Tuesday, July 29, 2014

மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டி தகவல்கள் வெளியாகியுள்ளது: தாக்கியது ஏவுகணையே !


உக்ரைனில், ஏவுகணை தாக்கிதான், மலேசிய விமானம் வீழ்ந்துள்ளதாக அந்த விமானத்தின் கறுப்பு பெட்டியில் தகவல் அடங்கியுள்ளதாக ஐரோப்பிய விமான பாதுகாப்பு அதிகாரி உறுதி செய்துள்ளார். ஜூலை 17ம்தேதி உக்ரைன் மீது பறந்த மலேசிய விமானம் எம்எச்17 சுட்டு வீழ்த்தப்பட்டது. உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் மற்றும் உக்ரைன் அரசு படைகள் இதை தங்கள் தரப்பு செய்யவில்லை என்று மறுத்துவருகின்றன. இந்த தாக்குதலில் 298 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதிக உயரத்தில் பறந்த இந்த விமானத்தை 'பக்' வகை ஏவுகணையை கொண்டு தாக்கிதான் அழித்திருக்க முடியும் என்பது உலகமெங்கும் உள்ள பாதுகாப்பு பார்வையாளர்கள் கருத்தாக உள்ளது. இந்த வகை ஏவுகணைகளை ரஷ்யா கண்டுபிடித்தது என்றாலும்கூட, அதை பல நாடுகளுக்கும் ஏற்றுமதியும் செய்துள்ளது. எனவே தாக்குதல் நடத்தியது யார் என்பது மட்டுமின்றி, தாக்குதல் எதனால் நடந்தது என்பது குறித்தும் மர்மம் நிலவியது.
இதுகுறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத ஐரோப்பிய விமான பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அந்த நாட்டு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், "எம்எச்17 விமானம் ஏவுகணையால் தாக்கப்பட்டு வீழ்ந்துள்ளதாக கறுப்பு பெட்டியில் தகவல் உள்ளது. அந்த ஏவுகணை எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த வேலையை சரியாக செய்துள்ளது" என்று தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய விமான பயணிகள் பலரும் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார்கள். எனவே ஆஸ்திரேலியா தனது நாட்டு காவல்துறையினரை சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. அந்த நாட்டு பிரதமர் டோனி அப்போட் கூறுகையில், "சம்பவ இடத்திற்கு கூடுதலாக ஆஸ்திரேலிய போலீசார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு ரஷ்ய கிளர்ச்சியாளர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்" என்றார்.

No comments:

Post a Comment