Wednesday, September 17, 2014

சவூதியில் அவஸ்த்தையில் மகள்! கண்ணீரில் மட்டு பெற்றோர்... (படம் இணைப்பு)


சவூதி அரேபியாவுக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற நிலையில் அங்கு தடுத்து வைக்கப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் தங்களது மகளை மீட்டு தருமாறு யுவதியின் பெற்றோர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஏறாவூர் நகர முதல்வருமான அலிஸாஹிர் மௌலானாவிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

மட்டக்களப்பு வாகரை ஐம்பது வீட்டுத் திட்டக் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த தேவராசா பானுமதி என்ற வீட்டுப் பணிப்பெண்னே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
தமது பெண்ணுக்கு நடந்த கதி குறித்து பெற்றோர் நகர பிதாவிடம் முறையிடுகையில்,
2012ஆம் ஆண்டு 09 மாதம் 31ஆம் திகதி வாகரையிலிருந்து வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக சவூதி நோக்கிப் புறப்பட்ட தமது மகள் 6 மாதங்களுக்குப் பின்னர் எங்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு அடி, உதை, கொதிநீரை உடம்பில் ஊற்றுதல் உட்பட்ட பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாகியுள்ளேன் என்றார்.

அத்துடன் அவர் பணிபுரிந்த காலத்தில் எதுவிதமான வேலைக் கொடுப்பனவும் வழங்கப்படவில்லை. கடைசியாக 2012 பெப்ரவரி மாதம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் கொதி நீரால் சித்திரவதைக்குட்பட்டுள்ளதாகவும் தன்னை எப்படியாவது இந்த வீட்டின் சித்திரவதைகளிலிருந்து காப்பாற்றுமாறும் கூறினார்.

அதன் பின்னர் அவருடனான எந்தவிதமான தொடர்புகளும் இல்லை. இந்த விடயம் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறையிட்டும் அவர்கள் நம்பிக்கை தரக்கூடிய பதில் எதுவும் தந்திருக்கவில்லை.

அதன் பின்னர் ஒரு சில மாதங்களுக்கான சம்பளத்தை மகள் அனுப்பியிருந்தார்.

சனிக்கிழமை (13) எங்களுடன் மகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் இலங்கைக்கு வருவதற்குத் தயாராக இருப்பதாகவும் ஆனால் எஜமானர்கள் தனது ஆடைகள், பாஸ்போட், அடையாள அட்டை உட்பட மற்றும் உடமைகளை எடுத்து மறைத்து வைத்திருப்பதாகவும் கூறி அழுதார் என்று ஏறாவூர் நகரபிதா அலிஸாஹிர் மௌலானாவிடம் முறையிட்டனர்.

இது சம்பந்தமாக சவூதி கொன்ஸியூலர் பிரிவுடன் உடனடியாகத் தொடர்பு கொண்டு இந்த விடயத்தை சவூதி அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று பானுமதியை மீட்டெடுக்க முயற்சிப்பதாக அலிஸாஹிர் மௌலானா பெற்றோரிடம் உறுதியளித்துள்ளார்.
17 Sep 2014

http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1410939818&archive=&start_from=&ucat=1&

No comments:

Post a Comment