Tuesday, September 23, 2014

அமெரிக்க கப்பல் என நினைத்து பாக். கப்பலை தாக்கிய 'இந்திய அல்கொய்தா தீவிரவாதிகள் !


இந்தியாவுக்கான அல்கொய்தா கிளையால் நடத்தப்பட்ட முதல் தாக்குதலே அவர்களுக்கு பலத்த அடியாக மாறியுள்ளது. சரியான திட்டமிடல் இன்றி நடத்தப்பட்ட அந்த தாக்குதலில் அல்கொய்தாவின் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன், 7 பேர் கைது செய்யப்பட்டனர். அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்காவால் கொல்லப்பட்ட பிறகு, அந்த அமைப்பின் தலைவரான அறிவித்துக் கொண்டுள்ளவர் அய்மன் அல் ஜவாகிரி. சமீபத்தில் இவர் பேசிய வீடியோ ஒன்றில், இந்தியாவில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் கிளை தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த பேச்சு அடங்கிய வீடியோவை ஆய்வு செய்து பார்த்த இந்திய உள்துறை அமைச்சகம், அது உண்மையான வீடியோதான் என்று கண்டறிந்தது. இதையடுத்து உளவுத்துறை உஷார்படுத்தப்பட்டு அல்கொய்தாவின் செயல்பாடுகள் தீவிர கண்காணிப்பின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திரமோடியும் அல்கொய்தா அச்சுறுத்தல் இந்தியாவுக்கு இருப்பதை ஒப்புக் கொண்டார். மேலும் அவர் பேசுகையில், அல்கொய்தாவின் தாளத்திற்கு இந்திய முஸ்லிம்கள் ஆட மாட்டார்கள். இந்திய முஸ்லிம்கள் இந்தியாவுக்காக உயிர் தியாகம் செய்ய தயாராக இருப்பார்கள் என்றார்.
இந்த சூழ்நிலையில், இந்தியாவுக்கான அல்கொய்தா அமைப்பின் தனது முதல் தாக்குதலை நிகழ்த்தியுள்ளது. ஆனால் தாக்குதல் நடந்தது இந்தியாவில் கிடையாது, பாகிஸ்தானின் கராச்சியில். கடந்த 11ம் தேதி அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்ப்பு சம்பவ நினைவு நாளின்போது, கராச்சி துறைமுகத்தில் அமெரிக்க விமானந்தாங்கி கப்பல் மீது தாக்குதல் நடத்தி அதை கடத்த அல்கொய்தா திட்டமிட்டிருந்தது. ஆனால் அல்கொய்தாவின் இந்திய கிளைக்கு போதிய தாக்குதல் அனுபவம் இல்லாத காரணத்தாலும், சரியான திட்டமிடல் இல்லாததாலும், தவறுதலாக, பாகிஸ்தான் நாட்டின் கடற்படை கப்பலை தாக்க முற்பட்டுள்ளனர். உடனடியாக எதிர் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் அல்கொய்தாவை சேர்ந்த மூன்று பேரை கொன்றதுடன், 7 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கான பொறுப்பை இந்திய துணை கண்டத்துக்கான அல்கொய்தா (AQIS) அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட அனைவருமே பாகிஸ்தான் கடற்படையின் முன்னாள் அதிகாரிகள் என்றும் அல்கொய்தா ஒரு குண்டை தூக்கி போட்டது. பாகிஸ்தான் ராணுவத்திலும் தீவிரவாதிகளுக்கு ஆதரவாளர்கள் இருப்பார்கள் என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment