Wednesday, September 17, 2014

சுவிஸ் கில்ஸ் 2014 தெரிவாகியுள்ள தமிழ் மாணவன் (படம் இணைப்பு)


சுவிட்சர்லாந்து சூரிச் நகரில் தகவல் தொழில் நுட்பத் துறையில் இறுதியாண்டில் கல்வி பயிலும் கீர்த்திகன் துரைரத்தினம் பேர்ண் மாநகரில் நடை பெறும் தேசிய மட்ட சுவிஸ் கில்ஸ் 2014 எனப்படும் துறை சார் திறனாளர்களை தெரிவு செய்யும் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

செப்டெம்பர் 17ம் திகதி தொடக்கம் 21ம் திகதி வரைக்கும் பேர்ண் எக்போ அரங்கில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்கள் நவம்பர் 13ம் திகதி தொடக்கம் 15ம் திகதி வரை லண்டன் பெர்மிங்ஹாம் அரங்கில் நடை பெறும் வேல்ட் கில்ஸ் 2014(World Skills) எனப்படும் சர்வதேச திறனாளர்களை தெரிவு செய்யும் போட்டியில் பங்கு பற்ற உள்ளனர்.

தகவல் தொழில் நுட்பத் துறையில் மாநில மட்டத்தில் வெற்றி பெற்றுள்ள கீர்த்திகன் தேசிய மட்டத்தில் தெரிவாகியுள்ள 30 போட்டியாளர்களில் ஒருவராவார்.இப் போட்டிக்கு சுவிட்சர்லாந்தில் தெரிவாகியுள்ள முதலாவது ஆசிய நாட்டவர் இவராவார்.

14வயதில் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு வந்த கீர்த்திகனுக்கு புதிய கலாச்சாரம், புதிய மொழி , புதிய சூழல் என்பன பெரும் சவாலாக இருந்த போதிலும் மூன்று ஆண்டுகள் பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்டு ஹிம்னாசியம் எனப்படும் மாநில கல்லூரிக்கு தெரிவானார்.இதன் பின் தகவல் நுட்பத் துறையை தெரிவு செய்த கீர்த்திகன் நான்காம் ஆண்டில் கற்று வரும் அதே வேளை, மிக்ரோஸ் நிறுவனத்தின் தகவல் தொழில் நுட்பத் துறையில் பயிலுனராகவும் பயிற்சி பெற்று வருகின்றார்.

புதிய மொழி, புதிய கலாச்சாரம் என பல சவால்களுடன் 14 வயது நிரம்பிய சிறுவனாக சுவிட்சர்லாந்தில் வாழ்க்கையை ஆரம்பித்த வேளையில், தனது முன்னேற்றத்திற்கு ஆசிரியர்களும் நண்பர்களும் உதவியதாக, கீர்த்திகன் சுவிட்சர்லாந்திலிருந்து வெளியாகும் மிக்ரோஸ் சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

14 வயதில் சுவிட்சர்லாந்தில் முதல் நாள் பாடசாலைக்குச் சென்ற வேளையில் மொழி புரியாமல் தன்னால் கல்வியைத் தொடர முடியுமா என்ற ஏக்கமும் வேதனையும் இருந்ததாகவும் அதனை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு கல்வியைத் தொடர்ந்ததால் இன்று எட்டு வருடங்களில் திறனாளர்களைத் தெரிவு செய்யும் தேசிய மட்டப் போட்டியில் பங்கு பற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக கீர்த்திகன் துரைரத்தினம் தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சியடையாத இலங்கையில் ஆரம்பக் கல்வியைக் கற்ற கீர்த்திகன், தனது வீட்டில் 9 வயதில் கணணியைப் பயன்படுத்த ஆரம்பித்த காலத்திலிருந்து கணனித் துறையில் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

சுவிஸ் கில்ஸ் எனப்படும் திறனாளர்களைத் தெரிவு செய்யும் போட்டியில் எழுபது துறையினைச் சார்ந்தவர்கள் போட்டியிடுகின்றனர்.தகவல் தொழில் நுட்பத் துறையில் 30 பேர் அனைத்து மாநிலங்களிலிருந்தும் தெரிவு செய்யப் பட்டுள்ளனர். 7 மணித்தியாலங்கள் நடைபெறும் இப் பரீட்சையில் தெரிவு செய்யப்படுபவர்கள்சர்வதேசப் போட்டிகளில் பங்கு பற்ற உள்ளனர்.

கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் அதிக புள்ளிகளைப் பெற முடிந்ததால் தகவல் தொழில் நுட்பத் துறையில் முன்னேற முடிந்ததாகவும் சுவிசில் தேசிய மட்டத்தில் பேர்ண் நகரில் நடைபெறும் திறனாளர்களுக்கான போட்டியில் பங்கு பற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் கீர்த்திகன் அச்சஞ்சிகைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
17 Sep 2014

http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1410943509&archive=&start_from=&ucat=1&

No comments:

Post a Comment