்று இடம்பெற்றது. மாவீரரின் உன்னதமான தியாகத்தை எடுத்தியம்பும் வகையில் அமையப்பெற்ற இந்நாட்டிய நாடகம் அழகான பின்னணி இசையுடனும் ஒளியமைப்புடனும் அரங்கில் நிகழ்த்தப்பட்டது.
மாவீரர்களின் அர்ப்பணிப்பை அனைவர் முன்கொண்டுவந்த அக்கலைப்படைப்பில் எதிர்காலச்சந்ததிக்கும் எம்மவர் தியாகமகத்துவத்தை எடுத்துச்செல்வதாய் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இரவு 9.00 மணியளவில் தேசியக் கொடிகள் இறக்கப்பட்டதுடன் ”தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என உறுதியெடுத்துக்கொண்டு நிகழ்வு எழுச்சியுடன் நிறைவுபெற்றது. கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் வெளியிடப்பட்ட காந்தள் என்ற மாவீரர்நினைவுகளை தாங்கிய இதழ் இந்நிகழ்வில் விநியோகிக்கப்பட்டது.
தேசியத்தலைவர், மாவீரர்கள், தேசியக்கொடி, தேசியகீதம், தமிழீழம் ஆகியவை குறித்த விளக்கக் கட்டுரைகளுடன் பொதுமக்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள், வர்த்தக நிறுவனங்கள் வழங்கிய மாவீரர் வணக்க கவிதைகளையும் தாங்கி காந்தள் இதழ் வெளியாகியிருந்தது.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு (விக்ரோரியா)
http://www.tamilwin.com/show-RUmszBRcKZmsz.html


பின்லாந்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள்
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 05:14.09 PM GMT ]
பின்லாந்தின் தலைநகர்  ஹெல்சின்கில் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
பின்லாந்து தமிழர் பேரவையை சேர்ந்த தினேஷ் தலைமையில் மாலை 5 மணியளவில் ஆரம்பமாகியது.
முதலாவது நிகழ்வாக பொதுச் சுடர் ஏற்றப்பட்டது, பொதுச் சுடரினை பின்லாந்து தமிழர் அவையின் செயலாளர் அவர்கள் ஏற்றி வைத்தார்கள், அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசிய கொடியினை தமிழகத்தில் இருந்து வருகைதந்து இருந்த பேராசிரியர் மு. செ.அறிவு அரசன் அவர்கள் ஏற்றி வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து மாவீரர்நாள் அறிக்கை ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து மாவீரர் நினைவு மணி ஒலி எழுப்பப்பட்டு, ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது. பின்னர் மாவீர்களுக்கும் போரினால் கொல்லப்பட்ட பொது மக்களுக்கும் அக வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து சிறப்பு உரையினை பேராசிரியர் மு.செ.அறிவு அரசன் அவர்கள் நிகழ்த்தினார்.
தொடர்ந்து அன்னை பூபதி கலைக்கூட ஆசிரியர்களினதும் மாணவர்களினதும், மாவீரர்களின் ஈகத்தை போற்றும் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZms0.html

பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள்
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 05:30.13 PM GMT ]
தேசிய மாவீரர் நாள் பெல்ஜியம் நாட்டில் மிக உணர்வுபூர்வமாக நடைபெற்றது. பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வை தொடர்ந்து எமது மண்ணுக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களுக்காக வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
சிறப்பு பேச்சாளராக யேர்மனியில் இருந்து கலந்துகொண்ட ஆசிரியர் தமிழ் மக்கள் மாவீரச் செல்வங்கள் எம்மிடம் விட்டுச்சென்ற பணிகளை, தேசியக் கடமைகளை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனது உரையை நிகழ்த்தினார்.
தேசிய மாவீரர் நாளில் கலந்து கொண்ட மக்கள் தமது பிள்ளைகளை வணங்கியதோடு அவர்களின் ஆசைகளை நிறைவேற்ற உறுதி எடுத்துக் கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRcKZms1.html

கார்த்திகை 27இல் கனடிய மண்ணில் மாவீரர் நாள்
[ வெள்ளிக்கிழமை, 28 நவம்பர் 2014, 05:59.23 PM GMT ]
கனடாவில் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கூடி உள்ளத்தில் உணர்வு பொங்க கலங்கிய கண்களோடு மாவீரர்களுக்கு உருக்கமாக அகவணக்கம் செலுத்தினார்கள்.
தமிழர் நினைவு அறக்கட்டளையினால் ஏற்பாடு செய்யப்பட்டு, ரொறன்ரோ மேற்குப் பகுதியில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வு ஈழத்தமிழர் தேசியக் கொடி மற்றும் கனடிய தேசியக் கொடிகள் ஏற்றுதலோடு ஆரம்பித்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அடுத்து இசைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லப் பாடல் மக்களின் மனதை உருக்கி அஞ்சலிக்காக தயார் படுத்தியது.
மாவீரர் குடும்ப உறுப்பினர் சார்பில் சுடர் விளக்கை ஏற்றி வைத்த பின் நெஞ்சை நெகிழ்விக்கும் வணக்க இசையுடன் மாவீரரை கண்முன் நிறுத்தும் காட்சிகள் திரையில் ஓடிக்கொண்டிருக்க மக்கள் உருக்கமாக நீண்ட வரிசையில் நின்று மலரஞ்சலி செய்தார்கள்.
கணீர் என்ற குரலில் ஒலித்த மாண்புமிகு தேசியத் தலைவரின் மாவீரர் உரைப் பகுதிகள் மக்களை வசியப்படுத்தி ஆட்கொண்டது.
இந்த நிகழ்வில் மூத்த தலைவரும் தாயகத்தின் விடிவிற்காய் அயராது உழைத்து வருபவருமான தங்கவேலு அவர்கள் தொடக்க உரை ஆற்றினார்.
தாயக உறவுகளின் மறுவாழ்வு ஒன்றே ஈழத்தில் நிரந்தர விடியலைத் தேடித்தரும் என்றும் அதற்காய் தொடர்ந்து புலம்பெயர் தமிழர் உறுதியோடு உழைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
மேலும் ஈழவேந்தன் அவர்கள் உட்பட பலரும் உரையாற்றினார்கள்.
தமிழர் நினைவு அறக்கட்டளை சார்பாக நிறைவுரை ஆற்றிய ரெஜி சபாரத்தினம்,
மாவீரரின் தியாகங்களை மனதிற் கொள்வோம். அவர்களின் கனவுகளை நனவாக்க உறுதிகொள்வோம். மாவீரர் புகழ் மாலைகளை விரும்பியவர்கள் அல்ல.
மாவீரரின் உன்னத தியாகங்களை நாங்கள் மதிப்பதானால் அவர்களுக்கு எளிமையாக நெஞ்சுருகி அஞ்சலி செய்வோம்.
அஞ்சலிக்காகவே லட்சக்கணக்கில் பணம் செலவிட்டு நமக்கு நாமே புகழ் தேடாமால் இன்று தாயகத்தில் அனாதைகளாய் தேடுவாரற்று வாழ வழியின்றி தவிக்கும் அந்த
மாவீரரின் குடும்பங்களை அரவணைப்போம், தாங்கிக்கொள்வோம், அவர்களுக்கான வாழ்வாதாரங்களை ஏற்படுத்திக் கொடுப்போம்.
போரினால் அநியாயமாக தமது வாழ்வைத் தொலைத்து நிற்கும் விதவைகள் ஊனமுற்றோர் வாழ வழியற்றோர் அனைவருக்கும் நாங்கள் உதவ வேண்டும்.
அந்த மாவீரர்களைப் போல் இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது அவர்களின் அர்ப்பணிப்பைப் பின்பற்றி நாமும் உண்மையான தூய மனத்தோடு போட்டி பொறாமை சுயநலமின்றி பணியாற்ற வேண்டும்.
எமது செயற்பாடுகளில் முழுமையான வெளிப்படைத் தன்மையும் அர்ப்பணிப்பும் இருக்க வேண்டும். இந்த அடிப்படையில் உருவானதுதான் தமிழர் நினைவு அறக்கட்டளை. இந்த அறக்கட்டளையானது உங்கள் எதிர்பார்ப்புக்கிணங்க உறுதியாக தூய்மையாக செயற்படும் என்று உறுதி அளிக்கின்றேன். என்று கூறினார்.
தமிழ்நாட்டில் இருந்து வந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் நிகழ்வில் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில்,
எங்களுக்குக்கான காலம் வந்துவிட்டது. ஆயுதப்போராட்ட காலத்தைப் போல இன்றைய ஜனநாயக அறவழிப் போராட்டத்திலும் மீண்டும் தமிழனம் விரக்தியை விட்டு வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையோடு போராட வேண்டும்.
பலமிக்க ஒரு போராட்ட சக்தியாக விளங்கிய ஈழவிடுதலைப் போராட்டம் இலக்கை அடைய வேண்டுமானால் தலைவரின் கருத்திற்கேற்ப மாறுபட்ட வடிவங்களோடு தொடரவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

http://www.tamilwin.com/show-RUmszBRcKZms3.html

நவம்பர் 27! சர்ச்சையைக் கிளப்பிய கனடிய எம்.பி.யின் பாராளுமன்ற உரை! - இறந்த கனடிய வீரர்களை அவமதிப்பதாகும்: டீபக் ஒபராய்
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 02:25.17 AM GMT ]
ஒரு பயங்கரவாத அமைப்பின் இறந்த உறுப்பினர்களோடு கனடிய கொள்கைளிற்காகவும் கனடாவின் நலனிற்காகவும் மடிந்த போர் வீரர்களோடு ஒப்பிடுவது தவறு என்பதை ராதிகா உணர வேண்டுமென டீபக் ஒபராய் குறிப்பிட்டுள்ளார்.
ராதிகா மாவீரர் தினம் குறித்து கனடியப் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையைக் கண்டித்த கனடிய வெளிவிவகார அமைச்சு, மனிதவுரிமை விவகாரங்களிற்கான அமைச்சின் செயலாளரான டீபக் ஒபராய் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழர்களிற்கு இலங்கையில் பிரச்சினையுண்டு ஆனால் அதற்காக கனடியப் போர் வீரர்களின் நினைவு தினத்தை தமிழ் வீரர்களின் நினைவு தினத்தோடு ஒப்பிடுவது தவறானது என்றும் இது போர் வீரர்களை அவமதிக்கும் ஒரு ஒப்பீடு என்றும் தெரிவித்துள்ளார்.
(2 ம் இணைப்பு)  நவம்பர் 27! சர்ச்சையைக் கிளப்பிய கனடிய எம்.பி.யின்  பாராளுமன்ற உரை!
தமிழ் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் தமிழ் ஈழ மக்களுக்காக தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட மாவீரர்களை நினைவுகூரும் நாளான நவம்பர் 27ம் நாள் தொடர்பில் கனடிய பாராளுமன்றத்தில் கடந்த 26ம் திகதி   உரையாற்றியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு ராதிகா தமிழீழ மாவீரர்களுக்கு ஆதரவாக பேசியது அதிர்ச்சியளிப்பதாக, கனடா பொது பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் ப்ளானே கூறியுள்ளார்.
மேலும், இது ஒரு முக்கியமான நாள் மற்றும் நினைவு கூற வேண்டிய நாள் எனக் கூறியதற்காக அனைத்து கனடிய மக்களிடமும், முக்கிய பிரமுகர்களிடமும் ராதிகா சிற்சபைஈசன் மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மாவீரர் தினம், தீவிரவாத அமைப்பான தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் மறைந்த தினம் என்றும் கூறியுள்ளார், மேலும் கனடிய வீரர்கள் இறந்த நாளை, தீவிரவாதிகள் இறந்த நாளுடன் ஒப்பிட்டு கூறியது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார்,
இதனையடுத்து நேற்று, ராதிகா அனுப்பிய மின்னஞ்சலில், தான் எந்தவித தீவிரவாத அமைப்பிற்கும், கலவரத்திற்கும் ஆதரவளிப்பதில்லை என தெரிவித்துள்ளார்.
கனடிய பாராளுமன்றத்தின் முதல் தமிழ் உறுப்பினரான நான், உலக முழுவதும் வசிக்கும் தமிழ் மக்களுக்கும், கனடிய தமிழ் மக்களுடனும் சேர்ந்து போரில் மரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதாகவும் ராதிகா மேலும் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகளை ஒப்பிடும் ராதிகாவின் செயல் இறந்த கனடிய வீரர்களை அவமதிப்பதாகும்: டீபக் ஒபராய்
ஒரு பயங்கரவாத அமைப்பின் இறந்த உறுப்பினர்களோடு கனடிய கொள்கைளிற்காகவும் கனடாவின் நலனிற்காகவும் மடிந்த போர் வீரர்களோடு ஒப்பிடுவது தவறு என்பதை ராதிகா உணர வேண்டுமென டீபக் ஒபராய் குறிப்பிட்டுள்ளார்.
ராதிகா மாவீரர் தினம் குறித்து கனடியப் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையைக் கண்டித்த கனடிய வெளிவிவகார அமைச்சு, மனிதவுரிமை விவகாரங்களிற்கான அமைச்சின் செயலாளரான டீபக் ஒபராய் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழர்களிற்கு இலங்கையில் பிரச்சினையுண்டு ஆனால் அதற்காக கனடியப் போர் வீரர்களின் நினைவு தினத்தை தமிழ் வீரர்களின் நினைவு தினத்தோடு ஒப்பிடுவது தவறானது என்றும் இது போர் வீரர்களை அவமதிக்கும் ஒரு ஒப்பீடு என்றும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmt6.html
கட்டாரில் எழுச்சியுடன் அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்!
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 03:15.40 AM GMT ]
தமிழீழ தாயக விடுதலைக்காய் வித்தாகிய எமது மாவீரர் நாள் நிகழ்வுகள் டோகா கட்டார் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் நடத்தப்பட்டது.
இதில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் கலந்து கொண்டு எம் விடுதலைக்காய் வித்தாகிய மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி வீரவணக்கம் செலுத்தினார்கள்.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmt7.html

யேர்மனியில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு.
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 05:29.26 AM GMT ]
தமிழீழ தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை மனதில் நிறுத்தி யேர்மனியில் DORTMUND நகரில் பிரம்மாண்ட மண்டபத்தில் மாவீரர் நாள் நிகழ்வு மிகவும் எழுச்சிகரமாக நினைவுகூரப்பட்டது.
நண்பகல் 12.45 மணியளவில்  பொதுச்சடர் ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து  தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் அறிக்கை ஒலிபரப்பப்பட்டது.
உரையின் முடிவில் மணியோசை மண்டபம் நிறைக்க  மாவீரர்களுக்கான ஈகைச்சுடர் மாவீரர் ஒருவரின் சகோதரியால் ஏற்றிவைக்கப்பட்டது.
அகவணக்கத்தினைத் தொடர்ந்து சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்த மாதிரி மாவீரர் துயிலும் இல்லமும்  தூபிகளும் சுடர்களால் ஒளியூட்டப்பட்டு உத்தமர்களின் உறைவிடம் ஒளிப்பிரகாசமானது.
சுடர் ஏந்தி மாவீரர் குடும்பத்தவர் வரிசையாக நிற்க தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப் பேழைகளே என்கின்ற கல்லறைப்பாடல் மக்களின் மனங்களையெல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டது. 
மாவீரர்களது குடும்ப உறவினரால் சுடர்வணக்கமும் தேசிய மலராம் கார்த்திகைப்பூக் கொண்டு மாவீரர்களுக்கான மலர்வணக்கமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தமிழீழம் இசைக்குழுவினரால்  மாவீரர் கானங்கள் இசைக்கப்பட மலர்வணக்கமும் சுடர் வணக்கமும் நிகழ்ந்து கொண்டிருந்தன. எமக்காய் வாழ்ந்து எமக்காய் மடிந்த ஈகைச் செல்வங்களே உங்களைப் போற்றுவதால் நாம் புனிதமடைகின்றோம்! உங்கள் கல்லறை மீதுமே சத்தியம் செய்து எம் பணி தொடர்வோம் என்று வரிசையாக மக்கள் துயிலுமில்லம் நோக்கி அணிவகுத்து மலர் தூவி சுடர் ஏற்றி தமது வணக்கத்தைச் செலுத்தினர்.
எங்கிருந்து என்பது புரியாது. எவர் பிள்ளைகள் என்று பாராது. என் பிள்ளைதான் நீயோ என்று எல்லோரும் தமது பிள்ளைகளாய் எண்ணி மாவீர்களை பூசித்த காட்சியானது தமிழினத்தையும் ஈழவிடுதலையையும் எந்தத் துரோகமும் எந்த சதித் தந்திரங்களுக்கும் வென்றுவிட முடியாது அவை தூர விரட்டியடிக்கப்படும் என்பதை உணர்த்தி நின்றது.
மண்டப மேடையில் இவ் ஆண்டின் சிறப்பு வெளியீடுகளாக எழுச்சிகானங்களை உள்ளடக்கிய 2 இறுவெட்டுக்கள் மாவீரர் நிகழ்ச்சியில் வெளியிட்டு வைக்கப்பட்டன.
தொடர்ந்த சிறப்பு விருந்தினரின் சிறப்புரை இடம்பெற்றது. மக்களின் உறுதியான போராட்டம் தொடர வேண்டிய அவசியத்தையும் இனவிடுதலை என்பது ஈழவிடுதலையைத் தவிர வேறெந்த வழியிலும் சாத்தியமாகப் போவதில்லை என்பதையம் வலியுறுத்தி அவரது பேச்சு அமைந்தது.
தொடர்ந்து மாவீரர்கள் நினைவாக எழுச்சி நடனங்கள், எமது மக்களின் அவலங்களை வெளிக்காட்டும் நாட்டிய நாடகம், கவிதைகள் என நிகழ்வுகள் அரங்கேறியது.
தமிழீழ விடுதலையை வென்றெடுக்க தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது வழிநடாத்துதலில் அவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்டுமானங்களையும் பலப்படுத்தி தொடர்ந்து போராடுவோம் என்றும் இப்பணிகளை உறுதியுடனும் ஒற்றமையுடனும் முன்நின்று நாம் முன்னெடுத்துச் செல்வோம்  என்றும் உறுதி கூறப்பட்டது.
இதேவேளை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின்  மாவீரர் குடும்ப மதிப்பளிப்புக் குழுவின் ஏற்பாட்டில் முற்பகல் 10 மணியளவில் இருந்து மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு அதே மண்டபத்தின் ஒரு பகுதியில் நடைபெற்றது.
எமக்காய் தம்மைத் தந்த மாவீரர்களை ஈன்றெடுத்தவர்கள் மற்றும் சகோதர சகோதரிகள் கிளைச் செயற்பாட்டாளர்களோடு கூடிநின்று மாவீரராகிய பிள்ளைகளையும் அவர்தம் வாழ்வையம் பகிர்ந்து கொண்டதோடு அப் பிள்ளைகளின் செயலை எண்ணிப்  பாராட்டினர்.
அவர்களது இலட்சியத்தில் தமிழினம் விடிவுபெற வேண்டும் என்றும் மனதாரப் பிரார்தித்தனர். இந் நிகழ்வின் இறுதியில் மதிப்பளிப்புக் குழுவினரால் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmu1.html

சுவிஸில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வு
[ சனிக்கிழமை, 29 நவம்பர் 2014, 09:47.51 AM GMT ]
தாயக விடுதலைக்காய் தம்முயிர் ஈந்தவர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2014 நிகழ்வுகள் சுவிசில் பேரெழுச்சியோடு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
சுவிசில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர்நாள் 2014 நிகழ்வுகள் இவர்டோன் நகரில் அமைந்துள்ள நினைவுக்கல்லில் 27ம் திகதி காலை 09.00 மணியளவில் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி முறையே அகவணக்கம், மலரஞ்சலி, தீபமேற்றல், உறுதிப்பிரமாணம் எடுத்தல் என்பவற்றோடு நிறைவுபெற்றன.
தாயக விடுதலை வேள்வியில் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் குடும்ப உறவுகளுக்கான மதிப்பளிப்பானது அந்நிகழ்வுக்குரிய மகத்துவத்துடன் மாவீரர் நிகழ்வு மண்டபத்தில் காலை 10. 45 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுவிஸ் வாழ் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
சுவிஸ் பிறிபேர்க் மாநிலத்தில் உள்ள போறூம் மண்டபத்தில் 27.11.2014 பிற்பகல் 13.00 மணியளவில் தமிழீழத் தேசியக்கொடியேற்றலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் கடந்த கால உரைகளிலிருந்து, காலத்தின் தேவையைச் சுட்டிநிற்கும் சிறுதொகுப்பு, அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ தேசிய மாவீரர்நாள் அறிக்கை ஒலிபரப்பப்பட்டது. தொடர்ந்து தாயக நேரம் 18.05 மணியளவில் மணியோசை ஒலிக்க, பொதுச்சுடரேற்றப்பட்டு, அகவணக்கத்துடன் துயிலுமில்லப் பாடல் ஒலிபரப்பப்பட்டு, நிகழ்வுகள் யாவும் வழமையான மரபு முறைப்படி உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது.
சுவிஸ் தேசிய மாவீரர்நாள் நிகழ்வில், சுவிசின், அனைத்து மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து தங்கள் வரலாற்றுக் கடமைக்கான உறுதிமொழியை மாவீரர் திருவுருவப் படங்களுக்கு முன்னால் எடுத்தமையானது சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் தேசிய உணர்வை வெளிப்படுத்தி நிற்கின்றது.
நிகழ்வில் தாயகம் சார்ந்த சிறப்பு வெளியீடுகள் வெளியிட்டு வைக்கப்பட்டதோடு 'தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிஸ்“ இனால் நடாத்தப்பட்ட மாவீரர் நினைவுகள் சுமந்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வெற்றிக்கேடயங்கள் வழங்கப்பட்டதுடன், மாவீரர் குடும்ப உறவுகளுக்கான மாவீரர் நினைவு சுமந்த நினைவுப் பேழைகள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது.
தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த தமிழின உணர்வாளரும், தமிழீழ விடுதலைக்கு ஆரம்பம் முதல் இன்றுவரை தொடர்ந்தும் பெரும் பங்காற்றி வருபவரும் திராவிட விடுதலைக் கழகத்தின் தலைவருமான திரு. கொளத்தூர் மணி அவர்கள் சிறப்புரையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சமகால நிகழ்வுகளைக் கருப்பொருளாகக் கொண்ட நாடகமானது மிகவும் உணர்வுபூர்வமாகவும், எழுச்சியாகவும் இருந்ததுடன் சுவிஸ் வாழ் கலைஞர்களின் உணர்வு மிக்க மாவீரர் காணிக்கை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
இறுதி நிகழ்வாக 'நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்“ என்ற தாயகப் பாடலையடுத்து, தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் உணர்வெழுச்சியுடன் இனிதே நிறைவுபெற்றன.
உலகம் முழுவதும் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வுகள்
http://www.tamilwin.com/show-RUmszBRdKZmw0.html

No comments:

Post a Comment